Enable Javscript for better performance
சொக்கனை அலங்கரிக்கும் சோமன் மூன்றாம்பிறை மகத்துவம்- Dinamani

சுடச்சுட

  

  சொக்கனை அலங்கரிக்கும் சோமன் மூன்றாம்பிறை மகத்துவம்

  By - எஸ். எஸ். சீதாராமன்  |   Published on : 15th May 2020 05:02 PM  |   அ+அ அ-   |    |  

  vm1


  பஞ்சாங்கம் என்பது பூமியை சுற்றியுள்ள அனைத்து கோள்களின் (நம் கணக்குப்படி ஒன்பது மட்டுமே) சஞ்சார நிலையை மிகத்துல்லியமாக காலநிலையினை கணக்கிடும் ஒரு வழியாகும். இப்போதுள்ள அறிவியல் கருவிகளைக் கொண்டு கணக்கிடும்போது கூட சில தவறுகள் நடைபெறுகிறது. ஆனால் நம் சித்த விஞ்ஞானிகள் ஏற்படுத்திய இந்த கோள்/வான சாஸ்திர பஞ்சாங்கம் எப்போதும் பொய்த்ததில்லை. ஆச்சர்யப்படத்தக்க பல செய்திகள் இதில் உண்டு.  அதில் ஒன்று  காணுதல் அப்படியென்றால் என்னவென அறிந்து கொள்வோமா? 

  அமாவாசை திதி என்பது சூரியனும் சந்திரனும் ஒரே ராசியில் இணைவதே ஆகும். அமாவாசை கழிந்த பிரதமை அன்று நிலவு தெரியாது. இரண்டாம் நாள் நிலவு அழகாக ஒளிர்ந்து தெளிவாகத் தெரியும். ஆனால் மாலை நேரத்து இரவு வருவதற்கு சற்று முன்; அதாவது சுமார் மாலை 6:30 மணிக்கு தெரிவதே மூன்றாம் பிறையாகும். மேற்கில் அடிவானத்தில் இது தொரியும். 

  நம் முக்குணங்களான காமம், வெகுளி, மயக்கம் என்பதை கடந்து சென்றால் முக்தி அடையலாம் என்பதை நம் கண்முன்னே காட்டும் காலக் கண்ணாடியாக இதனை காணவேண்டும் என நம் முன்னோர்கள் கூறினார்கள். அக்காலத்தில் மூன்றாம்பிறை காணுதல், வியாழன்தோறும் கருட தரிசனம் செய்தல் போன்றவற்றிக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள். இதற்கான புராண சம்பவங்கள் நம் பெளராணிகர்கள் என்ன கூறுகிறார்கள் எனப் பார்ப்போம்:

  ஒருமுறை விநாயகப்பெருமான் சிவனின் அதிகாரத்தையும், பொறுப்புகளையும் ஏற்றுக்கொண்டார். புதிய பொறுப்பினை ஏற்ற விநாயகர் அனைத்து உலகங்களையும் பார்வையிடச் செல்லும்போது சந்திரனையும் சந்தித்தார். அகந்தையினால் கண்ணை மறைத்த சந்திரன்; யானை முகத்துடன், பெரிய தொந்தியும் கொண்ட விநாயகரின் திருவுருவை பார்த்து நகைத்தான். இதனால் கோபம் கொண்ட விநாயகர் "உன் அழகு இன்று முதல் இருண்டுபோய் உன்னை உலகத்தார் வணங்க மாட்டார்கள்' என்று சாபமிட்டார். 

  விநாயகரின் சாபத்தால் சந்திரனின் அழகு குன்றியது. முழு வெண்மதியாக இருந்த சந்திரன் பொலிவிழந்தான். இதனால் கவலை அடைந்த சந்திரன் மனம் வருந்தி ஈசனை நோக்கி கடும் தவம் புரிந்து பழையபடி முழுவெண்மதியை பெற்றான் என்பதாக புராணம் கூறுகிறது. தந்தை முக்கண்ணனின் செயலை போற்றும்விதமாக சாபம் நீங்கப்பெற்ற சந்திரனை தன் நெற்றியில் திலகமாகச் சூடியதால் "பாலசந்திர கணபதி' எனவும் பிள்ளையாருக்கு ஒரு பெயர் உண்டு. 

