பொருநை போற்றுதும்! - 101

பூலோகத்தைப் பார்வையிடுவதற்காகத் திருமகளோடு வந்தார் திருமால். இருவரும் அங்கும் இங்கும் சுற்றி வந்தனர். மலைச் சோலைகளிலும் மலர் வனங்களிலும் உலா வந்தனர்;  ஆற்றோரங்களிலும் அருநெல் வயல்களிலும் நடை பயின்றனர்
பொருநை போற்றுதும்! - 101


பெரிய மனிதர்களைக் கோட்டைப் பிள்ளைமார் சந்தித்த வகையையும் மா.ராசமாணிக்கனார் தெரிவிக்கிறார். இதில் வரலாற்றுக் குறிப்பொன்றும் கிட்டுகிறது: கோட்டைப் பிள்ளைமாருக்குக் கோட்டைக்கு வெளியில் விடுதிகள் இருக்கின்றன. அமைச்சர் முதலிய பெருமக்களையும் நண்பர்களையும் இங்குதான் வரவேற்கின்றனர். நமது மாநில ஆளுநராயிருந்த ஸ்ரீ பிரகாசா அவர்கள் கோட்டையினுள் விடப்படவில்லை. அப்பெரியார், "உலக முன்னேற்றத்தைக் கண்டு உங்கள் பழக்க வழக்கங்களைத் திருத்திக் கொள்ளவேண்டும்' என்று இப்பிள்ளைமார்க்கு அறிவுரை வழங்கினார். 

பாகிஸ்தானுக்கான முதல் இந்தியத் தூதுவராகச் செயல்பட்ட ஸ்ரீ பிரகாசா அவர்கள், 1952 முதல் 1956 வரை மதராஸ் மாநில ஆளுநராகப் பொறுப்பு வகித்தார். 1917-ல் நானூறாக இருந்த கோட்டைப் பிள்ளைமாரின் எண்ணிக்கை, 1960 வாக்கில், 55ஆக இருந்திருக்கிறது. படிப்படியாகக் குறைந்து, இவர்களில் சிலர் வெளியிலும் வெளியூரிலும் வாழத் தலைப்பட்டனர். பெண்களும்கூட அயலில் திருமணம் செய்து கொடுக்கப்பட்டனர். 

நவதிருப்பதித் தலங்கள்
ஊருக்கு மொத்தத்தில் ஸ்ரீ வைகுண்டம் என்றே பெயர் இருந்தாலும், ஊரின் வடபகுதிக்குக் கைலாயம் என்றும் (அருள்மிகு கைலாசநாதர் கோயிலால்), தென் பகுதிக்கு வைகுண்டம் என்றும் (அருள்மிகு வைகுண்டநாதர் கோயிலால்) தனிப் பெயர்கள் உள்ளன. 

ஸ்ரீ வைகுண்டத்தைத் தலைமையாகக் கொண்டு, நவதிருப்பதித் தலங்களை தரிசிப்பது வழக்கம். 

ஸ்ரீ வைகுண்டத்திலிருந்து வடகிழக்காக, சுமார் 1.5 கி.மீ தொலைவில், பொருநையாளின் வடகரையில் அமைந்திருக்கிறது திருவரகுணமங்கை. இப்போதைய காலத்தில் நத்தம் என்றே இவ்வூருக்குப் பெயர். அருள்மிகு வரகுணவல்லித் தாயார் உடனாய அருள்மிகு விஜயாசனப் பெருமாள் இங்கு எழுந்தருளியுள்ளார். 

திருவரகுணமங்கையிலுள்ள தீர்த்தங்களில் ஒன்று அகநாசத் தீர்த்தம். இதென்ன பெயர் என்கிறீர்களா? அகத்திலுள்ள வக்கிரங்களையும் தீமைகளையும்கூட நாசம் செய்துவிடும் வல்லமை படைத்தது என்பதால் இப்படியொரு பெயர். ஸ்ரீவைகுண்டத்தில் நின்ற திருக்கோலம் கொண்டிருக்கும் வைகுண்டநாதருக்குக் குடை பிடிக்கும் ஆதிசேஷன், வரகுணமங்கையில் அமர்ந்த திருக்கோல விஜயாசனருக்குக் குடை பிடிக்கிறான். 

