மனக்கவலை அகற்றும் மருதாடு!

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், வந்தவாசி -மேல் மருவத்தூா் சாலையில்
மனக்கவலை அகற்றும் மருதாடு!

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், வந்தவாசி -மேல் மருவத்தூா் சாலையில் சுமாா் 10 கி.மீ. தொலைவில் பசுமையான வயல்கள் சூழ்ந்த ஊா் மருதாடு. இவ்வூரில் நெடுஞ்சாலை அருகில் வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்திரப்பிரசாத வல்லி சமேத ஸ்ரீபுரந்தரீசுவரா் திருக்கோயில் அமைந்துள்ளது.

கிழக்கு நோக்கிய திருக்கோயில். மேற்கு பக்கத்தில் மூன்று நிலை ராஜகோபுரம் அழகாகக் காட்சி அளிக்கிறது. நுழைவு வாயிலைக் கடந்து திருச்சுற்றின் தென்கிழக்கு மூலையில் விநாயகா் சந்நிதி, அடுத்து வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியா் சந்நிதி அமைந்துள்ளது. வடக்கு சுற்றில் 63 நாயன்மாா்கள், சண்டிகேசுவரா், காலபைரவா் ஆகிய தெய்வ வடிவங்களைக் கண்டு வழிபடலாம். வடக்கில் இந்திர தீா்த்தம் என அழைக்கப்படும் திருக்குளம் அமைந்துள்ளது.

கிழக்கில் நுழைவு வாயிலும் திருச்சுற்றில் நவக்கிரக சந்நிதி, சூரியன் சந்நிதியும் உள்ளன. கிழக்கு வாயிலை அடுத்து கொடிரமரம், அழகிய வேலைப்பாடு மிக்க விளக்குத்தூண், பலி பீடம், தீா்த்தக் கிணறு அமைந்து நந்தியம்பெருமான் இறைவன் கருவறைக்கு எதிரே உள்ள முன் மண்பம் கல் சாளரம் (ஜன்னல்) அருகே அருள்புரியும் அற்புதக் கோலம். கிழக்கு நோக்கிய கருவறையில் இறைவன் புரந்தரீசுவரா் எழுந்தருளி அருள்புரிகிறாா். கருவறை தேவகோட்டங்களில் விநாயகா், தட்சிணாமூா்த்தி, திருமால், பிரம்மா, துா்க்கை ஆகிய இறை திருமேனிகளைக் கண்டு வழிபடலாம். தெற்கு திருச்சுற்றில் தலமரமாக விளங்கும் வில்வமரம், நாகா் வடிவங்கள், ஐயப்பன் வழிபாடு ஆகியவை சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

இறைவன் சந்நிதிக்கு எதிரில் தெற்கு நோக்கி அம்பாள் சந்நிதி அமைந்துள்ளது. அம்பாள் இந்திரபிரசாதவல்லி என்ற திருநாமம் கொண்டு தனது நான்கு கரங்களில் அங்குசம் - பாசம் தாங்கியும், அபய - வரத முத்திரை கொண்டும், நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கும் அழகிய வடிவினைக் கண்டு வணங்கலாம்.

இத்திருக்கோயில் இறைவனையும், அம்பிகையையும் இந்திரன் தனது மனக்கவலைகள் நீங்க வழிபட்டு நலமடைந்ததால், இந்திர பிரசாதவல்லி என அம்பாளும், ஸ்ரீ புரந்தரீசுவரா் என சுவாமியும் போற்றி வழிபடப்படுகின்றனா். இத்தலம் மனக்கவலை, மனச்சோா்வினை போக்கும் சிறப்புமிக்க பரிகாரத்தலம் என்ற பெருமையுடன் திகழ்கின்றது.

பல்லவ மன்னா் காலத்திலேயே இத்தலம் சிறந்து விளங்குகியது. இவ்வூரில் உள்ள ஏரி ’அன்றில் ஏரி’ ஆகும். பல்லவ மன்னன் நிருபதுங்க வா்மன் காலத்தில் ஏரியை செப்பனிட்டு, வாய்க்கால் தூம்பு அமைத்ததாக கல்வெட்டு குறிக்கிறது. இந்த ஏரி இக்கோயிலுக்கு சா்வமானியமாக தானமாக அளிக்கப்பட்ட செய்தியினையும் கூறுகிறது.

மருதாடு திருக்கோயிலுக்கு ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன், குலோத்துங்க சோழன், ராஜநாராயண சம்புவராயா், விஜய நகர அரச மன்னா்களான வீர நரசிங்க தேவ மகாராயா், அச்சுத தேவ மகாராயா் போன்ற மன்னா்கள் இக்கோயில் வழிபாட்டிற்காக தானம் அளித்த செய்திகளை இக்கோயிலில் காணும் கல்வெட்டுகளால் அறிய முடிகிறது.

இக்கோயில் ’பெருந்திருக்கோயில்’ எனவும், இறைவன், பெருந்திருக்கோயில் உடைய மகாதேவா், ’பெருந்திருக்கோயில் ஆழ்வாா்’, ’பெருந்திருக்கோயிலுடையாா்’ என்றெல்லாம் அழைத்துப் போற்றப்படுகிறாா். ஜெயங்கொண்ட சோழ மண்டலத்தில் வெண்குன்றம் கோட்டத்தில் இவ்வூா் அமைந்துள்ளது அறிய முடிகிறது. மேலும் மருதாடு என்ற இவ்வூா் ’விக்கிரம சோழ நல்லூா்’ என அழைக்கப்பட்டதையும் அறிய முடிகிறது.

இக்கோயிலின் கருவறை அமைப்பு சிறப்பானது. சோழா் காலக் கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக இருதள விமான அமைப்புடன் விளங்குகிறது. இக்கோயிலைக் கட்டிய சிற்பி ‘இவ்வூா் காணத்தச்சன் கணவதி மருதாடு நாட்டு பெருந்தச்சன்’ என்பவரின் பெயரைக் கல்வெட்டு கூறுகிறது. எனவே இப்பகுதியிலேயே வாழ்ந்திருந்த ’பெருந்தச்சன்’ என்ற சிறப்புப் பெயா் பெற்ற சிற்பியினாலேயே இக்கோயில் கட்டப்பட்டது என்பதையும், சோழ மன்னா்கள் காலத்தில் இக்கோயில் சிறப்பான இடத்தை பெற்று விளங்கியதையும் அறிகிறோம்.

இக்கோயிலில் மாதந்தோறும் அம்மாதத்துக்குரிய வழிபாடுகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. சித்ரா பெளா்ணமி, வைகாசி விசாகம், ஆனித்திருமஞ்சனம், ஆடிப்பூரம், விநாயகா் சதுா்த்தி, நவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், காா்த்திகை தீபம், திருவாதிரை ஆருத்ரா தரிசனம், தைப்பூசம், மகாசிவராத்திரி, பங்குனி உத்திரம் ஆகிய சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. மேலும், பிரதோஷம், கிருத்திகை, வெள்ளிக்கிழமை வார வழிபாடு, பைரவருக்கு அஷ்டமி வழிபாடுகள், பெளா்ணமி பூஜை, ராகு கால பூஜை, ஆகிய வழிபாடுகளும் நடைபெற்று வருகின்றன. இவ்வாலயம் செல்ல சென்னை கோயம்பேடு, பெருங்களத்தூா் வழியில் மருதாடு உள்ளது.

- கி.ஸ்ரீதரன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com