நம்பி ஆரூரருக்காக நள்ளிரவில் தூது!

திருக்கயிலையிலிருந்த ஆலால சுந்தரர், சிவபெருமான் ஆணையால் தமிழகத்தில் நம்பியாரூராக அவதரித்து, திருவாரூரில் பரவையாரையும், பின்பு திருவொற்றியூரில் சங்கிலியாரையும் திருமணம் செய்துகொண்டார்.
நம்பி ஆரூரருக்காக நள்ளிரவில் தூது!


திருக்கயிலையிலிருந்த ஆலால சுந்தரர், சிவபெருமான் ஆணையால் தமிழகத்தில் நம்பியாரூராக அவதரித்து, திருவாரூரில் பரவையாரையும், பின்பு திருவொற்றியூரில் சங்கிலியாரையும் திருமணம் செய்துகொண்டார். இரு மங்கையரும் திருக்கயிலையில் பார்வதி தேவியின் சேடியராக இருந்தவர்கள்.

திருவாரூர் இறைவனைத் தரிசிக்கும் ஆவலால், செய்து கொடுத்த சபதத்தை மீறி, திருவொற்றியூர் விட்டுப் புறப்பட்ட அளவில் இரு கண் பார்வையையும் இழந்தார். இறைவரை வேண்டிக் காஞ்சிபுரத்தில் இடக்கண் பார்வையைப் பெற்றார். திருவாரூர் வந்து ஆரூர் பெருமானை வணங்கி வலக்கண் பார்வையையும் பெற்றார். திருக்கோயில் வலம் வந்து தேவாசிரியன் மண்டபத்தில் தங்கினார். அர்த்த ஜாமப் பூஜையும் முடிந்தது. பின்பு பரவையார் திருமாளிகைக்குச் செல்லப் புறப்பட்ட சமயம், சங்கிலியாரை மணந்த காரணத்தால், பரவையார் மிகவும் கோபத்தில் உள்ளதை அறிந்து, திருக்கோயில் மண்டபத்தில் தங்கினார். பரவையாரின் கோபத்தை போக்கிட வேண்டும் என இறைவனை வணங்கினார்.

அடியவரின் துன்பத்தைப் பொறுக்க மாட்டாத சிவபெருமான், திருமாலும் காணாத திருவடிகள் நிலம் பொருந்த எழுந்தருளி, சுந்தரர் துன்பமுறும் காரணத்தைக் கேட்டறிந்தார். 

"நீ உன் துன்பத்தை விடுவாயாக! நாம் உனக்காக ஒரு தூதனாகி இப்போதே பரவையாரிடம் போகின்றோம்' என்று கூறிப் புறப்பட்டார். இறைவர் முன் செல்ல,  பக்தர்கள். அடியார்கள்  அவரைத் தொடர்ந்து சென்றனர். செல்வத் திருவாரூரின் அந்த ஒரு தெருவே சிவலோகம் முழுவதும் காணுமாறு விளங்கியது.

"பரவையார் மாளிகையின் வாயிலில் அனைவரையும் வெளியே நிற்கப் பணிந்து, சிவவேதியரான முனிவர் கோலத்துடன், தனியே போய்ச் சேர்ந்து, அடைக்கப்பட்ட வாயில் கதவின் முன்னால் நின்று, பெண்ணே கதவைத் திறப்பாயாக!' என்று அழைத்தார்.

பாதி மதிவாழ் முடியாரைப் பயில்பூ சனையின்    
                                                                               பணிபுரிவார்
பாதி இரவில் இங்கணைந்த தென்னோ என்று பய 
                                                                                      மெய்திப்
பாதி உமையாள் திருவடிவிற் பரம ராவ தறியாதே
பாதி மதிவா ணுதலாரும் பதைத்து வந்து கடை 
                                                                                      திறந்தார்.

சந்திரனைச் சூடிய இறைவருக்கு, பூசை புரியும் முனிவர் நள்ளிரவில் இங்கு வந்த காரணம் என்ன? தமது பாதி உடம்பில் உமையம்மையாரை வைத்துள்ள இறைவரே ஆவார் என்றறியாமல், பாதி மதி போன்ற நெற்றியையுடைய பரவையாரும் பதைப் பதைப்புடன் வந்து வாயிலைத் திறந்தார். தாங்கள் இங்கு வரவேண்டிய காரணம் யாது? என வினவினார்.

"நம்பியாரூரர் இங்கு வரவேண்டும். அதுவே நாம் நினைத்து வந்தது" என்றார்.

