தொல்லை நீக்கும் தில்லை அம்மன்

திருவண்ணாமலையை நினைத்தால் முக்தி, காசியில் இறந்தால் முக்தி, திருவாரூரில் பிறந்தால் முக்தி, சிதம்பரத்தில் வழிபட்டால் முக்தி என்பது ஆன்றோர் கூற்று.
தொல்லை நீக்கும் தில்லை அம்மன்


திருவண்ணாமலையை நினைத்தால் முக்தி, காசியில் இறந்தால் முக்தி, திருவாரூரில் பிறந்தால் முக்தி, சிதம்பரத்தில் வழிபட்டால் முக்தி என்பது ஆன்றோர் கூற்று.

சிதம்பரத்துக்கு "பெரும்பற்றப்புலியூர்' என்றும், புலிக்கால் முனிவராகிய வியாக்கிரபாதர் பூஜை செய்ததால் "புலியூர்' என்றும் பெயர்கள் உண்டு. இங்கு இறைவன் அருள்பாலிக்கும் திருக் கோயிலுக்குச் சிற்றம்பலம் என்று பெயர். “சித் - ஞானம்”, “அம்பரம் - ஆகாசம்”. சித் + அம்பரம் - சிதம்பரம். சிற்றம்பலம் காலப்போக்கில் சிதம்பரமாகி, காலப்போக்கில் அதுவே ஊரின் பெயராகவும் மாறிவிட்டது. 

நடராஜப் பெருமானுக்கு அருகிலேயே திருக்கோயில் கொண்டு விளங்குகிறார் ஸ்ரீ கோவிந்த ராஜப் பெருமாள். 

சிதம்பரம் நடராஜர் திருக் கோயிலுக்கு அருகிலேயே திருக் கோயில் கொண்டு அருள் புரிகிறாள் அன்னை தில்லை நாயகி என்று போற்றப்படும் தில்லை அம்மன். ஏன் அம்பிகை தனியாகக் கோயில் கொண்டாள்?

ஒருமுறை ஈசன் அம்பிகையிடம் உரையாடிக் கொண்டிருக்கும் போது, "சிவமும் சக்தியும் ஒன்றே' என்று ஈசன் கூற, அதனை மறுத்து, அம்பிகை "சக்தியே சக்திமிக்கவள்' என்று வலியுறுத்த, இதனால் கோபம் கொண்ட ஈசன் அம்பிகையைக் காளியாக மாற சபித்து விடுகிறார். இதைச் சற்றும் எதிர்பாராத அம்பிகை தன் தவறுக்கு வருந்தி ஈசனிடம் சாப விமோசனம் கேட்க,  “"கோபத்தில் தந்த சாபமாக இருந்தாலும், அதுவும் நல்லதற்கே! தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் அசுரர்களால் இடர் ஏற்பட இருக்கிறது. எனவே நீ கோபாவேசத்துடன் காளியாக இருந்து, அசுரர்களிடமிருந்து முனிவர்களை காப்பாயாக'”என்று சிவன் கூறினார். ஈசன் கூறியது போலவே அசுரர்களால் பல இன்னல்களுக்கு ஆளான தேவர்களுக்கும் முனிவர்களும் காளிதேவியைச் சரணடைந்து தங்களைக் காப்பாற்ற வேண்டினார்கள். காளிதேவியும் அசுரர்களை வதம் செய்து முனிவர்களையும், தேவர்களையும் காத்தருளினாள். 

மீண்டும் சிவனிடம் சேர, ஈசனை நோக்கி கடும் தவம் மேற்கொண்டாள். ஆனால் ஈசன் காட்சி தராததால் கடும் கோபம் கொண்டாள். அவளுடைய கோபத்தை மக்களால் தாங்க முடியவில்லை. அதுமட்டுமல்லாமல் ஈசனை நடனப் போட்டிக்கும் அழைத்தாள். ஆடல் வல்லானுடன் போட்டி என்றதும் தேவர் களும் முனிவர்களும் மனம் பதறினார்கள். தான் நடனத்தில் தோற்றால் தில்லையின் எல்லைக்கே சென்று விடுவதாக சபதம் செய்தாள் அம்பிகை. ஈசனுக்கும் காளிக்கும் நடந்த போட்டி, உச்சகட்டத்தை அடைய, சிவன் தன் காதில் அணிந்திருந்த குண்டலத்தை கீழே விழச் செய்து, அந்த குண்டலத்தை தன் கால் விரலாலேயே எடுத்து காதில் மாட்டினார். இதற்கு ஊர்த்வ தாண்டவம் என்று பெயர். ஆனால் பெண்ணான காளி தேவியால் அவ்வாறு செய்ய முடியாமல் நாணம் தடுத்தது. அதனால் தான் தோல்வியடைந்ததாக ஒப்புக் கொண்டாள். என்றாலும் தந்திரமாக ஈசன் வெற்றி பெற்றதாகக் கருதிய காளி மேலும் சினமுற்றாள். எனினும் தன் சபதத்தின்படி அவள் கோப சக்தியாக, தில்லை எல்லைக்குச் சென்று, "தில்லைக்காளி' என்ற பெயரில் அமர்ந்தாள். இவளே இங்கு "எல்லைக்காளி' யாகவும் விளங்குகிறாள். ஈசன் அம்பிகையிடம் தன்னை வணங்குபவர்கள் உன்னையும் வணங்குவார்கள். அதனால் அவள் பெருமை உயரும் என்று அருள் செய்தார்.

இந்த அம்பிகை தில்லைக் காளி சந்நிதிக்கு அருகிலேயே மேற்கு நோக்கி சாந்த சொரூபிணியாக காட்சியளிக்கிறாள். தினமும் எல்லா அபிஷேகங்களும் செய்யப்பட்டு, விதம் விதமான அலங்காரங்களில் அருள் புரிகிறாள்.  

இத்திருக்கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் வைகாசித் திருவிழா 13 நாள்கள் நடைபெறுவது வழக்கம். இத் திருவிழா காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கும். தினமும் இரு வேளைகளிலும் அபிஷேக அலங்காரங்களும் திருவீதியுலாவும் நடைபெறும். 

விழாவின் 9-வது நாள்  தேரோட்ட திருவிழா நடைபெறும். இதையடுத்து, சிவப்பிரியை குளத்தில் தீர்த்தவாரி உற்சவம், காப்பு களைதல், மஞ்சள் நீராட்டு விழா, முத்துப்பல்லாக்கு உற்சவமும், தெப்ப உற்சவம் மற்றும் திருஊஞ்சல் நிகழ்ச்சியுடன் வைகாசிப் திருவிழா நிறைவடையும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com