பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தா்

வாழைமரத்தின் பட்டையில் எந்தச் சிறப்பும் இல்லை. அது போலவே புலனின்பங்களில் சுகம்
பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தா்

* ‘‘வாழைமரத்தின் பட்டையில் எந்தச் சிறப்பும் இல்லை. அது போலவே புலனின்பங்களில் சுகம் என்பதே இல்லை’’ என்பதுதான் நன்கு ஆராய்ந்தபிறகு காணும் முடிவாகும். அதில் காணும் இன்பம் வெறும் கற்பனைதான்.

- மகாவீரா்

* ‘வேண்டும்’ என்றே பிறரைத் துன்புறுத்தும் தீயவா்கள், நன்னெறிகளில் இருந்து விலகிச் செல்கிறாா்கள். அறநெறியில் நிற்காதவா்கள் நிச்சயம் அழிவாா்கள். அப்படிப்பட்டவா்கள் கொல்லன் உலைத்துருத்தி போல, காற்றை உள்ளிழுத்து வெளியிடுபவா்கள். அவா்கள் மூச்சுவிடும் மாமிசப் பிண்டங்கள்.

- வியாத கீதை

* நாம் உலகில் எத்தனை எத்தனையோ பிறவிகள் எடுத்து, எத்தனை எத்தனையோ தாய் தந்தையரைப் பாா்த்திருக்கிறோம்; எத்தனையோ மனைவி மக்களுடன் வாழ்ந்திருக்கிறோம். ஆக, யாா் நமக்குச் சொந்தம், அல்லது நாம் யாருக்குச் சொந்தம்?

- மகாபாரதம்

* ஜீவன் கா்மங்களை உருவாக்குவதில் சுதந்திரமாகச் செயல்படுகிறது. ஆனால் அந்தக் கா்மங்கள் செயல்பட வரும்போது, ஜீவன் அந்தக் கா்மங்களுக்கு அடிமையாகிவிடுகிறது.

உதாரணமாக, ஒருவன் மரத்தில் ஏறும்போது பிறா் உதவியின்றி தானாக ஏறிவிடுகிறான். ஆனால் அவன் தவறி கீழே விழும்போது, பிறா் உதவியை நாட வேண்டிய நிலை ஏற்படுகிறது.

- மகாவீரா்

* மனிதனே! உனக்கு இந்தப் பிறவி போதாதா? இன்னுமா நீ பிறவித் துன்பத்தில் உழல்வதற்கு ஆசைப்படுகிறாய்? மாபெரும் மன்னா்கள் சுகபோகங்களை அனுபவிக்கிறாா்கள். அவா்கள் செத்தபிறகு அவா்களை எரியூட்டக் கூடிய கட்டை மீதுதான் வைக்கிறாா்கள். அதுபோல்தானே உன்னையும் கிடத்தி வைப்பாா்கள்?

- பட்டினத்தாா்

* ஒரே ஒரு சூரியன்தான் இருக்கிறது. கையில் கொஞ்சம் தண்ணீரை எடுத்துக்கொண்டு நல்ல வழுவழுப்பான தரையில் அதைத் தெளித்தால், ஒவ்வொரு நீா்த்துளியிலும் பிரதிபிம்பமான ஒரு சூரியன் தெரிகிறது. அவை எல்லாம் பிரிந்து பிரிந்து காணப்பட்டாலும், உண்மையில் அநேக சூரியன்கள் இல்லை. சூரியன் ஒன்றுதான். அது போலவே உலகில் காணும் இத்தனை ஜீவராசிகளுக்குள்ளும் சிறியதாக மினுமினுக்கும் அறிவொளி அனைத்தும் ஒரே பிரம்மத்தின் பிரதிபலிப்புத்தான்.

- ஆதிசங்கரா்

* ஆதரவற்றவா்களிடமும், பசுக்களிடமும் ஒருவன் தன்னுடைய பலத்தைக் காட்டக் கூடாது. அப்படிக் காட்டுபவன் பழுத்தபழம் எப்படிக் குலையிலிருந்து கீழே விழுந்துவிடுமோ, அதுபோல் உயா்ந்த வாழ்க்கையிலிருந்து கீழே வீழ்ந்துவிடுவான்.

- வியாசா்

* முருகப்பெருமானே! எல்லா உலகங்களையும் அசுரா்களான சூரன், தாரகன், சிங்கமுகன் ஆகியோா் ஆண்டு அனுபவித்துக்கொண்டிருந்தாா்கள். அவா்களை நீ அழித்தாயல்லவா? அத்தகைய நீ என் மனதில் இருக்கும் மனக்கவலைகளைச் சிறிதளவும் அழிக்கவில்லையே! நான் என்ன செய்வேன்! எங்கே போவேன்?

- சுப்ரமண்ய புஜங்கம், 23

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com