மந்திரம் போற்றுதும்...  திருமந்திரம் போற்றுதும்... கொள்ளினும் நல்ல குருவினைக் கொள்ளுக! - 7

உபதேசம் பெறவும், வாழ்வியல் நெறிமுறைக்கு பயிற்சி பெறவும் ஒரு குருவை, ஆசிரியரைக் கொள்ள விரும்பினால், நல்ல குருவை, ஆசிரியரைத் தேடி குருவாகக் கொள்ளுங்கள்.
மந்திரம் போற்றுதும்...  திருமந்திரம் போற்றுதும்... கொள்ளினும் நல்ல குருவினைக் கொள்ளுக! - 7

கொள்ளினும் நல்ல குருவினைக் கொள்ளுக
உள்ள பொருள் உடல் ஆவி உடன் ஈக
எள்ளத் தனையும் இடைவிடாதே நின்று
தெள்ளி அறியச் சிவபதம் தானே ! 
(பாடல் : 1693).

பொருள் : உபதேசம் பெறவும், வாழ்வியல் நெறிமுறைக்கு பயிற்சி பெறவும் ஒரு குருவை, ஆசிரியரைக் கொள்ள விரும்பினால், நல்ல குருவை, ஆசிரியரைத் தேடி குருவாகக் கொள்ளுங்கள். அப்படித் தேடி அடைந்த நல்ல குருவிற்கு, உடல், பொருள், ஆவி அனைத்தையும் காணிக்கையாகத் தருக. எள்ளளவும் இடைவிடாமல், அவர் காட்டிய வழியிலே நின்றால், தானே தெளிந்து அறிந்து,  சிவ பேறு அடையலாம்.

குரு என்றால் அஞ்ஞான இருளை அகற்றி, மனதில் ஞான ஒளியை ஏற்படுத்துபவர் என்பது பொருள்.

"கொள்ளினும் நல்ல குருவைக் கொள்க' என அறிவுறுத்துகிறார் திருமூலர். ஏனெனில் குரு என்பவர் அப்பழுக்கற்றவராக, நல்லியல்புகளை மட்டுமே உடையவராக இருக்க வேண்டும். குரு என்ற போதிலும், "தான்' என்ற பெருமை, ஆணவம் கொண்டிருப்போரும் இருக்கலாம். கவனமாக, நல்ல குருவைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

நான் எவ்வளவு பெரியவன் தெரியுமா ? என்கிற ஆணவம் குருமார்களுக்கு மட்டுமல்ல... சாதாரண மனிதர்களுக்கும் கூடாது.

"நாதன் ஆணையால் அனைத்தும் நான் படைப்பேன்' என பிரம்மன் "நான்'  என்று சொன்னதால், இறைவனைத் தரிசிக்கும் முன், ஆணவம் இருக்கலாம், இறைவனைத் தரிசித்த பின்னும் "நான்' என்ற ஆணவம் இருக்கலாகாது என்றே முருகப் பெருமான் நான்முகனை சிறையில் அடைத்தார்.

அதே முருகப் பெருமான் சிவப் பரம்பொருளுக்கு பிரணவத்தை உபதேசித்த போது, ""உபதேசம் எனில் நான் குரு, நீர் சிஷ்யர், கை கட்டி வாய் புதைத்துக் கேளுங்கள்'' என்ற முருகன் ஆணையை அப்படியே ஏற்றான் ஈசன்.

"சிவனார் மனம் குளிர உபதேச மந்திரம் இரு செவி மீதிலும் பகர் செய் குருநாதா' என்கிறார் அருணகிரியார்.

சிவ பெருமான் ஆதி குரு ஆவார். தட்சிணாமூர்த்தியாக சனகாதி முனிவர்களுக்கு உபதேசம் செய்பவர். ஆனாலும், முருகனிடம் உபதேசம் பெற்றார்...

நான் மூத்தவன், நான் பெரியவன் என்ற எண்ணம் இல்லாமல் பணிவோடு இருப்பதே குருவிற்கான முதன்மைத் தகுதி. பெரிய புராணத்தில், ஒரு சம்பவம்... ஞானசம்பந்தப் பெருமான், திருப்பூந்துருத்திக்கு எழுந்தருளிய போது, அப்பர் சுவாமிகளை சந்திக்க விரும்பி, அப்பர் எங்கிருக்கிறார் என வினவ, அவரின் பல்லக்கைச் சுமந்து வந்த அப்பர் சுவாமிகள், "உங்கள் அடியேன் உங்கள் பல்லக்கைச் சுமக்கும் பேறு பெற்றேன்' என்று பதில் சொன்னார்.

அப்பர் சுவாமிகள் வயதில் மிகவும் முதியவர். பழுத்த பழம். சின்னஞ்சிறு குழந்தை ஞான சம்பந்தப் பெருமான். ஆனாலும், சம்பந்தரின் பல்லக்கை அப்பர் சுமந்தார் எனில்,  இறைவனுக்குத் தொண்டு செய்கிற குழந்தைக்கு மரியாதை தர வேண்டும் என்கிற பெருந்தன்மையே காரணம்.

இப்படி பணிவு மிக்க, கர்வம் அற்ற, பாகுபாடு பார்க்காத நல்ல குருவையே, குருவாகத் தேர்ந்தெடுக்க வேண்டும்... அப்படி ஒருவரை குருவாகத் தேர்ந்தெடுத்த பின், உடல் ,பொருள், ஆவி அனைத்தையும் அவருக்குத் தந்து விட வேண்டும்.

குருவின் பெருமையை மற்றொரு பாடலில், இப்படி சொல்கிறார் திருமூலர்.

"தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே'
-(பாடல்: 139)

குருநாதரின் திருஉருவைக் கண்டு வணங்குவது, குருவின் திருப்பெயரை தியானிப்பது, குருவின் வார்த்தைகளைக் கேட்டு நடப்பது, குருவின் திருவுருவை நெஞ்சில் நிறுத்தி, அவரையே சிந்திப்பது இவையே சீடனுக்குரிய கடமைகள். அவை ஞானத்தை விசாலமடையச் செய்பவை.

குருவின் திருமேனி கண்டவுடனேயே ஆட்கொள்ளப்பட்டவர் மாணிக்க வாசகர்.

"அன்றே எந்தன் ஆவியும், உடலும், உடைமை எல்லாமும்
குன்றே அனையாய் என்னை ஆட்கொண்ட போதே கொண்டிலையோ?'
எனப் பாடுகிறார் அவர்.

குருவின் திருநாமம் செப்பலுக்கு உதாரணம் அப்பூதியடிகள். அவர் திருநாவுக்கரசரை சந்தித்தது இல்லை. ஆனால், தன் வீட்டில் இருந்த அனைத்து பொருட்களுக்கும், தன் இரு மகன்களுக்கும், தான் அமைத்த தண்ணீர்ப் பந்தலுக்கும், தான் வளர்த்த மாடுகளுக்கும் திருநாவுக்கரசர் சுவாமிகளின் பெயரையே வைத்திருந்தார். 

குருவின் திருவார்த்தை கேட்டலுக்கு உதாரணமாக குரு ஞானசம்பந்தரை சொல்லலாம்.

அவரது குரு, கமலை ஞானப்பிரகாசர். திருவாரூர் கோயில் அர்த்த ஜாம பூஜை முடிந்து, இல்லம் திரும்பிய கமலை ஞானப் பிரகாசருக்கு, கை விளக்கு ஏந்தியபடி துணை வருகிறார் குரு ஞானசம்பந்தர். வீடு வந்ததும், "நிற்க' என்று சொல்லி விட்டு, கமலை ஞான பிரகாசர் வீட்டிற்குள் சென்று விட்டார்.குரு, "நிற்க' என்று தானே சொன்னார். செல்க என சொல்லவில்லையே என, குரு ஞானசம்பந்தர் விடிய, விடிய, கொட்டுகிற மழையில் நனைந்த படி நின்று கொண்டே இருந்தார். 