அருள்மிகு விஜயாசனரைச் சேவித்துவிட்டு, இன்னும் சற்றே கிழக்காக நகர்ந்தால், அருள்மிகு காய்சினவேந்தன் என்னும் அருள்மிகு பூமிபாலர் சேவை சாதிக்கும் திருப்புளிங்குடியை அடைந்துவிடுகிறோம். பொருநை வடகரைத் திருத்தலம். 

வரகுணமங்கை என்னும் நத்தத்திற்குக் கிழக்கே, சுமார் 2 கி.மீ. தொலைவில் இருக்கும் திருப்புளிங்குடி. 

இத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானுக்கு பூமிபாலர் என்று திருநாமம். இதென்ன நாமம்? 

பூலோகத்தைப் பார்வையிடுவதற்காகத் திருமகளோடு வந்தார் திருமால். இருவரும் அங்கும் இங்கும் சுற்றி வந்தனர். மலைச் சோலைகளிலும் மலர் வனங்களிலும் உலா வந்தனர்;  ஆற்றோரங்களிலும் அருநெல் வயல்களிலும் நடை பயின்றனர். 

பூமிக்கு வந்தும்கூடத் தன்னை மறந்துவிட்டுத் திருமகளோடு திருமால் சுற்றுவதைக் கண்ட பூமிப்பிராட்டிக்குக் கோபம் வந்ததாம். தனது வளங்களையெல்லாம் சுருட்டி எடுத்துக்கொண்டு, பாதாளத்தில் சென்று மறைந்துகொண்டாளாம். 

பூமியில் வளம் குன்ற,   வயல்கள் வறண்டுவிட, பொய்கைகள் பொய்மை ஆக, தானதர்மங்களும் நியாயநெறிகளும் பாழ்படத் தொடங்கின. உடனே பாதாள லோகம் சென்றார் பரந்தாமன். பூமிப்பிராட்டியைச் சமாதானம் செய்து அழைத்து வந்தார். திருமகளும் நிலமகளும் தமக்குச் சமமானவர்களே என்று இருவரையும் அருகருகே அமர்த்திக் கொண்டார். 

பூமியைப் பாதுகாக்க முயற்சி எடுத்தவர் என்பதால் பூமிபாலர் என்றும் காசினி வேந்தன் என்றும் எம்பெருமானுக்குத் திருநாமங்கள். காசினிவேந்தன் (காசினி=பூமி, உலகம்) என்பதுவே, நம்மாழ்வார் வாக்கில் "காய்சின வேந்தன்' என்றானது. 

திருமகளும் நிலமகளும் நிகர் என்று சொன்ன தலம் என்பதாலோ, கருவறையிலுள்ள இருவரின் திருவுருவங்களும் பெரிய அளவில் உள்ளன. 

பூமியைக் காத்து சிருஷ்டியை ஓங்கச் செய்த தலம் என்பதாலோ, கிழக்கு நோக்கிய புஜங்க சயனத் திருக்கோலத்தில் உள்ள பூமிபாலரின் நாபியிலிருந்து செல்லும் தாமரைக் கொடி, சுவரில் உள்ள நான்முகனின் தாமரையோடு சென்று இணைந்துகொள்கிறது. புளிங்குடிவல்லி என்றொரு உற்சவத் தாயாரும் உள்ளார். இத்தலத்து உர்சவப் பெருமாளின் பெயர் என்ன தெரியுமா? "எம் இடர் களைவான்' } ஆஹா, எத்தனை எழிலார்ந்த திருநாமம்!

அருள்மிகு மலர்மங்கை நாச்சியார், அருள்மிகு பூமிவல்லி நாச்சியார் உடனாய அருள்மிகு பூமிபாலரைச் சேவித்துவிட்டு, அப்படியே கிழக்காகச் சென்றால், பெருங்குளம் தலத்தை அடைந்துவிடலாம். பெருங்குளம் பெருமாள் கோயில் என்னும் திருக்குளந்தை மாயக்கூத்தன் ஆலயத்தைக் காணலாம். 
(தொடரும்) 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com