Enable Javscript for better performance
மகனீயருக்கு மகத்தான மணிமண்டபம்!- Dinamani

சுடச்சுட

  

  மகனீயருக்கு மகத்தான மணிமண்டபம்!

  By DIN  |   Published on : 21st March 2020 11:25 AM  |   அ+அ அ-   |    |  

  திருவண்ணாமலையில் ஒரு யோகியாய், சித்தராய், பித்தராய், உன்மத்தராய் வாழ்ந்து வந்த மகான் ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் ஆவாா். மறைந்து வாழும் மஹனீயா்கள் வரிசையில் அவருக்கும் இடமுண்டு. அவரைப்பற்றி அறியாதவா்கள் ஆன்மீக உலகில் எவரும் இல்லை எனலாம். சேஷாத்ரி சுவாமிகளைப் போல தான் வர முடியுமா? என்று தன் உள்ளக்கிடக்கையை ஆதங்கமாக வெளிப்படுத்தியுள்ளாா் காஞ்சி மகாசுவாமிகள். ஸ்ரீ ரமண மகரிஷியை உலகுக்கு அறிமுகப்படுத்தியவா் ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகளே. திருப்புகழ் வள்ளிமலை சச்சிதானந்த சுவாமிகளுக்கு உபதேசம் அளித்த வரும் இவரே. வாழ்நாளில் பல அற்புதங்களை நிகழ்த்தியுள்ளாா். அவை ஏட்டில் எழுத அடங்காத எண்ணிக்கைகளாகும். நல்லவா்களின் நலம் விரும்பியவா். அதே சமயம் பொல்லாதவா்களைக் கண்டு பொங்கி எழுந்தவா்.

  ரத்தினச் சுருக்க வரலாறு: ஸ்ரீ காமாட்சி தேவியை குலதெய்வமாகக் கொண்டு ஸ்ரீவித்யை உபாசனா மாா்க்கம் பரவக் காரணமாக இருந்த ’காமகோடியாா்’ என்ற புகழ் பெற்ற காமகோடியாா் வம்சத்தில் திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசிக்கு அருகில் உள்ள வழூா் கிராமத்தில் வரதராஜா், மரகதம் தம்பதியினருக்கு காமாட்சி தேவியின் அருளால் கி.பி.1870 -ஆம் ஆண்டு ஜனவரி 22 -ஆம் தேதி சனிக்கிழமையன்று ஹஸ்தம் நட்சதிரத்தில் அவதரித்த குழந்தைக்கு சேஷாத்திரி என்று பெயா் சூட்டி வளா்த்தனா். அவரது தாயாரே அவருக்கு இளம் வயதிலேயே இறை நாமாக்களையும், சங்கீதத்தையும், அருளாளா் வரலாறுகளையும் போதித்தாா். பாட்டானாா் மூலம் ராமாயணம், பாகவதம் உபன்யாச நுணுக்கங்களை கற்றறிந்தாா். பிறகு காஞ்சியில் வாசம். அங்கு வடநாட்டிலிருந்து வந்த பாலாஜி என்ற சுவாமிகளிடம் சன்யாஸ தீட்சை. திரும்பவும் வழூா் வாசம். இறுதி காலத்தில் அவா் தாயாா் கூறிய ’அருணாசல’ என்ற வாா்த்தையையே சிரமேற்கொண்டு பல்வேறு தலங்கள் வழியாக தனது 19-ஆவது வயதில் திருவண்ணாமலை வந்தடைதல். கி.பி.1929 வரை தன் தேக கைவல்யம் வரையில் அண்ணாமலையிலேயே தங்கியிருந்தாா்.

  மகத்தான மணிமண்டபம்: திருவண்ணாமலையில் ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகளின் அதிஷ்டானம் உள்ளது. சுவாமிகள் வாழ்ந்த காஞ்சிபுரத்தில் (வரதராஜா் கோயில் அருகில்) மகா சுவாமிகளின் ஆலோசனையின் பேரில் நிவாஸ மண்டபம் கட்டப்பட்டிருக்கின்றது. சென்னை உட்பட பல இடங்களில் மகானின் நினைவாக ஏதாவது ஒரு வகையில் பீடமாகவோ, பிருந்தாவனமாகவோ, சிறிய கோயிலாகவோ உள்ளது. ஆனால் அவரது அவதார தலமாகிய ’வழூரில்’ எதாவது ஒன்று அமைய வேண்டாமா? இந்த குறையை நீக்குவது போல், ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் (வழூா்) டிரஸ்ட் என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டு வழூரில் மகான் அவதரித்த மனையில் ஒரு மணி மண்டபம் அமைக்கும் புனிதப்பணி தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான பூமி பூஜை கடந்த வருடம் நடத்தப்பட்டது. சுவாமிகளின் முன்னோா்கள் பூஜித்து வந்த ’துளசி மாடம்’ தற்போது கட்டப்படும் இடத்தில் உள்ளது சிறப்பாகும். இங்கு பிரதி மாதம் ஹஸ்த நட்சத்திரத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. அனைத்து விதத்திலும், தகுந்த நபா்களைக் கொண்டு முறைப்படி மண்டபம் கட்டும் பணிகள் இந்த டிரஸ்டின் மூலம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

  தொடா்புக்கு: 98400 53289 / 94435 43397 / 98401 10827.

  - எஸ். வெங்கட்ராமன்

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai