ஏழூரில் ஈசனை வழிபட்ட மங்கைகள்!

சிவபெருமானுக்கும் அந்தகாசுரனுக்கும் கடுமையான போர் நடந்தது. போரில் சண்டன், முண்டன், ரக்தன் பீஜன் போன்ற அரக்கர்களை வதம் செய்வதற்கு காளிதேவி புறப்பட்டாள்.
ஏழூரில் ஈசனை வழிபட்ட மங்கைகள்!


சிவபெருமானுக்கும் அந்தகாசுரனுக்கும் கடுமையான போர் நடந்தது. போரில் சண்டன், முண்டன், ரக்தன் பீஜன் போன்ற அரக்கர்களை வதம் செய்வதற்கு காளிதேவி புறப்பட்டாள். காளிக்குத் துணையாகச் செல்லும் பிராமி, மகேசுவரி, வைஷ்ணவி, இந்திராணி, கவுமாரி, வராகி, ஆகிய ஒவ்வொருவரும் ஒவ்வோர் தலத்தில் மற்ற மங்கைகளுடன் சேர்ந்து சிவபூஜை செய்து தரிசனம் பெற்றனர். இவை, சப்தமங்கைத் தலங்கள் எனப்படுகின்றன. இந்த ஏழு தலங்களும், கும்பகோணத்திலிருந்து தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள ஐயம்பேட்டையைச் சுற்றிலும் 3 கி.மீ. தொலைவுக்குள் அமைந்துள்ளன.

மேலும் காசி விசாலாட்சி- விசுவநாதர் தரிசனம் முடித்து திரும்பிய நாதசர்மா அனவித்தை தம்பதிகள் மற்றுமுள்ள சக்திகளை பூசித்தனர். அவ்வாறு அவர்கள் பூசித்தபோது அம்பிகை சப்த தலங்களிலும் காட்சி நல்கி அருள் செய்தாள். சப்தமங்கைத் தலங்களின் தரிசனத்தை, தரிசன வகையால், 1. நெற்றிக் கண் தரிசனம் 2. கங்காதேவி தரிசனம் 3. திரிசூல தரிசனம் 4. பாத தரிசனம் 5. உடுக்கை தரிசனம் 6. மூன்றாம் பிறை தரிசனம் 7. நாக தரிசனம் என்று அழைப்பர்.

சக்கரமங்கை: தஞ்சாவூர் - கும்பகோணம் சாலையில் உள்ள ஐயம்பேட்டையில் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழைமையானது. திருஞானசம்பந்தரால் ஒரு பதிகம் தேவாரப் பாடல் பெற்ற சப்தமங்கைத் தலங்களுள் முதலாவதான சக்கராப்பள்ளி என்ற பகுதியில் இக்கோயில் உள்ளது. மகாவிஷ்ணு சிவனை வழிபட்டுச் சக்கராயுதம் பெற்றார். சப்தமாதர்கள், சப்த ரிஷிகள், சக்கரவாகப் பறவை ஆகியோர் வழிபட்டதால் சக்ரவாகேஸ்வரர் எனப்படுகிறார். மங்கை பிராமி, ஈசனை வழிபட்ட தலம். சிவனின் திருமுடி தேடி சக்கரவாகப் பறவையாக வடிவெடுத்துப் பறந்த பிரம்மா திருமுடி காணாததால் தன்னை உயர்ந்தவனாக எண்ணிய பிழைக்கு வருந்தி சிவனைப் பூசித்துப் பழி நீங்கினார். இத்தல முருகப்பெருமானைஅருணகிரிநாதர் பாடியுள்ளார். காசி தம்பதிகள் நாதசர்மா -அனவித்தைக்கு வேதநாயகியான அம்பிகை இங்கு பேதைப் பருவ சிறுமியாகக் காட்சி அளித்தாள்.

அரிமங்கை: சக்கராப்பள்ளி திருக்கோயிலிலிருந்து சுமார் 1 கி. மீ. தொலைவில் உள்ளது இவ்வாலயம். மகாலட்சுமி ஓர் அரிதான நெல்லிக் கனியை மட்டும் உண்டு, சத்திய கங்கை தீர்த்தத்தில் நீராடி, திருமாலை எக்காலத்திலும் பிரியாதிருக்கும் வரம் வேண்டி சிவனைப் பூஜித்த தலம். சப்தமங்கையரில் மகேச்வரி வழிபட்ட இத்தலத்தை, பார்வதி தேவி வழிபட்டவுடன், அம்பிகைக்குத் தனது சிரத்தின் உச்சியில் கங்கை பொங்க அற்புத தரிசனம் காட்டினார் பெருமான். விஷ்ணுவும் இவரை வழிபட, ஹரிமுக்தீச்வரர் ஆனார். தேவி ஞானாம்பிகை. காசி தரிசன தம்பதிகளுக்கு அம்பிகை இங்கு பெதும்பை (பள்ளிப்) பருவத்தவளாகக் காட்சி அளித்தாள்.