அவரின் குரு பக்தியால், மழையால், விளக்கு அணையாமலும், அவர் உடல் நனையாமலும் இருந்தது. கமலை ஞானபிரகாசரின் மனைவி, அதிகாலை கதவைத் திறக்கும் வரை ஞானசம்பந்தர் "நிற்க' என்ற குருவின் வார்த்தைக்கு கீழ்ப்படிந்து நின்றார்.

தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே என்பதற்கு எடுத்துக்காட்டு பெருமிழலைக் குறும்ப நாயனார்.

சுந்தரரை மனதால் நினைக்கும் கடமைப்பாடு கொண்டவர் என்பதை "மனத்தால் நினைக்கும் கடப்பாட்டில்' என எழுதுகிறார் சேக்கிழார். சுந்தரர் நாளை திருக்கயிலை செல்ல இருக்கிறார் என்பதைத் தன் உளக்குறிப்பால் உணர்ந்து அவருக்கு முன்பாக கயிலை சென்று சேர்ந்தார் அவர்.

இப்படி குரு பக்திக்கு உதாரணமாக எத்தனையோ மகான்கள் வாழ்ந்திருக்கிறார்கள்.

குருவின் மீது கொண்ட பக்தி, நம்மை காக்குமே தவிர, ஒரு போதும்  கை விடாது. ஆதிசங்கரர் கங்கையின் ஒரு கரையில் நின்று, மறுகரையில் இருந்த தன் சீடர் பத்ம பாதரிடம், தன் ஆடையைக் கொண்டு வந்து தருமாறு சொன்னார். பத்ம பாதர், கங்கையில் பெருக்கெடுத்து வரும் வெள்ளம் பற்றி யோசிக்கவே இல்லை. குருநாதரின் கட்டளையை ஏற்று, பொங்கிப் பாயும் கங்கையில் கால் வைத்தார். கங்கா தேவி, அவர் பாதத்தின் கீழ் தாமரை மலர்களை மலரச் செய்து, ஆற்றைக் கடக்க உதவினாள். பத்மம் தாங்கிய பாதங்களை உடையவர் என்பதாலேயே அவருக்கு "பத்ம பாதர்' என்று பெயர் ஏற்பட்டது.

எதனால் நமக்கு குரு அவசியம்... குரு இல்லாமல் வாழ முடியாதா என்ன...
ஒரு கதை படித்தேன்.

ஒரு காட்டில், சிங்கமும், மானும் நண்பர்களாக இருந்தன. என்ன அதிசயம்! இரண்டும் தங்கள் நட்பிற்காக ஒரு ஒப்பந்தம் போட்டிருந்தன. "நீ என் உணவு என்றாலும், ஒரு போதும் உன்னை சாப்பிட மாட்டேன்' என்றது சிங்கம். 

"உனக்கு என்ன ஆபத்து வந்தாலும் காப்பாற்றுவேன்' என சத்தியம் செய்தது மான். அந்த மானை குருவாக கொண்டிருந்தது ஒரு சின்னஞ்சிறு குட்டி மான். 

சிங்கத்தை நான்கு நாட்களாக காணவில்லை. மான் பல இடங்களில் தேடிப் பார்த்தும் கண்டு பிடிக்க முடியவில்லை. சிஷ்யனான மான் ஓடி வந்து, ""உங்கள் நண்பர் ஒரு வலையில் மாட்டிக் கொண்டிருக்கிறார். என்னால் அந்த வலையை அறுக்க  முடியவில்லை, உடனே வாருங்கள்'' என அழைத்தது.

ஒப்பந்தப்படி, தன் சிங்க நண்பனைக் காப்பாற்றச் சென்றது மான். சிங்கம் பலவீனமான குரலில், ""ஒரு வேடன் விரித்த வலையில் நான்கு நாட்களாக மாட்டிக் கொண்டு தவிக்கிறேன். இன்னும் சிறிது நேரத்தில் அவன் வந்து விடுவான், அதற்குள் என்னை காப்பாற்று...'' என்றது.

