பொருநை போற்றுதும்! - 97
By DIN | Published On : 12th June 2020 07:45 PM | Last Updated : 12th June 2020 07:45 PM | அ+அ அ- |

கறுப்பு மான்களின் காப்பகம்
ஊரிலிருந்து சற்றே ஒதுக்குப்புறமாக உள்ள குன்றுப் பகுதியே இக்காப்பகத்தின் மையப் பகுதியாகும். "ஆன்டிலோப் செர்விகாப்ரா' என்னும் அறிவியல் பெயராலும், இண்டியன் ஆன்டிலோப் என்னும் பொதுப் பெயராலும் சுட்டப்படுகிற வெளிமான்கள், தெற்காசியாவையும், குறிப்பாக, இந்தியத் துணைக்கண்டப் பகுதிகளையும் தாயகமாகக் கொண்டவை. சில நூற்றாண்டுகளுக்கு முன்வரை, இந்தியா முழுவதும் இவை பரவலாகக் காணப்பட்டுள்ளன. தோள்பட்டைவரை மூன்றடி உயரத்துக்கு நிற்கக்கூடிய இவற்றின் ஆங்கிலப் பெயரான "பிளாக் பக்' என்பதற்கும் ஆண்மான்களே காரணம். ஆண்மான்களில், கழுத்தின் மேல்பகுதி, உடலின் முதுகுப் பகுதி மற்றும் பக்கவாட்டுப் பகுதிகள், கால்களின் வெளிப்பரப்புகள் ஆகியவை, கறுப்பு அல்லது கருஞ்சாம்பல் நிறமாக உள்ளன. கழுத்து மற்றும் உடலின் கீழ்ப்பகுதிகள் வெள்ளையாக இருக்கும். முகத்திலும் கறுப்புக் கீற்றுகள் காணப்படும். கண்களைச் சுற்றி மட்டும் வெள்ளையாக இருக்கும். நீண்டு, வளைந்த, வட்ட வட்டமான அடையாளங்கள் கொண்ட கொம்புகளும் ஆண்மான்களுக்கு உண்டு (வெகு அரிதாகப் பெண்மான்களுக்கும் கொம்புகள் இருக்கக்கூடும்; ஆனால், அவை சிறிதாகவும் குட்டையாகவும் இருக்கும்). பெண்மான்களும் குட்டிகளும் பழுப்பு அல்லது கரும்பழுப்பு நிறத்தில் காணப்பட்டாலும், ஆண்மான்களின் கறுப்பு நிறமே இந்த இனத்திற்குப் பெயர் சூட்டிவிட்டது. மூன்று வயதாகும்வரை, ஆண்மான்களின் தோலும், பெண்மான்களின் தோல் வண்ணத்திலேயே இருக்கும்.
பகல் பொழுதில் சுறுசுறுப்பாகத் திரிகிற வெளிமான்கள், பண்டைக் காலத்தில் இந்தியத் துணைக்கண்டம் முழுவதிலும் நிறைய எண்ணிக்கையில் காணப்பட்டுள்ளன. வடமொழியில் கிருஷ்ண மிருகம் (கிருஷ்ண=கறுப்பு, மிருகம்=மான்) என்றும், பிற இந்திய மொழிகளில் காலா ஹிரண், கிருஷ்ணஸார், கிருஷ்ண ஜிங்கா, கல்வித், கடியல் போன்ற பெயர்களாலும் வழங்கப்பட்டுள்ள இவைதாம், தமிழிலக்கியம் காட்டுகிற இரலைமான்கள். 12-15 ஆண்டுகள் ஆயுள் கொண்ட இவற்றுக்குப் புல்லே பிரதான உணவு. புல்வெளிகளில், ஆங்காங்கே சிறு சிறு புதர்கள் இருந்தால் இவற்றுக்கு ஏக சந்தோஷம். அன்றாடம் நீர் பருகக்கூடியவை; எனவே, ஆற்றுப்பகுதிகளில் அதிகம் வாழ்ந்தன.
18 மற்றும் 19-ஆம் நூற்றாண்டுகளில், சிறுத்தைகளைக் கொண்டு ஆங்கிலேயர் இவற்றை வேட்டையாடியதாகத் தெரிகிறது. 20-ஆம் நூற்றாண்டில் இவை மிகவும் அருகிப்போக, வெளிமான் இனத்தைப் பாதுகாப்பு உயிரினமாக இந்திய அரசு அறிவித்துள்ளது.
