காக்கும் தெய்வம் காமாட்சி

"கா' என்றால் விருப்பம் என்று பொருள். மனிதர்களின் விருப்பங்களை ஆள்பவள் என்பதாலும், நிறைவேற்றுபவள் என்பதாலும், அம்பிகைக்கு காமாட்சி என்ற பெயர் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது.  
காக்கும் தெய்வம் காமாட்சி


"கா' என்றால் விருப்பம் என்று பொருள். மனிதர்களின் விருப்பங்களை ஆள்பவள் என்பதாலும், நிறைவேற்றுபவள் என்பதாலும், அம்பிகைக்கு காமாட்சி என்ற பெயர் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. கிருதயுகத்தில் துர்வாசரால் 2,000 சுலோகங்களாலும், திரேதாயுகத்தில் பரசுராமரால் 1,500 சுலோகங்களாலும், துவாபரயுகத்தில் தெüமியாசார்யரால் 1,000 சுலோகங்களாலும், கலியுகத்தில் ஆதிசங்கரரால் 500 சுலோகங்களாலும் போற்றி வழிபடப் பெற்றவள் காமாட்சி அம்மன்.

காஞ்சியில் காமாட்சி சிறுமியாக, பண்டாசுரன் என்னும் அசுரனை வதம் செய்தாள். பண்டாசுர வதம் முடிந்து தேவர்கள் அனைவரும் திகைத்து நின்றனர். காமாட்சியின் உத்தரவுப்படி 24 அட்சரங்களை 24 தூண்களாகவும், நான்கு வேதங்களை நான்கு சுவர்களாகவும் கொண்டு ஒரு மண்டபம் எழுப்ப, அந்தக் காயத்ரி மண்டபத்தின் நடுவில் சிறுமியாக அவர்களுக்குக் காட்சி தந்தாள்.

மறுநாள் காலையில் தோத்திரம் செய்ய கதவுகளைத் திறந்தபோது , அன்னை தென் கிழக்காக, நான்கு கரங்களுடன், பத்மாசன கோலத்தில் காட்சியளித்தாள். அவளது நான்கு திருக்கரங்களில் பாசம், அங்குசம், மலர் அம்பு, கரும்பு வில் முதலியவற்றுடன் காட்சி தந்தாள். அன்னையின் அழகையும், கருணையையும் கண்டு பக்திப் பரவசமாகி மகிழ்ந்த தேவர்களும், முனிவர்களும், அன்னையை நோக்கி, அங்கேயே அமர்ந்து உலகம் வாழ அருள் புரியுமாறு வேண்டிக் கொண்டார்கள். .அதுமுதல் அன்னை அங்கேயே அமர்ந்து அருளாட்சி புரிந்ததோடு தேவையான இடங்களில் அதே தோற்றத்திலும் பெயரிலும் அமர்ந்து உலகத்தை காத்தல் தொழிலை செய்துவரலானாள்.

அன்னை காமாட்சி மகாதேவி, திரிபுரசுந்தரி, ராஜராஜேஸ்வரி, காமேஸ்வரி, லலிதா, ஸ்ரீ சக்கர நாயகி என்னும் திருப்பெயர்களாலும் அழைக்கப்படுகின்றாள் .இக்காமாட்சிக்கு தொடர்புடைய புரவலராக அமைந்தது காஞ்சி காமகோடி பீடம்.

காமகோடி பீடம் வேத அபிவிருத்தி தமிழ் சம்ஸ்கிருதம் மற்ற உள்ளூர் மொழிகளை வளர்ப்பதோடு சித்தாந்தத்தை பரப்புதல் என்பதையும் வளர்த்துக் கொண்டிருந்தது.

ஏராளமான தென்னிந்தியர்கள் அதிலும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் ஜீவனத்துக்காகவும் விருத்திக்காகவும் தலைநகர் தில்லியில் குடியேறி இருப்பதை உணர்ந்த மகாபெரியவர் அருளாசி வழங்க புலம் பெயர்ந்த மக்களால் பெரியவா ஆசீர்வாதத்துடன் 1963 ஆண்டில் சங்கர அகாதெமி என்ற பதிவு செய்யப்பட்ட அமைப்பு டெல்லியில் துவங்கப்பட்டது.இதன் நோக்கம் நமது தர்மத்தின் கலை,கலாசாரம் ஆகியவற்றை வளரச் செய்தலாகும். சங்கர அகாதெமியில் ஆரம்ப காலத்தில் வேத பாடசாலையுடன் சம்ஸ்கிருத வகுப்புகளும் நடத்தப்பட்டன. சங்கர அகாதெமிக்கு அரை ஏக்கர் நிலம் ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தின் கிழக்கு வாசலுக்கு எதிராக டெல்லி அரசாங்கத்தால் நிலம் ஒதுக்கப்பட்டது.

