பொருநை போற்றுதும்! - 93

ஆதிச்சநல்லூர் பறம்பு என்று இப்போது அழைக்கப்படும் பகுதியில், கல்லும் மண்ணும் மேடுமான களர் நிலத்தில் புதைபொருள் ஆய்வை மேற்கொண்டுள்ளார் ஜகோர். தாழிகளும் எலும்புகளும் வெண்கலப் 
பொருநை போற்றுதும்! - 93

ஆதிச்சநல்லூர் பறம்பு என்று இப்போது அழைக்கப்படும் பகுதியில், கல்லும் மண்ணும் மேடுமான களர் நிலத்தில் புதைபொருள் ஆய்வை மேற்கொண்டுள்ளார் ஜகோர். தாழிகளும் எலும்புகளும் வெண்கலப் பாத்திரங்களும் இரும்புப் பொருட்களும்  மண்பாண்டங்களும் கிட்டின.  ஐம்பது வகையான பொருட்கள் என்று மாவட்ட கெஸட்டீர் பதிவு கூறுகிறது.  கிழக்கிந்தியக் கம்பெனியாரின் உதவியுடன் இப்பொருட்களை ஜெர்மனிக்குக் கொண்டுபோனார் ஜகோர். 

தன்னுடைய பயணங்கள் குறித்து  நீண்ட பதிவுகளைத் தந்திருக்கும் ஜகோர், ஆதிச்சநல்லூர் குறித்து எதுவுமே எழுதவில்லை. இருப்பினும், ஆதிச்சநல்லூரிலிருந்து அவர் கொண்டுபோன பொருட்களைப் பற்றிய தகவல்கள் அறிஞர்கள் பலரின் கவனத்தை ஈர்த்தன. பற்பல ஊர்களிலிருந்தும் 10000 -க்கும் மேற்பட்ட பொருட்களைக் கொண்டு சென்ற ஜகோர், ஆதிச்சநல்லூர் பொருட்களை "பெர்லின் ம்யூசியம் ஷியர் ஷெகர்குண்டெ' என்று அக்காலத்தில் அழைக்கப்பட்ட அருங்காட்சியகத்தில் வைத்தார். 

இப்போதைய நிலையில், எத்னலாஜிகல் மியூசியம் ஆஃப் பெர்லின் என்றழைக்கப்படுகிற இந்த அருங்காட்சியகத்தில், பற்பல பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டுவிட்டன.  மியூசியம் ஆஃப் ஏசியன் ஆர்ட் என்னும் பிரிவில் ஆதிச்சநல்லூர் பொருட்கள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. 

மானுடத் தோற்றத்தில் இனங்களின் பங்கு குறித்து ஆய்ந்துகொண்டிருந்த ஃபிரெஞ்சு நரம்பு அறிவியலாளர் எம். லூயி லபிக் என்பவருக்கு ஆதிச்சநல்லூர் எலும்புகள் குறித்துத் தெரியவர,  1903-04 -இல், இவ்வூருக்கு வந்த அவர், அகழ்வாய்வில் ஈடுபட்டு, மண்டையோடு உட்பட சில பொருட்களைக் கண்டறிந்தார். திராவிட இனத்தின் மண்டையோடு என்பதாக லபிக்கின் விளக்கம் இருந்தது. 

இந்த நிலையில், அப்போதைய மதராஸில், தொல்லியல் துறையில் மேற்பார்வைத் தொல்லியலராகப் பொறுப்பு வகித்த அலெக்சாண்டர், தம்முடைய அகழ்வாய்வுகளைத் தொடங்கினார். 

குறிப்பிட்ட இடத்தின் மேற்குப் பகுதி, உயர்ந்த மண்மேடு; மண்மேட்டின் வடக்குப் பகுதி மிக உயரமாகவும், தெற்குப் பகுதி சற்றே தாழ்வாகவும் இருந்தன. சரளை வெட்டும் இடமாக அவ்விடம் இருந்ததால், மக்கள் சரளை வெட்டும்போது,  சிற்சில தாழிகளையும் பாண்டங்களையும் வேறு பொருட்களையும் அவ்வப்போது கண்டுள்ளனர். ஜகோரும் லபிக்கும் வந்து சென்றபின்னர், அந்தப் பகுதியின் முக்கியத்துவத்தை உணர்ந்த அப்போதைய பிரிட்டிஷ் அரசு, அங்குச் சரளை வெட்டக்கூடாது என்று ஆணையிட்டது. குழுவினரின் ஆய்வுகள் இதன் பின்னர் தொடங்கின. அவருடைய ஆய்வுகளின் விளைவாகக் கிடைத்த தகவல்கள்:

 ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் கிட்டின; 

இவற்றில், வெகு நேர்த்தியாகத் தயாரிக்கப்பட்ட தாழிகள், பாத்திரங்கள், போர்க்கருவிகள், நகைகள், பெட்டிகள், திரிகைகள் இருந்தன;

நைந்த துணியின் பகுதிகளும் தானியங்களும் தாழிகளுக்குள் இருந்தன;

நேர்த்தியான பொருட்கள், உலோக வேலைப்பாடுகள், துணி, மண் வெட்டிகள் போன்றவற்றைக் கொண்டு, இங்கு வாழ்ந்த மக்கள், பாண்டங்கள் வனைவதிலும் உலோக வேலைப்பாடுகளிலும், கைத் தொழிலிலும், நெசவிலும், பயிர்த்  தொழிலிலும் சிறந்து விளங்கினர் எனக் கொள்ளலாம். 