  ஸ்ரீசக்ர ராஜ சிம்மாசனேஸ்வரி ஸ்ரீலலிதாம்பிகையின் லலிதா சகஸ்ரநாமத்தில், "தாரா நாயக சேகராம்' என்ற தியான ஸ்லோக வரியில்; நட்சத்திரக் கூட்டங்களின் தலைவனான சந்திரனை தன் தலையில் ஏற்றுக்கொண்டவள் என்று வர்ணிக்கின்றது. காஞ்சியின் கருணைக்கடல் காமாட்சியை இந்த கோலத்தில் தரிசித்திருப்பீர்கள்.

  "தான் பெரியவன்" என்ற அகந்தை மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தும் என்பதை உலகிற்கு உணர்த்தும் விதமாக சந்திரன்; மாதத்தின் பாதிநாள் தேய்பிறையாகவும், அடுத்த பாதிநாள் வளர்பிறையாகவும் வலம் வருகின்றான். முழுமதி நாளில் சந்திரனை வழிபடுவதை "சந்திர தரிசனம்' என்பார்கள். இதுபோல் மூன்றாம் பிறை சந்திரனைக் காண்பதையும் "சந்திர தரிசனம்' என நம் பஞ்சாங்கம் குறிப்பிடுகிறது. வளர்பிறையில் எந்த காரியம் தொடங்கினாலும் அந்த காரியம் வளம் பெறும் என்பது ஐதீகம்.

  மற்றொரு வரலாறாக; தன் பெண்களான 27 நட்சத்திரங்களை மணம்புரிந்து ஏமாற்றிய சந்திரனை; தன் தவ வலிமையால் தக்ஷன் சாபமிட்டான். பின்னர் தன் தவறை உணர்ந்து; தான் இட்ட சாபத்தினால் தான் செய்த புண்ணியம் அனைத்தும் மங்கிவிட்டதால் தன்னால் சாபவிமோசனம் அளிக்க இயலாது என தக்ஷன் கூறிவிட்டான். இதனால் சந்திரன் தன் மனைவி அனைவருடன் சங்கரனார் சிவனை நோக்கித் தவம்புரிந்தார்கள். அவர்களது தவத்தை மெச்சிய முக்கண்ணன் தன் இல்லாள் கங்கைக்கு தன் தலைமுடியில் இடம் கொடுத்ததைப்போல்; சந்திரனை தன் தலையில் மூன்றாம் பிறையாக அமர்வதற்கு இடம் கொடுத்து அருளினார். மேலும் சோமன் என்றழைக்கப்படும் சந்திரன் சிவனை வணங்கி அவரது கண்ணாகவும், அணிகலங்களாகவும் இருப்பதற்கு வரம் வேண்டிப் பெற்றதாக காசிக் காண்டம் கூறுகின்றது. தமிழ் வைகாசி மாதம் அமாவாசைக்கு பின் வரும் திருதியையே இந்த நாளாகும் என்ற ஒரு கருத்து உண்டு. 

