Enable Javscript for better performance
பசு காட்டிய பாதை!- Dinamani

சுடச்சுட

  

  பசு காட்டிய பாதை!

  By -எஸ்.வெங்கட்ராமன்  |   Published on : 22nd May 2020 04:00 PM  |   அ+அ அ-   |    |  

  vm2


  சென்னையில் கடலில் சங்கமமாகும் கூவம் ஆறு ஒரு காலத்தில் மிகவும் புகழ்பெற்று, புனிதத்தன்மையுடன் போற்றப்பெற்று, “பாலிநதி' என்ற பெயரில் அழைக்கப்பட்டது. தமிழ்நாட்டில் சுமார் 70 கி.மீ. பயணிக்கும் இந்த கூவம் நதிக்கரையில் பல வழிபாட்டுத் தலங்கள் உள்ளன. அதில் ஒன்றுதான் இலம்பையங் கோட்டூர். தேவாரத் திருப்பதிகம் பெற்ற தொண்டை நாட்டுத் தலங்களில் 13-ஆவது தலம். திருஞான சம்பந்தர் அருளிய திருப்பதிகம் பெற்றது.

  மிகச் சிறிய வயதிலேயே பல திருக்கோயில்களுக்குச் சென்று பதிகங்களைப் பாடி அருளிய ஞானசம்பந்தப் பெருமான் தல யாத்திரையின் ஒரு பகுதியாக இப்பக்கத்தே வருங்காலத்து, தான் கோயில் கொண்டுள்ள இலம்பையங் கோட்டூருக்கு அவரை வரவைக்க விழைந்த இறைவன், முதலில் ஒரு சிறு பிள்ளை போலவும் (பாலகன்), பின் ஒரு முதியவர் போலவும் வழிமறித்து இக்கோயிலை உணர்த்த, உடன் வந்த அடியார்கள் உணரவில்லை. 

  பின்பு வெள்ளைப் பசு வடிவில் வந்து சம்பந்தர் பயணித்த சிவிகையை முட்டி நிற்க, அப்போது சம்பந்தர் வியந்து அப்பசு செல்லும் பாதை வழி பயணிக்க தலத்தின் அருகில் வந்ததும் பசு மறைந்ததாம். 

  மூலவரை தரிசித்த ஆளுடைப்பிள்ளையார் சிவானந்த அனுபவத்தில் திளைத்து பத்துப் பாடல்கள் கொண்ட ஒரு பதிகத்தை அருளினார். அதில் மூன்றாவது பாடலின் ஆரம்பத்தில் "பாலனாம், விருத்தனாம், பசுபதி தானாம்...' என்று தொடங்கி சிவபெருமான் தன்னை ஆட்கொண்ட மாண்பினை, கருணையை போற்றுகின்றார். 

  இத்தல பதிகத்தில்தான் ஞானசம்பந்தர் "எனதுரை தனதுரையாக' என்ற தொடரை பாடல்தோறும் அமைத்து பாடியுள்ளார். அதாவது தான் கூறும் உரைகள் அனைத்தும் தன்னுள் உயிர்ப்பாய் நின்று ஒளிரும் சிவபெருமானின் சிறப்புடைய உரைகளே என்ற உயரிய கருத்தினை வெளிப்படுத்தியது மிக அபூர்வமே. திருநாவுக்கரசர் திக்ஷத்திரக்கோவைத் திருத்தாண்டகத்தில் இத்தலத்தைக் குறித்து பாடியுள்ளார்.

  ஞானசம்பந்தப் பெருமாள் வருகைக்கு முன், தல வரலாற்றுச் சிறப்பு கீழ்க்கண்டவாறு இருந்தது; ஒன்று: தேவர்களைக் காப்பதற்காக சிவபெருமான் தாருகாக்ஷன், கமலாக்ஷன், வித்யுன்மாலி ஆகிய மூன்று அசுரர்களை அழிக்க (திரிபுர சம்ஹாரம்) தேரின் மீது புறப்பட்ட போது, தேரின் கூவரமாகிய ஏர்க்கால் முறிந்து தேர் சரிய, அதனை சமநிலைப்படுத்தி நிற்க ஏதுவாக தன் வில்லை ஊன்றி நின்றாராம்.

  அந்த இடமே கூவம் எனப்படும் திருவிற்கோலமாகும். அவ்வாறு  அவர் வில்லை ஊன்றி நிற்கையில் அவர் தலையில் அணிந்திருந்த கொன்றை மாலை சற்று தூரத்தில் கீழே விழுந்தது. பின்பு சுவயம்பு லிங்கமாக மாறியதாம். அதுவே இலம்மையங் கோட்டூரில் கோயில் கொண்டுள்ள மூலமூர்த்தி தீண்டாத் திருமேனி. வெளிர் செம்மண் நிறத்துடன் காட்சியளிக்கின்றது. தேவர்களைக் காக்க போர் புரிந்ததால் இறைவனுக்கு தெய்வநாயகப் பெருமான் என்ற 
  திருநாமம் அமைந்தது.

