மந்திரம போற்றுதும்... திருமநதிரம் போற்றுதும்...

இறைவனை ஒரு பச்சிலை கொண்டு பூஜை செய்யுங்கள்... பசுவிற்கு ஒரு வாயளவு புல், உணவு கொடுங்கள்... சாப்பிடும் போது, ஒரே ஒரு கைப்பிடி எடுத்து வறியவர்க்கு சாப்பிடக் கொடுங்கள்...
மந்திரம போற்றுதும்... திருமநதிரம் போற்றுதும்...

யாவர்க்குமாம் இறைவற்கு
ஒரு பச்சிலை;
யாவர்க்குமாம் பசுவுக்கு
ஒரு வாயுறை;
யாவர்க்குமாம் உண்ணும்போது
ஒரு கைப்பிடி;
யாவர்க்குமாம் பிறர்க்கு
இன்னுரை தானே.

(திருமந்திரம் 252)

இறைவனை ஒரு பச்சிலை கொண்டு பூஜை செய்யுங்கள்... பசுவிற்கு ஒரு வாயளவு புல், உணவு கொடுங்கள்... சாப்பிடும் போது, ஒரே ஒரு கைப்பிடி எடுத்து வறியவர்க்கு சாப்பிடக் கொடுங்கள்... பிறரிடம் இனிமையான வார்த்தைகளையே பேசுங்கள்... இது எல்லோரும் செய்யக்கூடிய மிக எளிய வழிபாடு என்கிறார் திருமூலர்...

இதில் திருமூலர் உபதேசிக்கும் வழிபாட்டு முறையை யாரும் செய்யலாம்... "இந்த பச்சிலை கொண்டு வழிபடுங்கள்' என குறிப்பிட்டு சொன்னால், அது கிடைக்கவில்லை என்று காரணம் சொல்வோம் என தெரிந்தே பொதுவாக பச்சிலை என்று சொன்னார்... சிவனுக்கு வில்வம், பெருமாளுக்கு துளசி, அம்மனுக்கு வேப்பிலை... விநாயகருக்கு அருகம்புல் என பச்சிலை கொண்டு இறைவனை வழிபடலாம்... இந்த இலை தான் என்று இல்லை. தன் மீது சாக்கிய நாயனார் கல்லை எறிந்த போதும், மலராக எண்ணி மகிழ்ந்தவன் மகேசன். ஆகையால், ஏதேனும் ஒரு பச்சிலையால் அர்ச்சித்தாலும் மனமுவந்து ஏற்றுக் கொள்வான் சிவபெருமான். அதற்கு வாய்ப்பில்லை எனில், பசுவிற்கு ஒரு வாயுறை கொடுங்கள் என்கிறார்.

வாயுறை என்னும் பெயர்ச்சொல்லுக்கு உண்கை, உணவு, அருகம்புல், அன்னப்பிராசனம், கவளம், மருந்து, உறுதிமொழி, மகளிர் காதணி என எட்டு பொருள்களைக் குறிக்கிறது தமிழ் அகராதி.

பசுவிற்கு புல் தர வேண்டும் என்பதை "கோ க்ராஸம்' என வேதம் வலியுறுத்துகிறது. (ஆங்கிலத்தில் புல்லை ஞ்ழ்ஹள்ள் என சொல்வதற்கும் இதற்கும் தொடர்பு இருக்கிறது போலும்). பசுவிற்கு உணவிட வாய்ப்பில்லை எனில், பசியால் வாடுபவர்களுக்கு தலை வாழை இலையில் அறுசுவை உணவு படைக்க வேண்டும் என்பதெல்லாம் இல்லை... நீங்கள் சாப்பிடுகிற சாப்பாட்டில் ஒரு கைப்பிடி கொடுத்தாலே போதுமானது.

பசியை தீப்பணி என்கிறார் வள்ளுவர். அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள்வைப் புழி...

ஒருவனின் பசியைப் போக்குங்கள்... அதுவே உங்கள் செல்வத்தை சேர்த்து வைக்கும் இடம் என்கிறது வள்ளுவம்.

பசிப்பிணி என்னும் பாவி... அது தீர்த்தோர் இசைச்சொல் அளவைக்கு என் நா நிமிராது என பசிப்பிணி தீர்ப்பவர்களின் புகழைப் பாட என் நாவிற்கு வலிமை இல்லை என்று பசிப்பிணி தீர்ப்பவர்களை போற்றுகிறது மணிமேகலை காப்பியம்...