குழுவினர், ஏறத்தாழ 30 பெரிய அளவு மட்பாண்டங்களைக் கண்டறிந்தனர். பெரும்பாலான பெரிய மட்பாண்டங்களுக்கு உள்ளே இரண்டு சிறிய மட்பாண்டங்கள் இருந்தன. பெரிய மட்பாண்டங்களுக்குள், அனைத்து வகையான மனித எலும்புகளும் காணப்பட்டன. இந்நிலையில்தான், பெரிய மட்பாண்டங்கள் என்பவை, முதுமக்கள் தாழிகள் (புதைதாழிகள்) என்பது உணரப்பட்டது. 

புதைதாழிகள் கோள வடிவில், சுமார் மூன்றடி விட்டத்தில் இருந்தன.  தாழியின் உயரம், விட்டத்தை விட சற்றே கூடுதல். அநேகமாக, அனைத்துத் தாழிகளின் கழுத்துப் பகுதியிலும் அழகான வேலைப்பாடுகள் உண்டு. எல்லாத் தாழிகளுக்கும் மூடிகள் இருந்திருக்கவேண்டும். தாழிகளின் மேல்பாகங்கள் உடைந்து, சரளைக் கற்களுக்கு இடையே ஓடுகள் போன்று சிதறிக் காணப்பட்டுள்ளன. 

ஒரு சில தாழிகளில், முழு எலும்புக் கூடுகளும் சிலவற்றில் சில எலும்புகளும் காணப்பட்டன. இன்னும் சிலவற்றில் எலும்புகள் இல்லை. எனவே, புதைக்கும்போது வெவ்வேறு வகையாகப் புதைத்திருக்கக்கூடும் என்று அறிஞர்கள் கருதினர். முழு எலும்புக்கூடு இருந்த தாழிகளில், உடல் முடக்கி வைக்கப்பட்டிருந்ததாகக் கொள்ளலாம். பெரிய பாண்டங்களுக்குள், சிறிய பாண்டங்கள் என்பது, இறந்தவர் பயன்படுத்திய பொருட்களையும், அவருக்குத் தேவை (போகும் வழிக்கு) என்று கருதப்பட்ட உணவையும் வைத்த கலன்கள் என்று விளக்கப்பட்டது. 

பித்தளைப் பொருட்களில், ஜாடிகளும் வளையங்களும் காணப்பட்டன. எல்லாவற்றிலும் மிக நேர்த்தியான வேலைப்பாடுகள் இருந்தன. பித்தளைப் பொருட்கள் பெரும்பான்மையும் தாழிகளின் உள்பகுதியிலேயே இருந்தன. எனினும், பித்தளைப் பொருட்களின் எண்ணிக்கை அருகியே இருந்ததால், பித்தளை அவ்வளவாகக் கிடைக்கவில்லை அல்லது பித்தளைப் பயன்பாடு அவ்வளவாக இருந்திருக்கவில்லை என்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டனர். தாழிகளின் வெளிப்புறங்களில், குத்துவாள், கைக்கோடரி, வெட்டுவாள், ஈட்டி, மண்வெட்டி, விளக்கு போன்றவை இருந்தன. இவற்றின் நுனிப் பகுதிகள் கீழ்நோக்கி இருந்தன. இறந்தவர் பயன்படுத்திய போருட்களாக இவை இருந்திருக்கும்; உறவினர்கள், இறந்தவரின் நினைவாக இவற்றை அப்பகுதியில் மண்ணில் செருகியிருக்கக்கூடும். 

வெகு சில தாழிகளில், நெற்றிச் சுட்டி போன்றதொரு அணி, தங்கத்தால் செய்யப்பட்டுக் காணப்பட்டது. சில சுட்டிகளில் கோடுகளும் புள்ளிகளுமான வேலைப்பாடு காணப்பட்டது. சிலவற்றில் அலங்காரம் இல்லை.  இறந்தார்க்குச் செய்யும் பட்டம் கட்டுதல் என்னும் சடங்கில் பயன்படுத்தப்பட்ட பொன் பட்டங்களே இவை. பட்டங்களின் இரு நுனிகளிலும் கயிறு அல்லது கமி கட்டுவதற்கான சிறு துளைகளும் காணப்பட்டன. 

இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கையில், சுமார் 10000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த தமிழ்ச் சமுதாயத்தின் வாழ்க்கை முறைகளையும் உலோகப் பயன்பாட்டையும் கைத்தொழில் நேர்த்தியையும் எடுத்துக்காட்டுவதாக ஆதிச்சநல்லூர் ஆய்வுகள் அமைந்தன. 

 (தொடரும்...)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com