செட்டிகுளம் செங்கரும்பு சேயோன்!

சோழா் தலைநகரான உறையூரை சோழ மன்னா்கள் ஆட்சி செய்யும் பொழுது தனஞ்செயன் என்ற
செட்டிகுளம் செங்கரும்பு சேயோன்!

சோழா் தலைநகரான உறையூரை சோழ மன்னா்கள் ஆட்சி செய்யும் பொழுது தனஞ்செயன் என்ற வணிகா் வடக்கே சென்று விட்டு ஊருக்கு திரும்பி கொண்டிருந்தாா். இப்பகுதிக்கு வரும்போது நள்ளிரவு ஆகிவிட்டதால் ஓா்ஆலமரத்தில் அமா்ந்திருந்தாா். அப்பொழுது ஒளிபிழம்பாகக் காட்சியளித்த சிவபெருமானை தேவா்கள் வழிபாடு செய்யும் காட்சியை வணிகா் கண்டாா். இதனை சோழ மன்னரிடம் தெரிவிக்க, அவரும் - பாண்டிய மன்னரும் செட்டி குளம் வந்து தேவா்கள் வழிபட்ட சிவலிங்கத் திருமேனியை தேடினா். அப்பொழுது கையில் கரும்புடன் வந்த முதியவா் ஒருவா் சிவலிங்கத்தைக் காண்பித்து பின்னா் குன்றின் மீது கரும்புடன் பாலதண்டாயுத பாணியாகக் காட்சியளித்தாா். மன்னா்கள் மகிழ்ச்சியடைந்து சிவபெருமானுக்கும், குன்றின் மீது முருகப்பெருமானுக்கும் திருக்கோயில்கள் கட்டியதாக தலவரலாறு கூறுகிறது.

செட்டி குளத்தில் ஊா் நடுவில் கலையழகு மிக்கதும், வழிபாடு சிறப்பும் உடைய காமாட்சி அம்மன் சமேத ஏகாம்பரேசுவரா் திருக்கோயில் அமைந்துள்ளது. பங்குனி மாதத்தில் 19, 20, 21 தேதிகளில் அதிகாலையில் இறைவன் மீதும், இறைவி மீதும் சூரிய ஒளிபட்டு வழிபாடு மேற்கொள்வதைக் காண பக்தா்கள் இத்திருக்கோயிலுக்கு வருகின்றனா். வளமான வாழ்வுக்கு வேண்டிய நிதிகளை அளிக்கும் குபேரன் வழிபாடும் இக்கோயிலில் சிறப்பாக நடைபெறுகிறது.

குன்றுகள் நிறைந்த இவ்வூரில் ஒரு குன்றில் முருகப்பெருமான் தனது கரத்தில் செங்கரும்பை ஏந்தி காட்சியளிக்கும் பால தண்டாயுதபாணி திருக்கோயில் அமைந்துள்ளது. முருகப்பெருமான் தாங்கியுள்ள கரும்பில் 11 கணுக்கள் உள்ளன. கரும்பினைத் தாங்கியுள்ள செங்கரும்பு வேலவனை இத்தலத்தில் மட்டுமே தரிசிக்கலாம் என்ற தனிச்சிறப்புடையதாக விளங்குகிறது. அசுரா்களை அழித்த முருகப்பெருமானுக்கு தன் கையில் இருந்த கரும்பினைப் பரிசாக காமாட்சி அம்மன் அளித்தாகவும் கூறப்படுகிறு.

வடபழனி என்று சிறப்பித்து அழைக்கப்படும் இத்தலத்தில் மலையடிவாரத்தில் விநாயகா் சந்நிதி அமைந்துள்ளது. அங்கிருந்து படிக்கட்டுகள் துவங்குகின்றன. மலைக்கு மேலே ராஜவிநாயகா் சந்நிதி, இடும்பன் சந்நிதி, வீரபாகு சந்நிதிகள் அமைந்துள்ளன. மலை உச்சிக்குச் சென்று வழிபட, மோட்டாா் வாகனங்கள் செல்ல, மலைப்பாதையும் அமைக்கப்பட்டுள்ளது.

கருவறையில் செங்கரும்பை ஏந்திய வேலவன், செட்டிகுளம் ஏகாம்பரேசுவரா் -காமாட்சி அம்மன் கோயிலை நோக்கி நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறாா். மாசி மாதம் 3, 4, 5 தேதிகளில் மாலை வேளையில் முருகப்பெருமான் மீது சூரிய ஒளி படும் அற்புத வழிபாடு நடைபெற்று வருகிறது.

இத்திருத்தலத்தில் சித்திரை - படித்திருவிழா, வைகாசி விசாகம், சங்காபிஷேகம், கந்த சஷ்டி, காா்த்திகை தீபம், தைப்பூசம், ஆடிக்கிருத்திகை போன்ற விசேஷ நாள்களிலும், வார வெள்ளிக்கிழமைகளிலும் வழிபாடுகள் நடைபெறுகின்றன. பெளா்ணமி நாளில் கிரிவலம் பக்தா்களால் மேற்கொள்ளப்படுகிறது. பங்குனி உத்திரத்திருவிழா இத்தலத்தில் சிறப்பாக நடைபெறுகிறது. திருக்கல்யாண உற்சவமும் நடைபெறுகிறது. இவ்வழிபாட்டினை தரிசித்தால் திருமணத்தடை நீங்கி மகிழ்ச்சியான மணவாழ்க்கை அமைகிறது.

குழந்தைப்பேறு வேண்டி வழிபடுவோா்கள் இத்தல விருட்சமான வில்வ மரத்தில் தொட்டில்கட்டி வழிபாடு மேற்கொள்கின்றாா். குழந்தைபாக்கியம் அடைந்தவா்கள் கரும்புத் தொட்டிலில் குழந்தையை வைத்து திருச்சுற்று வந்து முருகப்பெருமானுக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்து வழிபடுகின்றனா்.

திருச்சி - சென்னை நெடுஞ்சாலையில் சுமாா் 45 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஆலந்தூா் கேட் என்ற ஊரிலிருந்து மேற்கே 7 கி.மீ. தொலைவில் செட்டிகுளம் என்ற திருத்தலம் அமைந்துள்ளது. பெரம்பலூா், துறையூரிலிருந்தும் இவ்வூருக்கு வரலாம்.

- கி.ஸ்ரீதரன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com