  சுந்தரரின் தேவாரத்தில் கூறும் "பித்தா பிறைசூடி பெருமாளே அருளாளா' என்ற பாடலுக்கு அடியெடுத்துக் கொடுக்கும் வகையில் "பிறைசூடன்' என்ற பெயரையும் கைலாயபதி பெற்றார். இதன் தொடர்ச்சியாக சந்திரனை இந்த நன்னாளில் மூன்றாம் பிறை பார்த்து வணங்கினால்; அந்த கைலாயநாதனை வணங்குவதற்கு சமமாக போற்றலாயினர். இப்படி வணங்கி சந்திரப்பிரபையை தரிசிப்பதால், நல்ல ஞாபகசக்தி அதிகரித்து, கண் பார்வை தெளிவாகி, மனதில் ஏற்படும் குழப்பங்கள் நீங்கி, அனைத்து வகையான செல்வங்களும் நமக்கு கிட்டும் வழிதெரிந்து, பிரம்மஹத்தி போன்ற தோஷங்கள் நீங்கி, அனைவரது ஆயுளை நீட்டிக்கும் எனவும்; இந்த நாள் திங்கட்கிழமையில் வருமானால் அன்று ஒருநாள் பார்த்த புண்ணியம்; நாம் சந்திரனை வணங்கிய ஒரு வருட முழுப்பலனைப் பெறலாம் எனவும் சிவபுராணம் கூறுகிறது. 

  குளிர்ச்சிக்கு உகந்தவனாக சந்திரனைக் குறிப்பிடும் ஜோதிடம், குடும்ப உறவின் தன்மையை விளக்குவதற்கு ஒருவனின் ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் இடத்தைப் பொருத்து அமைவதாகக் கூறுகிறது. நம் மானிட வாழ்வில் ஆயிரம் பிறை கடந்தவர்களுக்கு சதாபிஷேக விழா நடத்தப்படுகிறது.

  வைகையாற்று வெள்ளத்தை தடுப்பதற்கு வீட்டிற்கு ஓர்ஆள் வரவேண்டுமென கூறிய பறை அறிவிப்பினைத் தொடர்ந்து தன்னால் முடியாது என நினைத்த ஒரு கிழவி தன் பிரதிநிதியாக யாராலும் மதிப்பிடமுடியாத ஒருவரை நியமித்தாள். அவரே சொக்கநாதர். இதுபற்றி நாரதர் கேட்டபோது; "அந்த மூதாட்டி ஆயிரம் பிறைகண்ட உத்தம பக்தை'; அதற்காகவே நான் அவளுக்கு தொண்டனாய் சென்று பணி செய்தேன் என்றாராம்; இப்போது புரிகிறதா இந்த மூன்றாம்பிறையின் மதிப்பு என்னவென்று! 

  "சந்த்ரமா மனúஸா ஜாத' என்று புருஷ சூக்தம் போற்றும் சந்திரனே மனதிற்கு அதிபதி. இவனே உடலுக்கு காரகன். சரீர பலம், மனோ பலம் இரண்டுமே உலக வாழ்க்கையின் வெற்றிக்கு மூல பலம் ஆகும். திருமாலின் மார்பினில் சந்திரன் தோன்றியதாகவும் இதற்கு ஒரு விளக்கம் உண்டு. அதாவது திருமாலின் மார்பினில் உதித்த பிரம்மனின் மகன் அத்கிரி முனிவர். அவரது மகன் சந்திரன் ஆவான். "ஆத்ரேய கோத்ராத் மஜாய நம: என்று சந்திரனைப்பற்றிய அஷ்டோத்திரத்தில் இப்படி கூறப்பட்டுள்ளது. நவக்கிரக நாயகனின் பரிகாரத்தலமாகத் தமிழகத்தில் திருவையாற்றுக்கு அருகிலுள்ள திங்களூரும், ஆந்திராவில் திருமலையிலுள்ள ஏழுமலையான் வெங்கடேசனின் திருக்கோயில்களையும் குறிப்பிடுகிறார்கள். பிற மதங்களிலும் இந்த மூன்றாம் பிறைக்கு மிக முக்கியத்துவம் தருகிறார்கள்.

  இவ்வாண்டு, மே மாதம் 24-ஆம் தேதி (வைகாசி 11) ஞாயிறன்று சந்திர தரிசனம் செய்ய உகந்த நாள். பிறைசந்திரனை தரிசனம் செய்வோம் ஞானப்பித்தன் பிறைசூடனின் பேரருளைப் பெறுவோம்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  kattana sevai