தீமையை அழித்து நன்மை பயக்கும் ஸ்ரீகனக துர்க்கையம்மன்

தீமையை அழித்து நன்மை பயக்கும் காவல் தெய்வமாக பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார் விஜயவாடா ஸ்ரீகனக துர்க்கையம்மன். ஆந்திர பிரதேசத்தின் பெரிய நகரான விஜயவாடாவில் பழமை வாய்ந்த கனக துர்க்கையம்மன்
தீமையை அழித்து நன்மை பயக்கும் ஸ்ரீகனக துர்க்கையம்மன்

தீமையை அழித்து நன்மை பயக்கும் காவல் தெய்வமாக பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார் விஜயவாடா ஸ்ரீகனக துர்க்கையம்மன். ஆந்திர பிரதேசத்தின் பெரிய நகரான விஜயவாடாவில் பழமை வாய்ந்த கனக துர்க்கையம்மன் கோயில் அமைந்துள்ளது. இத்தலம் இந்தியாவின் 51 சக்தி பீடங்களில் ஒன்றாகவும் பிரசித்தி பெற்றதாகும்.

சக்தி, செல்வம், நன்மையை பக்தர்களுக்கு அள்ளித் தரும் தலமாகத் திகழும் இக்கோயிலில் கனக துர்க்கை, மல்லேஸ்வர சுவாமி (சுயம்பு) ஆகியோர் அருள் பாலிக்கின்றனர்.

வழக்கமாக சிவபெருமானின் இடது புறத்தில்தான் அம்மன் அமர்ந்திருப்பது வழக்கம். ஆனால் இங்கு வலப்புறத்தில் கனக துர்க்கை உள்ளார். இது அம்மனின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.

வற்றதாக ஜீவ நதியாகத் திகழும் கிருஷ்ணா நதிக் கரையில் இந்திர கிளாத்ரி மலையில் எழுந்தருளியுள்ளார் கனகதுர்க்கையம்மன்.

தெய்வங்களை வழிபட்டு பல்வேறு சக்திகளை பெற்ற அரக்கர்கள், பூமியில் முனிவர்களையும், பக்தர்களையும் துன்புறுத்தி வந்தனர். அசுரர்களை வதம் செய்ய பார்வதி தேவி பல்வேறு வடிவங்களில் பூமியில் அவதரித்தார். சும்பு மற்றும் நிசாம்புவை வதம் செய்ய கெளசிகியாகவும், மகிஷாசூரனை வதம் செய்ய மகிஷாசூரமர்த்தினியாகவும், துர்மூகாசூரனை வதம் செய்ய துர்க்கையாகவும் அவதாரம் எடுத்தார்.

கிளா என்ற முனிவருக்கு தொடர்ந்து அரக்கனான மகிஷாசூரன் இடையூறு கொடுத்து வந்ததால், அம்மனிடம் முறையிட்டார் முனிவர் கிளா. இதற்காகக் கடும் தவம் புரிந்தார்.

இதையடுத்து,  வெவ்வேறு வகை ஆயுதங்களுடன் 8 கைகளுடன் எழுந்தருளிய கனக துர்க்கை, சிங்கத்தின் மீது அமர்ந்து, மகிஷாசூரனை வதம் செய்தார். பின்னர் இம்மலையில் தங்கியதால், கிளாத்ரி மலை துர்க்கையின் இருப்பிடமாக மாறியது. இந்திரன் இத்தலத்தில் அம்மனை வழிபட்டதால் "இந்திர கிளாத்ரி' என்ற பெயரும் ஏற்பட்டது.

சுயம்புவாக எழுந்தருளியுள்ள மல்லேஸ்வர சுவாமி மற்றொரு மலையில் ஜோதிர்லிங்கமாக விளங்குகிறார். மும்மூர்த்திகளில் ஒருவரான பிரம்ம தேவன், மல்லிகை மலர்களைக் கொண்டு வழிபட்டதால், "மல்லேஸ்வர ஸ்வாமி' என்ற பெயர் கிட்டியது.

ஆதிசங்கர் இத்தலத்தில் அம்மனுக்கு முன்பு ஸ்ரீசக்கரத்தை பிரதிஷ்டை செய்தார். மேலும் மல்லேஸ்வர சுவாமி ஜோதிர்லிங்கம் சிதிலமடைந்த நிலையில் இருப்பதைக் கண்டு, கோயிலின் வடக்குப் புறத்தில் சுவாமியை மறுபிரதிஷ்டை செய்தார். தெற்குப் புறத்தில் கனகதுர்க்கை அம்மன் ஆட்சி புரிவதால், இத்தலம் அவரது பெயரிலேயே அழைக்கப்பட்டு வருகிறது.

அமைதியான புன்னகை மற்றும் இன்முகத்துடன் அம்மன் காணப்படுவதால், பக்தர்கள் வேண்டுதல்கள் அனைத்தும் தடையின்றி நிறைவேறி விடுகிறது.

உலகிலேயே இத்தலத்தில் தான் மூலவரான அம்மன் சரஸ்வதி, மகாலட்சுமி, பால திரிபுரசுந்தரி, ராஜராஜேஸ்வரி, மகிஷாசூர மர்த்தினி, துர்கா தேவி, அன்னப்பூர்ணா தேவி, காயத்ரி, லலிதா திரிபுரசுந்தரி அலங்காரங்களில் காட்சி தருகிறார்.

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா வந்த சீனப்பயணி யுவான் சுவாங், தனது பயணக் குறிப்புகளில் விஜயவாடா கனகதுர்க்கையம்மன் கோயில் குறித்து பதிவு செய்துள்ளார். கோயில் அருகே வரலாற்றை விளக்கும் பல்வேறு கல்வெட்டுகள் இருந்ததாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

இத்தலத்தின் பிரதான உற்சவம் நவராத்திரி உற்சவமாகும். அன்ன வடிவத்தில் அமைக்கப்பட்ட தெப்பத்தில் அம்மன் எழுந்தருளி, கிருஷ்ணா நதியில் தெப்போற்சவம் நடைபெறுவது சிறப்பாகும். விழா நடைபெறும் 10 நாள்களும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்படுகின்றன.

கனகதுர்க்கை அம்மன் கோயில் உள்ள மலைக்கு வாகனங்கள் மூலம் செல்ல பாதை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் நடந்து செல்ல படிக்கட்டுகளும் உள்ளன.

நகரின் ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையத்தில் இருந்து கோயிலுக்கு 10 நிமிடங்களில் சென்று விடலாம். மேலும் விமான நிலையத்தில் இருந்து 20 நிமிடங்களில் செல்ல முடியும்.

வயதானவர்கள், இயலாதவர்கள் செல்ல பேட்டரி வாகனங்கள் இயக்கப்படுகின்றன. சிறப்பு தரிசனக் கட்டணமாக ரூ.100, ரூ.300 வசூலிக்கப்படுகின்றன.

ரூ.300 தரிசனத்துக்கு செல்வோருக்கு தனியாக லட்டு பிரசாதமும் தரப்படுகிறது. திறப்பு நேரம்: அதிகாலை 4 மணி முதல் இரவு 9.00 மணி வரை கோயில் நடை திறந்திருக்கும்.

தொடர்புக்கு : 0866-2423600,2423500

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com