Enable Javscript for better performance
கட்டியம் சேவித்தல்- Dinamani

சுடச்சுட

  

  கட்டியம் சேவித்தல்

  By -எஸ். ஸ்ரீதுரை  |   Published on : 22nd May 2020 04:01 PM  |   அ+அ அ-   |    |  

  vm3

  "பழமறைகள் முறையிடப் பைந்தமிழ்ப் பின்சென்ற பச்சைப் பசுங்கொண்டல்' என்று திருமால் போற்றப்படுகிறார். அவரது திருவீதியுலா நிகழ்வுகளில், திவ்வியப் பிரபந்தம் ஓதுபவர்கள் அவருக்கு முன்னால் செல்ல, தேனினும் இனிய அத் தமிழோசையைத் திருச்செவியேற்றபடி அவர்களுக்குப் பின்னால் எம்பெருமான் எழுந்தருள்கிறார். அவருக்கும்  பின்னால் வடமொழி வேதம் ஓதுபவர்கள் வருகிறார்கள். 

  தமிழ்மொழியின் இனிமையினால் திருமால் ஈர்க்கப்படுகிறார் என்பது முற்றிலும் உண்மை. வைணவத் திருக்கோயில்களில் திவ்வியப் பிரபந்தப் பாசுரங்கள் நாள்தோறும் ஓதப்படுகின்றன. திருப்பாவையும், திருப்பல்லாண்டும் அன்றாடம் ஓதப்படுவதுடன், திருவிழாக்காலங்களிலும் ஆழ்வார்கள் பாடியருளிய பாசுரங்கள் ஓதப்படுகின்றன. மார்கழி மாதத்தில் வரும் பகல்பத்து மற்றும் இராப்பத்து உற்சவங்களில் நாலாயிரம் முற்றோதல் நடைபெறுகிறது. 

  இவை போதாவென்று, பெருமானுக்குத் திருமஞ்சனம் (அபிஷேகம்) நிகழ்த்தப்பெறும்போது, "கட்டியம் சேவித்தல்' இடம்பெறுகிறது (ஓதுதல் என்பதை சேவித்தல் என்று கூறுவது வைணவ மரபு). இராமாநுஜர் போன்ற அவதாரப் புருஷர்களுக்கும் கட்டியம் உண்டு. 

  அரசர்கள் மற்றும் பெரும் புலவர்களின் அருமை பெருமைகளைக் கட்டியங்காரார்கள் எடுத்துக்கூறுவது போன்று, திருமஞ்சனம் செய்யப்படும் எம்பெருமானின் பேரழகையும் பெரும்புகழையும் எடுத்துக்கூறி அவரைத் தீர்த்தமாடும்படி விண்ணப்பம் செய்யும் கட்டியத்தை அவ்வத் திருக்கோயிலின் முதல் மரியாதைக்குரிய பெரியவர் (முதல் தீர்த்தக்காரார்) ஓதுவார். 

  திருமேனியில் சந்தனக் காப்புடனும், திருக்கழுத்தில் துளசி மாலையுடனும் விளங்கும் எம்பெருமானின் அழகு, வீரம், வெற்றி, கருணை முதலியவற்றை வியந்து போற்றும் இக்கட்டியம் வடமொழியும் தமிழ்மொழியும் கலந்த மணிப்பிரவாள நடையில் இருந்தாலும், அதன் பெரும்பாலான பகுதி திவ்வியப் பிரபந்தப் பாசுரங்களால் தொடுக்கப்பட்டிருக்கும். 

  "உயர்வற உயர்நலம் உடைய பெருமாள்; மயர்வற மதிநலம் அருளிடும் பெருமாள்; குன்றமேந்திக் குளிர்மழை காத்த பெருமாள்; அகலகில்லேன் இறையுமென்று அலர்மேல்மங்கை உடை மார்பா..' என்ற நம்மாழ்வாரின் திருவாய்மொழி, "கரியவாகிப் புடைபரந்து மிளிர்ந்து செவ்வரியோடி நீண்ட அப்பெரியவாய கண்கள் என்னைப் பேதைமை செய்தனவே' என்ற திருப்பாணாழ்வாரின் அமலனாதிபிரான், பெரியாழ்வார் திருமொழி, ஆண்டாளின் நாச்சியார் திருமொழி, திருமங்கையாழ்வாரின் பெரிய திருமொழி ஆகியவற்றிலிருந்தும் பொருத்தமான பாசுரங்களின் சிறந்த வரிகளைத் தேர்ந்தெடுத்துத் தொடுத்த மாலையாக இக்கட்டியம் அமைந்திருக்கும்.

  எம்பெருமானின் பத்து அவதாரங்களிலும் நடைபெற்ற திருவிளையாடல்களையும் குறிப்பிடும் பாசுரங்கள் அவற்றைக் கேட்போருடைய காதுகளையும் மனங்களையும் கவரும் வகையில் கையாளப்பட்டிருக்கும்.  எடுத்துக்காட்டுக்கு,     ஸ்ரீராமபிரானின் திருமேனிக்குத் திருமஞ்சனம் நடைபெறுகின்றது என்றால், குலசேகராழ்வாரின் பெருமாள் திருமொழிப் பாசுரங்கள் நேர்த்தியாக ஓதப்படும். மேலும், வேதாந்த தேசிகர் போன்ற வைணவ குருமார்கள் இயற்றிய தமிழ்ப் பாசுரங்களும் எடுத்தாளப்படும். 

  "உத்தமவமர்த்தலம் அமைத்ததோ ரெழிற்தனுவின் உய்த்த கணையால், அத்திறவரக்கன் முடிபத்தும் ஒருகொத்தென உதிர்த்ததனால் உண்டான விடாய் தீரவோ; அளந்திட்ட தூணை அவன்தட்ட ஆங்கே வளர்ந்திட்ட சிங்கவுருவாய் உளந்தொட்டிரணியன் ஒண்மார்வகலம் பிளந்திட்ட சிரமம் தீரவோ...' என்றெல்லாம் செவிக்கினிமையாகத் தெறிக்கின்ற சொற்களால் எம்பெருமானின் திருவுள்ளத்தைக் குளிரச் செய்து, உடன் வாசனாதி திரவியங்கள் கலந்த நன்னீரால் அவள் திருமேனியையும் குளிர்விக்கும் கட்டியம் ஒலிக்கின்ற திருமஞ்சனம் ஆழ்வார்களின் ஈரத்தமிழ்ப் பாசுரங்களை நேசிக்கின்ற ஒவ்வொருவரும் நேரில் கேட்டும் கண்டும் இன்புற வேண்டிய பெருநிகழ்வு ஆகும்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  kattana sevai