இவை மூன்றுமே செய்ய இயலாவிட்டாலும் பரவாயில்லை... எல்லோரிடமும் இனிமையான வார்த்தைகளையே பேசுங்கள்... அதுவே இறைவனை வழிபடும் முறை என வலியுறுத்துகிறார் திருமூலர்.

"யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே...'

இனிமையான வார்த்தைகளைப் பேசுவது, இறைவனை வழிபடுகிற முறை... இன்று சமூக வலை தளங்களில், தரமற்ற வார்த்தைகள் மிகச் சரளமாக பயன் படுத்தப் படுகிறது. பிரபலங்களின் திருமண செய்தியில் விவாகரத்து கிடைக்க வாழ்த்துகிறார்கள்.....

தலைவர்களின் இறப்பு செய்திகளில்... பிரபலங்களின்/சாதனையாளர்களின் பிறந்தநாள் வாழ்த்துகளில்.... எதுவும் விதி விலக்கல்ல... எப்போதும் எல்லோரையும் வசைபாடும் மனப்பாங்கு அதிகரித்திருக்கிறது.

நான், எப்போதுமே நிகழ்ச்சிகளுக்கு தலை நிறைய பூ வைப்பேன்... அன்றும் அப்படித்தான்...திருப்பூரில் நிகழ்ச்சி. திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்த ஒரு பூக்கடைக்குச் சென்றேன்.....

""அக்கா.....''
பூ கட்டிக் கொண்டிருந்தவர் என்னை நிமிர்ந்து பார்த்தார்...
""பூ எவ்ளோ'க்கா...''
""எவ்ளோ வேணும்...?''
""நாலு முழம்...''
எடுத்துக் கொடுத்தார்...
""எவ்ளோ'க்கா...''
""கொடுக்கிறதைக் கொடு...''
இதென்ன பதில்...

இன்றைக்குத் தான் இவர் கடைக்கே வருகிறேன்... காலை நேரம் இல்லை ஆகையால் முதல் வியாபாரமும் இல்லை... பின் ஏன் இப்படி சொல்கிறார்...

அவர் மீண்டும் பூ கட்டத் தொடங்கினார்...

நூறு ரூபாயைக் கொடுத்தேன்... வாங்கியவர் என்னை நிமிர்ந்து பார்க்கவே இல்லை...

காரில் ஏறியதும் ஒரே யோசனை... "ஒரு வேளை என்னை தொலைக்காட்சிகளில் பார்த்திருப்பாரோ... அல்லது வாட்ஸ் அப்-இல் பகிரப்படுகிற என் வீடியோக்களை பார்த்திருப்பாரோ... அப்படியானால் என்னிடம் சொல்லியிருப்பாரே...' என பல்வேறு யோசனை.

நிகழ்ச்சிக்கு வந்திருந்த யசோதா, ""நீங்க எப்பவும் தலை நிறையப் பூ வைக்கிறது எனக்கு ரொம்பப் பிடிக்கும்... இன்னிக்கு முகூர்த்த நாள்னு முழம் அறுபது ரூபாய். ஆனாலும் நீங்க தலை நிறைய பூ வச்சுட்டு வருவீங்கனு நினைச்சேன்... அதே மாதிரி வச்சுட்டு வந்திருக்கீங்க...''

"என்ன... முழம் அறுபது ரூபாயா?' என அதிர்ச்சியானேன்..! ஒரு இருபத்தைந்து ரூபாய் இருக்கலாம் என நினைத்துத்தான் நூறு ரூபாயைக் கொடுத்தேன்... ஏன் அவர் விலையை சொல்லவில்லை என குழப்பமாக இருந்தது.

கேட்டே தீருவது என அடுத்த நாள் அந்த கடைக்குச் சென்றேன்...

""அக்கா... என்னை தெரியுதா...''

எந்த உணர்வையும் அவர் வெளிக்காட்டவில்லை...

""நேத்து முழம் அறுபது ரூபாய் வித்திருக்கு... நீங்க என்ட்ட கொடுக்குறதைக் கொடு'னு சொன்னீங்க... நீங்க யார்'னே எனக்கு தெரியாது... அப்புறம் ஏன்க்கா அப்படி சொன்னீங்க...?''

பதில் தெரியாமல் நகரப் போவதில்லை என்கிற தொனியில் நின்று கொண்டிருந்தேன்... அவர் சொல்ல ஆரம்பித்தார்...

