
எல்லா சிவாலயங்களிலும் கருவறையின் தென்பகுதியில் எழுந்தருளி இருக்கும் தட்சிணாமூர்த்தி, கோவிந்தவாடி தலத்தில் தனிக்கோயில் கொண்டு மூலவராக வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார்.
திருமால் பக்தனான குபன் என்ற மன்னனுக்கும் ததீசி என்ற முனிவருக்குமிடையே ஒருமுறை பகை ஏற்பட்டது. தம்மைக் காக்குமாறு குபன் திருமாலிடம் வேண்டினான். உடனே, முனிவர் மீது சக்ராயுதத்தை ஏவினார்.
ஆனால், முனிவரின் உடம்பைத் தாக்க முடியாமல் சக்ராயுதம் கூர் மழுங்கியது. இதனால் திகைத்த திருமால், தேவர்களிடம் ஆலோசித்தார். அவர்கள், சிவபெருமானிடம் சக்ராயுதம் இருப்பதையும், அதனைப் பெறும் வழிமுறைகளையும் கூறினார்.
இதைத் தொடர்ந்து, தேவியருடன் பூலோகம் வந்தார் திருமால். அங்கு ஒரு தீர்த்தம் ஏற்படுத்தி, அதில் நீராடி, தேகம் முழுவதும் விபூதியிட்டு, ருத்ராட்சம் அணிந்து பாசுபத விரதம் புரிந்தார்.
திருமாலின் தவத்தை ஏற்று தரிசனம் தந்த சிவபெருமான், அவருக்குக் குருவாக வீற்றிருந்து உபதேசித்தார். இந்தப் புராணப் பெருமை மிக்க தலமே கோவிந்தவாடி.
இந்தப் புராண நிகழ்வின் அடிப்படையில் அமைந்ததுதான் இங்குள்ள அகிலாண்டேசுவரி சமேத கயிலாயநாதர் கோயில். இந்த ஷேத்திரம் சைவ-வைணவக் கோயிலாகும். எனினும், குரு கோயில் என்றே அழைக்கப்பட்டு வருகிறது.
காஞ்சிபுரம்-திருமால்பூர் (பள்ளூர்) ரயில் மார்க்கத்தில் பள்ளூர் அருகே இவ்வாலயம் அமைந்துள்ளது. கோவிந்தனாகிய திருமால் சிவனைத் துதித்துப் பாடல்கள் பாடி வழிபட்ட தலம் என்பதால் "கோவிந்தபாடி' என்றழைக்கப்பட்டது மருவி "கோவிந்தவாடி' என அழைக்கப்படுகிறது.
ஏறத்தாழ 1,000 ஆண்டுகள் பழைமையான இந்தக் கோயிலின் கர்ப்பக் கிருக வெளிச்சுவரில் பத்தடி உயரக் கருங்கல் அடுக்கில் (கல்காரம்) "கும்பஞ்சாரா' எனும் அழகு மிகுந்த வேலைப்பாடுகள் உள்ளன.
இங்கு ஒரே விமானத்தின்கீழ் தனித்தனி சந்நிதிகளில் தட்சிணாமூர்த்தியும், கயிலாயநாதரும் வீற்றிருப்பது வேறெங்கும் இல்லாத சிறப்பாகும்.
சிவனே தட்சிணாமூர்த்தியாக வீற்றிருந்து உபதேசித்ததால் இவர் நெற்றியில் மூன்று கண்கள் உள்ளன. பிரம்மாவின் மானசீகப் புதல்வர்களுக்கு சிவபெருமான் குருவாய் வீற்றிருந்து உபதேசித்த வடிவமே தட்சிணாமூர்த்தி. நவகிரகங்களுள் ஒருவரான வியாழ பகவானே இவரைப் பூஜித்ததால், தட்சிணாமூர்த்தியே ஆதி குருவாக விளங்குகிறார்.
சிவ தீட்சை பெற்றதால், இங்கு பெருமாளுக்கு சந்தனம், குங்குமம் கலந்து நாமம் இடுகின்றனர். "சந்தன குங்கும கோவிந்தன்' என அழைக்கப் பெறும் இந்தப் பெருமாள் தாயார்களுடன் மேற்கு நோக்கிய தனிச் சந்நிதியில் நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
நாகதேவதை தனது இரு கால்களையும் பாதி மடக்கிய நிலையில், தவக்கோலத்தில் கைகூப்பி வித்தியாசமாக வீற்றிருக்கிறார். இங்கு சுமங்கலிப் பூஜை செய்து அம்பாளை வழிபட்டால் திருமணம் கைகூடும்.
ராகு-கேது, நாக தோஷங்கள் அகல, அம்மையப்பரின் அருள்பெற, குருபலம் கூடிட, கோவிந்தன் அருள்பெற்ற கோவிந்தவாடிக்கு வாருங்கள். தகவலுக்கு : 76393 71264.