“பங்குனித் திருவிழாவுக்குப் போய் வழக்கம்போல் மீண்டு வருபவர் போல், என்னை விட்டுப் பிரிந்து போய், திருவொற்றியூரில் சங்கிலியை மணந்தவருக்கு, இங்கு வருவதற்கு ஒரு தொடர்பும் இல்லை. நீங்கள் இந்த நடு இரவில் வந்து மேற்கொண்ட சொன்ன இக்காரியம் மிகவும் அழகிது! எனப் பரவையார் கூறினார். அதைக் கேட்டுப் பெருமானும், பெண்ணே! நம்பியாரூரன் செய்த குற்றங்களை மனத்துள் வைக்காது அவனை ஏற்றுக்கொள்ள வேண்டினேன்! நீ என் சொல்லை ஏற்காது மறுப்பது தக்கதாகாது! என அருள் செய்தார். உமது பெருமைக்கு இது தக்கதன்று. அவர் இங்கு வருவதற்கு நான் சம்மதிக்கமாட்டேன்! நீங்களும் செல்லுங்கள்! என்றார்.

நம்பியின் மனம் வெதும்பும் வேட்கையைக் காணும் திருவிளையாட்டை மேற்கொண்டு, நம்பியிடம் சென்று நடந்ததைக் கூறி, "நாமே வேண்டிக்கொள்ளவும் கேளாது மறுத்துவிட்டாள்!' என்றார்.

சுந்தரர் இறைவரிடம் அவர்களுடைய செயல்களையெல்லாம் கூறி, "பரவையிடத்தில் இன்றே நான் போய்ச் சேரும்படி செய்யாது போனால் என் உயிர் நீங்கும்' என்று சொல்லி அவரது திருவடியில் வீழ்ந்தார்.

தளர்ந்து வீழ்ந்த நம்பியைத் தம்பிரான் அருளால் நோக்கி, "நாம் மீண்டும் ஒருமுறை தூது போய் அப்பெண்ணை நீ இப்போதே சென்று அடையுமாறு செய்வோம்! நீ துன்பத்தை நீக்குவாயாக!' என்று உரைத்தார். சுந்தரரும் வருத்தம் நீங்கித் துதித்தார்.

பொன்புரி சடையார் பரவையாரின் மாளிகைக்குச் சென்றார். முன் உடன் செல்லாதவர்களும் இப்பொழுது சென்றனர். பரவையாரும் முனிவர் கோலத்துடன் வந்தவர் இறைவரே ஆவார்! அவர் முன்பு எதிர் மொழிந்தேன்! என வருந்தி வாயிலை நோக்கியவாறு இருந்தார்.

இறைவர் என்று பார்த்தவர் அறியுமாறு வெளிக்காணும் கோலத்துடனே பூத கணநாதர்கள், தேவர்கள், யோகர்கள், முனிவர்கள் சூழ பரவையாரின் மாளிகையில் வந்து புகுந்தார். பரவையார் மகிழ்ச்சியுடன் வரவேற்றார். "தோழர் என்ற முறையில் நம்பி ஆரூரர் அனுப்ப யாம் வந்தோம். முன்போல் மறுத்துவிடாதபடி, உன்னைப் பிரிந்து வருந்தும் நம்பி உன்னிடம் வரப்பெற வேண்டும்' என்று அருள் செய்தார்.

"ஒளி வளர் செய்ய பாதம் வருந்த ஓர் இரவு மாறாது அளிவரும் அன்பர்க்காக அங்கும் இங்கும் அலைவீராகி, எழுந்தருளுவீரானால், சம்மதிக்காமல் வேறு என்ன செய்வேன்?' என, இறைவரும் பெண்ணே! உன் உயர்ந்த குணத்துக்கு ஏற்றவாறு சொன்னாய்! என்று கூறி நம்பியிடம் வந்து, "பரவையினது சினத்தைத் தணியச் செய்தோம். இனிப்போய் அவளை அடைவாயாக!' என்று அருளி, தம் திருப் பூங்கோயிலுள் உலகம் வாழும்படி உள்ளே புகுந்தார். நம்பியும் பரவை மாளிகையை அடைந்தார். பரவையும் வணங்கி வரவேற்றார். சுந்தரமூர்த்தி நாயனார் ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தன்று, சிவபெருமான் அனுப்பிய யானை மேல் அமர்ந்து திருவஞ்சைக்களத்தினின்று திருக்கயிலை சென்றார். அன்றே சேரமான் பெருமாள் நாயனாரும், பெருமிழலைக் குறும்ப நாயனாரும் திருக்கயிலையை அடைந்தனர்.

இந்த ஆண்டு ஆடி மாதம் 13-ஆம் தேதி செவ்வாய்க் கிழமை (28-7-2020) அன்று சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜையன்று அவர்களை நினைவு கூர்ந்து அருள் பெறுவோமாக!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com