இந்த இடத்திற்கு காமகோடி என்று பெரியவரால் பெயரிடப்பட்டு ஒரு சிறிய மண்டபம் கட்டப்பட்டு வேதம் பயிற்றுவிக்கப்பட்டது. இந்திரப்பிரஸ்தம் (?) எனப் போற்றப்பட்டு அழைக்கப்படுகின்ற தில்லியில் வேதசப்தம் ஒலித்து சாந்நித்தியம் பெற்று நெடுநாட்கள் வேதம் ஒலித்துக் கொண்டிருந்த இடத்தில் வேதங்களின் தாய் காமாக்ஷி அம்பாள் விக்ரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. காஞ்சி பெரியவர் வாக்குநாயகியான காமாக்ஷி அம்பாளை எதிரில் இருக்கும் ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தினை நோக்கி மாணவர்களுக்கு அருள் பாலிக்கும் படியாக கிழக்கு வாசலை நோக்கியவாறு அமைக்கச் சொன்னார்.

பின்னர் இது கோயிலாக மாற்றம்பெற்று 1986 அக்டோபர் 16- இல் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய சுவாமிகள் அருளாசியுடன் அவர் முன்னிலையில் முதல் மகா கும்பாபிஷேகம் நடந்தது , ஸ்ரீ காமாக்ஷி அம்பாளின் பிரதிஷ்டையின் போதே விசா கணபதி என்னும் மகாகணபதியையும் ஆதி சங்கர பகவத் பாதாளும் தனித்தனி சந்நிதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜை செய்யப்பட்டு வருகிறது.. 1997 நவம்பர் 9-ஆம் நாள் ஸ்ரீஜயேந்திர மற்றும் ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் ஸ்வர்ண பந்தனம் சார்த்தப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடை பெற்றது.

காஞ்சி காமகோடி பவனம் என்ற ஒரு பிரார்த்தனை மண்டபம் அமைப்பட்டு விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம், லலிதா சஹஸ்ரநாம பாராயணம், விளக்கு பூஜைகள் , சூரிய வழிபாடு , அசித்திர அஸ்வமேத பாராயணம், பஜனைகள், சத் சங்கங்கள், போன்ற கூட்டுப் பிரார்த்தனைகள் துவங்கப்பட்டு மக்கள் ஈடுபாடு அதிகரித்தது .

2008 டிசம்பர் 14 -இல் மூன்றாவது முறையாக மகாகும்பாபிஷேகம் ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகளால் நடத்தப்பட்டது . இந்த மூன்று மகா கும்பாபிஷேகங்களிலும் காஞ்சி ஆச்சாரியார்கள் நேரடியாக வந்து நடத்தி இருக்கிறார்கள் என்பது பெரும் சிறப்பாகும்.

இக்கோயிலில் காமாக்ஷி விசாகணபதி என்னும் மஹா கணபதி ஆதிசங்கர பகவத் பாதாள் ஆகிய மூன்று சந்நிதிகள் உள்ளன.

திருக்கோயிலில் சிவஆகமப்படி தினசரி அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெற்று வருகிறது. வெள்ளிக்கிழமை மாலை மகாமேரு அபிஷேகம், ரவிவார ஞாயிற்றுக்கிழமையன்று காலை சூரியநமஸ்கார பூஜை, செவ்வாய்க்கிழமை மாலை பெண்களால் லலிதாசஹஸ்ரநாம பாராயணம் சனி ஞாயிற்றுக் கிழமைகளில் அவ்வப்போது சோதிடக்கலை வகுப்புகள் ஏகாதசி திதியில் உலகநலன் வேண்டி மக்கள் சுகம்பெறவும் அசித்ர அஸ்வமேத பாராயணம், பெüர்ணமிகளில் நவாவர்ண பூஜை திருவிளக்கு பூஜை, கார்த்திகை பெüர்ணமியில், சங்கடஹர சதுர்த்தி, போன்ற வழிபாடுகள் மிகுந்த உற்சாகத்துடன் நடைபெறுகின்றன.

முக்கியமான இரண்டு நவராத்திரிகள் பிரம்மோற்சவம் போல் நடைபெறுகின்றன. ஸ்ரீராமநவமியை ஒட்டி வசந்த நவராத்திரியும் புரட்டாசிமாதம் சாரதா நவராத்திரியும் முக்கியமானவையாகும். அந்நாட்களில் காலை சிறப்பு ஹோமம் அபிஷேகம், மாலையில் சிறப்பு அலங்காரமும் நவாவரணபூஜையும் நடைபெறுகிறது, விநாயகர்சதுர்த்தியை முன்னிட்டு லட்சார்ச்சனையும் கணபதி ஹோமமும் நடைபெறுகிறது.

ஆதிசங்கரர், மகாபெரியவர், பெரிய பெரியவர் பெரியவர் மற்றும் போதேந்திராள் ஜயந்தி போன்றவையும் பெரிதும் மக்கள் பங்களிப்புடன் கொண்டாடப்படுகிறது,

புதுதில்லி ஆர்.கே புரத்தை ஒட்டியுள்ள முனிர்கா என்னும் பகுதியில் அமைந்துள்ள இக்கோயில் காலை 7 மணி முதல் 11 மணி வரையும் மாலை 5 மணி முதல் 8.30 மணிவரையும் தரிசனம் செய்ய முடியும் .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com