  மற்றொரு வரலாற்றின்படி, தேவலோக நடன மங்கையர்கள் அரம்பையர் முதலானோர் (ரம்பை, ஊர்வசி, மேனகை, திலோத்தமை, காமுகி, காமவர்தினி, சுமுகி, சுந்தரி) தங்களின் இளமை என்றும் மாறாது நிலைத்திருக்க இத்தல இறைவனை வழிபட்டு அப்பேற்றினைப் பெற்றனர். அதனால் இத்தலம் "அரம்பையங் கோட்டூர்' எனவும் அழைக்கப்படுகிறது. 

  அரம்பையர் பிரதிஷ்டை செய்து பூஜித்த ஸ்ரீ ரம்பாபுரீஸ்வரர் (16 பட்டையுடன் கூடிய சிறிய லிங்கம்) வழி பாட்டில் உள்ளது. மேலும் சந்திர பகவான் இத்தலத்தில் வழிபட்டதால் சுவாமிக்கு சந்திரசேகர் எனவும் திருநாமம் உண்டு. ஸ்தல தீர்த்தம் "சந்திர தீர்த்தம்' என வழங்கப்படுகிறது. இதைத்தவிர "ரம்பாபுரி தீர்த்தம்' கோயில் அருகே உள்ளது. மரமல்லிகை மரம் தல விருட்சமாகும்.

  தட்சிணாமூர்த்தி: இக்கோயிலின் கோஷ்டத்தில் ஞானயோக தட்சிணாமூர்த்தியாக அருள்புரிகின்றார். அவர் சின் முத்திரையை இதயத்தில் வைத்திருப்பது போன்ற சிற்ப அமைப்பு மிகவும் பழைமையானது. அழகிய கலை நயம் உள்ளது. வேண்டிய வரங்களை அளிப்பவர்.

  அம்பாள் சந்நிதி: இத்தலத்தின் இறைவி கனககுசாம்பிகை, கோடேந்து முலையம்மை, கதிர் முலையம்மை என பல திருநாமங்களில் அழைக்கப்படுகின்றாள். 1932-இல் காஞ்சி மகாசுவாமிகள் விஜயம் செய்து அனுக்கிரகித்துள்ளார்கள். அவர் அருளியபடி, அம்பாள் சந்நிதியில் ஸ்ரீ சக்ரப் பிரதிஷ்டையாகியுள்ளது. மிகவும் சாந்நித்யத்துடன் திகழும் அம்பிகையை மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும்.

  காஞ்சி ஆசார்யர்கள் மூவரும், திருவாவடுதுறை ஆதீனம், தருமபுர ஆதீனம் மடாதிபதிகள் இத்தலத்திற்கு விஜயம் செய்து பெருமை சேர்த்துள்ளார்கள்.

  கல்வெட்டுக்களில் இத்தலம் "பையங்கோட்டூர்' எனவும், "சதுர்வேதி மங்கலம்', "இலம்பையங்கோட்டூர்' என்றும் குறிக்கப்படுகிறது. இறைவன் பெயர் "இலம்பையங் கோட்டூர் உடைய நாயனார்' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வூர் "ஏம்பாலம்பா' என மருவித் தமிழில் இலம்பையங் கோட்டூர் என வழங்கப்படுகிறது. 

  வழிபாட்டு பலன்கள்: ஞான சம்பந்தப் பெருமான் அருளியபடி இத்தலத்திற்கு வந்து அத்தல தேவார திருப்பதிகங்களை பாடி வழிபடுவோர்க்கு எடுத்த இப்பிறவியை மேன்மையடையச் செய்து, இனி பிறவாப் பெருநெறிக்கு இட்டுச் செல்லும் பேற்றினை அருளுகின்றான் இறைவன்.

  அரம்பையர் பிரதிஷ்டை செய்த ஸ்ரீரம்பாபுரீஸ்வரரை ரம்பாதிருதியை அன்று (இவ்வாண்டு மே 25) தரிசனம் செய்து வழிபட்டால் என்றும் இளமையுடன் இருக்கும் பேறு கிடைக்கும்; இழந்ததைத் திரும்பப் பெறலாம். அதாவது, அகத்தெளிவு ஏற்பட்டு மனம் என்றும் இளமையாக இருக்கும். அதனால் வாழ்வு சிறக்கும் என்று பொருள் கொள்ள வேண்டும். 

  தலத்திற்கு செல்லும் வழி: ஸ்ரீ பெருமந்தூருக்கு மேற்கே 25 கி.மீ. தூரம் சென்னையிலிருந்து பூவிருந்தவல்லி வழியாக தண்டலம், வளர்புரம், பேரம்பாக்கம், நரசிங்கபுரம் வழியாக இத்தலத்தை அடையலாம். 

  தகவல் தொடர்பிற்கு: ஆலய சிவாச்சாரியார் செல்லிடப்பேசி: 9600043000 (பிரம்மேசம்) மற்றும் 9715710192 (கருணாகரன்).

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  kattana sevai