சூலமங்கை: ஐயம்பேட்டையிலிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது இக்கோயில். மூன்றாம் குலோத்துங்க சோழன் காலக் கல்வெட்டுகள் மற்றும் ராஜ கோபுரமுள்ள தேவார வைப்புத்தலம். சந்நிதி முன் வலப்புறம் எங்கும் காணாவியலா வடிவில் சிலாரூபத்தில் அஸ்திர தேவர் அருளுகிறார். இங்கு சப்தமாதர்களில் கெளமாரி பூஜை செய்து வழிபட்ட தலம். நாதசர்மா -அனவித்தை தம்பதிகளுக்கு அம்பிகை இங்கு மங்கைப் பருவத்தினளாகத் தரிசனம் தந்தாள்.

நந்திமங்கை: ஐயம்பேட்டையிலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் காசி தம்பதிகளுக்கு அம்பிகை கன்னிகை வடிவில் காட்சி கொடுத்த தலம் இது. நல்லிச்சேரியில் நந்திகேச்வரர் ஈசனைப் பூஜித்து, நடராசப் பெருமானது பாத தரிசனம் கண்டார். அதனால் நந்தி மங்கை என அழைக்கப்படுகிறது. அகிலாண்டேஸ்வரி இங்கு தவம் செய்து சிவபிரானது பாத தரிசனம் பெற்று அலங்காரவல்லி ஆனாள். ஈசனை சப்த மங்கைகளில் வைஷ்ணவி மற்ற தேவியருடன் வழிபட்ட தலம்.

பசுமங்கை: கோச்செங்கட்சோழ நாயனார் கட்டிய யானைகள் ஏற முடியாத மாடக் கோயில்களுள் இதுவும் ஒன்றாகும். சப்த மாதர்களில் வராகி வழிபட்டு, ஈசனின் உடுக்கையிலிருந்து எழும் ஆதிநாதத்தைக் கேட்டு, அதிலிருந்து பிரபஞ்சங்கள் உற்பத்தி ஆவதையும் அறிந்தாள். அதனை அம்பிகையும் கண்டு மகிழ்ந்தாள். காசி தம்பதிகள் இத்தலத்து பால்வள நாயகி பசுபதிநாதரை வழிபட்டபோது, அம்பாள் அவர்களுக்கு அரிவை எனும் தாய்ப் பருவத்தில் காட்சி தந்தருளினாள். சிவபிரானை காமதேனு தினமும் தன் பாலினைப் பொழிந்து வழிபட்டதால் பசுபதிகோயில் எனப்படுகிறது.

தாழமங்கை: சப்த மாதர்களில் இந்திராணி பூஜித்து வழிபட்ட தலம் தாழமங்கலம் . தஞ்சாவூர் -கும்பகோணம் நெடுஞ்சாலையில் பசுபதி கோயிலுக்கு அருகில் சாலை ஓரமாகவே அமைந்துள்ளது. இத்தல இறைவன் தாழைப்புதரில் தோன்றியவன். சந்திரன் தனது கலைகள் ஒவ்வொன்றாகத் தேய்வதைக்கண்டு வருந்தி, இவ்விறைவனை வழிபட்டான். இரங்கிய ஈசன், சந்திரனின் மூன்றாம் பிறையைத் தன் சிரசில் அணிந்து அவனுக்கு ஓர்அந்தஸ்தை அருளினான். அம்பிகை ராஜராஜேஸ்வரியும் இப்பிறை தரிசனம் வேண்டி இறைவனிடம் வேண்ட, சுவாமியும் சந்திரமெளலீஸ்வரராகக் காட்சி அளித்தருளினார். நாதசர்மா, அனவித்தை தம்பதிகளுக்கு அம்பாள் தெரிவை வடிவில் தரிசனம் தந்தாள்.

புள்ளமங்கை: திருஞானசம்பந்தரின் தேவாரத் திருப்பதிகம் பெற்ற தலம். சப்த மாதர்களில் சாமுண்டி அஷ்ட நாகங்களோடு வந்து பூஜை செய்து வழிபட்ட தலம். முதல் பராந்தக சோழனது கற்றளியான இக்கோயில், பசுபதி கோயிலிருந்து ஒரு கி. மீ. தூரத்தில் உள்ளது. நாகாபரண தரிசனம் தனக்கும் கிடைக்க ஜகதாம்பிகையும் தவம் செய்யவே, இறைவனும் அவ்வாறே அருளினார். பிரம்மன் தவம் செய்து அருள்பெற்றதால், சுவாமி பிரம்மபுரீஸ்வரர் எனப்படுகின்றார். தேவியின் திருப்பெயர் அல்லியங்கோதை. காசி தரிசன தம்பதிகளுக்கு தேவி, பேரிளம் பெண் வடிவில் காட்சி தந்தாள்.
சப்தஸ்தானம் புறப்பாடு: சப்த ஸ்தானப்பல்லக்கு விழா இந்த ஏழு கோயில்களையும் இணைத்து ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறுகிறது.
முக்திபெற்ற தம்பதியர்: சப்த மங்கைத் தலங்களுக்கும் யாத்திரை செய்து அருள் பெற்ற நாதசர்மா-அனவித்தை தம்பதியர் நிறைவாக மயிலாடுதுறையை அடைந்து, காவிரியில் நீராடி, கெளரி மயூரநாதரை தரிசித்துப் பின்னர் சிவபதம் பெற்றனர்.

தொடர்புக்கு: 63822 92823.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com