""எனக்கு ஆம்பள சரியில்ல... விட்டுட்டுப் போயிட்டான். புள்ள குட்டி ஏதும் இல்லை... கூட பொறந்தவங்க அஞ்சு பேர். யார் கூடயும் பேச்சு வார்த்தை இல்லை... அவங்கவங்க வாழ்க்கை அவங்களோட...''

சாதாரணமாக சொல்ல ஆரம்பித்தவர், இப்போது தழுதழுத்தபடி சொன்னார்...
""பஸ் ஸ்டாண்ட்'ல பூக்கடை வச்சு பொழக்கிறேன்... எல்லோரும் பூ எவ்ளோ... பூ எவ்ளோ'னு கேட்பாங்க... நீ ஒருத்தி தான்... "அக்கா... பூ எவ்ளோ?' னு கேட்ட . ரொம்ப வருஷம் கழிச்சு, என்னை ஒருத்தர் "அக்கா' னு கூப்பிட்டதும்... எனக்கு பணம் கேட்கத் தோணல... பணம் என்னத்துக்கு... அம்மா, அக்கா'னு கூப்பிட ஒரு ஆள் இல்லாம...

எனக்கு அவரை கட்டிக் கொண்டு அழ வேண்டும் போல் இருந்தது... நமது இந்தியக் கலாசாரத்தில்தான் பெரியவர்களை அக்கா, அண்ணா, அத்தை, மாமா என உறவு வைத்து அழைக்க கற்றுக் கொடுத்திருக்கிறார்கள்... எனக்கு அது சாதாரண ஒன்று தான். ஆன போதும்... ஒருவருக்கு அது மிகப்பெரிய விஷயமாக இருந்திருக்கிறது. "ரொம்ப வருஷம் கழிச்சு, என்னை அக்கா'னு ஒருத்தர் கூப்பிட்டது சந்தோஷம்' என்ற அவரின் நெகிழ்வான தழுதழுத்த குரலை இப்போதும் என்னால் கேட்கமுடிகிறது...

இனிய வார்த்தைகள், நிச்சயமாக பிறருக்கு மகிழ்வைத் தரும். நம்பிக்கையைத் தரும். அது வழிபாட்டு முறை என்றே திருமந்திரத்தில் வலியுறுத்தி சொல்லப் பட்டுள்ளது.
வீட்டில் வேலை செய்யும் நாற்பது வயது டிரைவரை, நம் குழந்தைகள் "டிரைவர்...' என்று அழைப்பதை... வாட்ச் மேன் வேலை பார்க்கும் ஐம்பது வயது பெரியவரை "வாட்ச்மேன்' என குழந்தைகள் அழைப்பதைப் பலமுறை பார்த்திருக்கிறேன்... "டிரைவர் அண்ணா', "டிரைவர் அங்கிள்', "வாட்ச்மேன் தாத்தா' என சொல்லிப் பழக்குங்கள்... அது அவர்கள் முகத்தில் நிரந்தர புன்னகையை உருவாக்கும்.

உடல் உறுப்புகளிலேயே எப்போதும் தண்ணீரில் இருக்கும் படி படைக்கப்பட்ட ஒரே உறுப்பு நாக்கு தான்... எப்போதும் ஈரமான வார்த்தைகளை மட்டுமே பேச வேண்டும் என்பதாலும்... ஒருவேளை அறியாமல் சுடு சொற்களை சொன்னாலும்... உடனே தண்ணீரில் அலசி விட வேண்டும் என்பதாலுமே... நாக்கு எப்போதுமே தண்ணீரில் இருக்கும்படி படைக்கப்பட்டுள்ளது.

இறைவனை வழிபடுபவர்கள் எப்போதும் இனிமையான வார்த்தைகளை, ஈரமான வார்த்தைகளை, மற்றவர்களுக்கு நம்பிக்கை தருகிற வார்த்தைகளை மட்டுமே பேச வேண்டும். அது தான் இறைவனை வழிபடுகிற முறை.

ஆம். இறைவனை பச்சிலையால் அர்ச்சிக்கா விட்டாலும், பசுவிற்கு வாயுறை வழங்காவிட்டாலும், உண்ணும் போது ஒரு கைப்பிடி கவளம் கொடுத்து பசியாற்றா விட்டாலும்... யாவருக்குமாம் பிறருக்கு இன்னுரை வழங்குவோம்... அதுவே திருமூலர் நமக்கு வலியுறுத்திச் சொல்லும் திருமந்திரம்!

தொடரும்...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com