கிருஷ்ணன் தேரிழுக்கும் கிருஷ்ண மான் வெளிமான்கள் வேட்டையாடப்பட்டதாக முகலாய ஓவியங்கள் சில காட்டினாலும், இந்திய மற்றும் நேபாள கிராமியர்களுக்கு இவை கடவுள் வடிவங்கள். கிருஷ்ண மிருகமான வெளிமான், கிருஷ்ண பகவானின் தேரை இழுத்து வருவதாக ஐதீகம். வாயுதேவனும் சந்திரதேவனும் வெளிமானைத் தங்களின் வாகனமாகப் பயன்படுத்துவதுண்டு.
நம்முடைய நாட்டின் பல பகுதிகளில் வெளிமான்கள் விளையாடித் திரிந்தன என்பதற்கு உபநிஷதங்களும் ஸ்மிருதிகளும் சாட்சி சொல்கின்றன. மனு ஸ்மிருதி போலவே யாக்ஞவால்கிய ஸ்மிருதி என்றுண்டு. நீதி நியாயங்களையும் நடந்து கொள்ளவேண்டிய வரைமுறைகளையும் பற்றிக் கூறுமாறு யாக்ஞவால்கியரிடம் முனிவர்கள் பலர் வேண்டுகின்றனர். அவர்கள் அவ்வாறு கேட்டவுடன், ஒருகணம் தியானித்த மிதிலைவாசியான யாக்ஞவால்கியர், வெளிமான்கள் சுற்றித் திரியும் பிரதேசத்தின் தர்ம நெறிகளைத் தெரிந்து கொள்ளுங்கள் என்று கூறத் தொடங்கினாராம்.
மிதிலாஸ்த: ஸ யோகீந்தர: க்ஷணம் த்யாத்வா அப்ரவீன் முனீன்யஸ்மின் தேஷே மிருக: கிருஷ்ணஸ் தஸ்மின் தர்மாந்நிவோதத-யாக்ஞவால்கிய ஸ்மிருதியின் ஆசார அத்தியாயத்தின் இரண்டாவது ஸ்லோகம் இப்படிச் சொல்கிறது. தக்காண பீடபூமிப் பகுதியில் இவ்வகைமான்கள் பெருமளவில் உலவின. வாலிக்கு அச்சப்பட்டு ஒளிந்துவாழ்ந்த சுக்ரீவன், ருஷ்யமுக பர்வதம் என்னும் மலையில் இருந்ததாக வால்மீகி முனிவர் மொழிகிறார். ருஷ்ய முகம் என்றால் மான் முகம் என்று பொருள் கொள்ளலாம்; மான் முகம் போன்ற மலை. இதனை "இரலை மலை' என்றழைக்கிறார் கவிச்சக்கரவர்த்தி கம்பர். ஆந்திர பிரதேசத்தின் மாநில விலங்கு, வெளிமான் ஆகும். வடமேற்கு இந்தியாவின் சமஸ்தானங்கள் பல, தங்களின் அலுவல்பூர்வ முத்திரைகளில், வெளிமான் படங்களைச் சேர்த்திருந்தன. ராஜஸ்தான் மாநில கிராமவாசிகள், குழந்தைகளுக்குப் பாலூட்டுவதுபோலவே, வெளிமான் குட்டிகளுக்கும் பாலூட்டுவார்கள்.
முனிவர்களும் தவசிகளும் மான்தோலில் அமர்வார்கள் என்று நமக்குத் தெரியும். இந்த மான்தோலைக் கிருஷ்ணாஜினம் (கிருஷ்ண=மான், அஜினம்=தோல்) என்பார்கள். வெளிமானின் கறுப்புத்தோல் இவ்வாறு தவசீலர்களால் பயன்படுத்தப்பட்டது. ஆண் வெளிமான்கள், தங்களின் முதுகுப்புறக் கறுப்புத் தோலை, வளர்ச்சியின் காரணமாக உதறியிருக்கும். உடலின் வளர்ச்சி அதிகப்பட்டு அளவு பெருகும்போது, முதுகுப்புறத் தோல் கழன்றுவிழும். புதிய தோல் கறுப்பு நிறம் அடைகிறவரை, இந்த மான்கள், பழுப்பு நிறமாகக் காணப்படும். இவ்வாறு கழன்றுவிழுந்த தோலையெடுத்துத் தவசிகள் பயன்படுத்தினார்கள். வெளிமான் காப்பகங்கள் சிலவற்றில் இப்போதும் இவ்வாறு கழன்றுவிழும் தோலைக் காணலாம்.
(தொடரும்)