மான், தன் வாயால், வலையை, மெதுவாகக் கடித்து அறுக்க ஆரம்பித்தது. குட்டி மான் சொன்னது...""இந்த வலையை நீங்கள் வேகமாக ஒரு இழு இழுத்தால் போதும்... ஆனால் மெதுவாகக் கடிக்கிறீர்களே...வேகமாக இழுங்கள்...''
பெரிய மான், சிரிப்பை பதிலாகத் தந்து விட்டு மீண்டும் மிக மெதுவாக வலையைக் கடித்தது... சிங்கம், ""சீக்கிரமாகக் காப்பாற்று...'' எனக் கெஞ்சியது.

""ச்சே... என்ன  நண்பன் நீங்கள்? உங்கள் நண்பன் நான்கு நாட்களாக தண்ணீர் கூட இல்லாமல் தவிக்கிறான். வேகமாக வலையை அறுத்துக் காப்பாற்றாமல், இப்படி மெதுவாக வலையைக் கடிக்கிறீர்களே... இது நண்பனுக்கு செய்யும் துரோகம் இல்லையா... நான் உங்களைப் போல பெரிய ஆளாக இருந்திருந்தால், ஒரே கடியில் வலையை அறுத்து,சிங்கத்தைக் காப்பாற்றியிருப்பேன்...'' என்றது குட்டி மான்.

பெரிய மான் மீண்டும் சிரித்து விட்டு, இப்போதும் மெதுவாக வலையை அறுத்தது..

குட்டி மான் கோபத்தில், ""ஒரு நண்பனைக் காப்பாற்ற தாமதிக்கிற நீங்களா என் குரு...?'' என சலித்துக் கொண்டது.

பெரிய மான் இப்போதும் புன்னகைத்து விட்டு, வலையை மெதுவாகவே அறுத்துக் கொண்டிருந்தது. சற்று தூரத்தில் வேடன் வருவதை பார்த்ததும், வலையை வேகமாக ஒரு இழு இழுத்தது மான். வலை அறுந்து, சிங்கம் ஒரு புறமும், மான்கள் இன்னொரு பக்கமுமாக தப்பித்து ஓடின.

குட்டி மான், குருவைப் பார்த்து கோபமாக...

""வேடனைப் பார்த்தவுடன் வேகமாக வலையை அறுத்ததை முன்பே செய்திருக்கலாமே, எத்தனை முறை சொன்னேன், ஏன் வலையை மெதுவாக அறுத்தீர்கள்?'' என கோபப்பட்டது.

மான் இப்போதும் சிரித்த படி சொன்னது ""குழந்தாய்...வேகமாக ஒரே தடவை இழுத்து என்னால் வலையை அறுத்திருக்க முடியும். உள்ளே இருக்கும் சிங்கம், நான்கு நாட்களாகப் பட்டினி. "என்னை சாப்பிட மாட்டேன்' என்று மட்டுமே ஒப்பந்தம் போட்டிருக்கிறதே தவிர, உன்னோடு அல்ல. வெளியே வந்த வேகத்தில் உன்னைச் சாப்பிட்டிருக்கும். அதனால் தான் வேடன் வரும் வரை வலையை மெதுவாக அறுத்தேன்'' எனக் கூறி விட்டுப் புன்னகைத்தது.

நாம் எல்லோருமே அந்த குட்டி மான் போலத்தான்...அவசரமாக முடிவெடுக்கிறோம். நிதானிப்பதில்லை; தான் நினைப்பதே சரி என்ற பிடிவாதம்... இதெல்லாம் நமக்கே ஆபத்தாக வரும். அப்போது குருவானவரே நம்மை காப்பாற்ற வல்லவர். குரு பக்தியே திருவருளை நமக்கு கூட்டித் தரும். திருமூலர் சிவபெருமானையே குரு என்று குறிப்பிடுகிறார்.

குருவை... ஆதி குருவாகிய சிவனைப் பணிந்து, பெரும் பேறு பெறுவோம்.
(கட்டுரையாசிரியர்: இலக்கியச் சொற்பொழிவாளர்)
-தொடரும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com