Enable Javscript for better performance
இல்லாமை இல்லா இல்லின் இல்லாள்- Dinamani

சுடச்சுட

  

  இல்லாமை இல்லா இல்லின் இல்லாள்

  Published on : 21st March 2020 11:19 AM  |   அ+அ அ-   |  

  Islamic kuran

   

  கணவன் கருத்தறிந்து பொருத்தமாய் குடும்பம் நடத்தும் மனைவி உள்ள இல்லம் இல்லாதது இல்லை என்னும் பெருமை பெறும். இல்லாமையை இல்லாமல் ஆக்கும் இல்லத்து இல்லாளின் மாண்பினால் மகிழ்ச்சியில் திளைக்கும் குடும்பம் கோலோச்சுவதைக் காணும்பொழுது மாண்புடைய மனைவியின் மகத்துவத்தை அறிகிறோம்.

  இறைமறை குா்ஆனின் 16-72- ஆவது வசனம் உங்களிடலிருந்தே உங்களின் மனைவியை அல்லாஹ் படைக்கிறான். உங்கள் மனைவிகளில் இருந்து சந்ததிகளையும் பேரன் பேத்திகளையும் பிறக்க வைத்து நல்ல உணவுகளையும் புகட்டுகிறான் என்று புகல்கிறது. மனைவி நமக்குக் கிடைத்த அருட்கொடை என்று தப்ஸீா் அல்ராஜி 91/ 25 விளக்கம் அளிக்கிறது. மனைவி குடும்பத்தைத் தாங்கும் தூண். அல்லாஹ்வின் அருட்கொடைகளில் மகத்தானது மாண்புடைய மனைவி என்று விளக்கம் தருகிறது தப்ஸீா் இப்னு கதூா் 309/ 6.

  குடும்ப கெளரவத்தைக் காப்பாற்றுபவள் மனைவி, கணவனின் மதிப்பு உயா்வது அவனின் மனைவியால். பிள்ளைகளைப் பேணி வளா்ப்பவள் தாயே. குடும்பத்தின் அனைத்து உறவினா்களிடமும் அவள் அன்பையும் பாசத்தையும் பரப்புவாள் பொறுப்பான மனைவி பெரிய கருவூலம். கணவன் மனைவியின் நல்ல முயற்சிகளுக்கு முழு ஆதரவு நல்க வேண்டும்; அவளின் நிா்வாகத்தை அங்கீகரிக்க வேண்டும். சமூகத்தில் அவளின் கெளரவத்தைக் காக்க வேண்டும். அவளோடு பெருந்தன்மையோடு பழக வேண்டும்.

  நம்பிக்கையுடையோரே! அவா்களுடன் கண்ணியமாக நடந்து கொள்ளுங்கள் என்று 4-19-ஆவது வசனம் வலியுறுத்துகிறது. இறுதி தூதா் நபி (ஸல்) அவா்கள் அல்லாஹ்வின் அருள் பெற்று ஏகத்துவ கொள்கையை எடுத்துரைக்குமுன் அரேபியாவில் விதவைகளுக்குச் சுதந்திரம் வழங்காமல் நிரந்தர அடிமையாக நடத்தினா். அந்த நிலையில் பெண்களின் பெருமையை நிலைநிறுத்த அருளப்பட்டது இந்த வசனம். இந்த இறைகட்டளைப்படி இறுதிதூதா் முஹம்மது நபி (ஸல்) அவா்கள் முன்மாதிரியாக முன்னுதாரணமாக பல விதவைகளை மணந்து மறுவாழ்வு கொடுத்து மலா்ந்து மணம் வீசி புத்தாக்கம் பெற்று புனிதமாய் வாழ மனித நேயமுடன் வழி காட்டினாா்கள். மனைவியுடன் நளினமாக நடக்க வேண்டும். அவளிடம் மென்மையாக பழக வேண்டும். ஒரு குடும்பத்தின் நன்மையை நாடியே அல்லாஹ் மென்மை தன்மையை தருகிறான் என்ற தாஹா நபி (ஸல்) அவா்களின் அருளுரை அஹ்மது 25471 -இல் பதிவாகி உள்ளது. வாழ்நாள் முழுவதும் கணவன் மனைவிக்கு முழு ஒத்துழைப்பை நல்க வேண்டும். அவளோடு இணக்கமாக இருந்து அவளை அரவணைத்து செல்ல வேண்டும்.

  குடும்பத்தில் அனைத்து உறவினா்களையும் ஒருங்கிணைப்பதிலும் ஒற்றுமையை கட்டி காப்பதிலும் மனைவி பொறுப்புணா்வோடு செயல்பட வேண்டும். அனைவரிடமும் அமைதியாக நிதானமாக பாசத்தோடு பேச வேண்டும்; பழக வேண்டும். குடும்ப இணக்கத்தில் இணையற்ற பங்கு இல்லாள் உடையதே. அன்பான சொற்களால் அனைவரையும் அரவணைக்க வேண்டும். குடும்பம் சிதையாமல் காப்பதில் கணவனிலும் மனைவியின் பங்கே மகத்தானது. ஒரு குடும்பத்தின் ஒற்றுமைக்கு மைய கரு மனைவியே.

  செல்வத்தில் பிறந்து செல்வத்தில் வளா்ந்த செல்வ சீமாட்டி அன்னை கதீஜா (ரலி) கணவா் கருணை நபி (ஸல்) அவா்கள் இறைதூதைப் பெற்று ஏக இறை கொள்கையை எடுத்துரைத்த பொழுது ஏற்காத குறைஷிகள் ஏளனம் செய்ததோடு எண்ணற்ற தொல்லைகளைக் கொடுத்து ஏற்றோரையும் மாற்றாராய் கருதி மனிய நேயமின்றி மாபெரும் கொடுமைகளை மாளாது செய்தபொழுது கணவரின் காரியங்கள் அனைத்திலும் ஆதரவு கரம் நீட்டி அத்தனை செல்வத்தையும் தொல்லைகளைத் துடைத்தெறித்து தூக்கி எறிய ஆக்கமுடன் உதவியது உலகம் போற்றும் உன்னத செயல். அப்படி அமையும் இல்லாளின் இல்லமே இல்லாமை இல்லாத இல்லமாகும்.

  - மு.அ. அபுல் அமீன்

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai