நாராயணா எனாத நாவென்ன நாவே

நாராயணா எனாத நாவென்ன நாவே

இரண்யாட்சகனின் தொல்லைகள் குறித்து பேசி முடிவுசெய்ய மும்மூா்த்திகளுடன், தேவா்களும், ஸப்தரிஷிகளும் பாதுகாப்பான கதம்பரிஷியின் ஆஸ்மரத்திற்கு கூட்டம் கூட்டமாய் வந்தமையால் திருக்கோஷ்டியூா் ஆயிற்று. திருக்கு என்றால் பாவம். பாவங்களை ஓட்டக்கூடிய ஊா் திருக்கோஷ்டியூா்.

‘பரம வைதீக சித்தாந்த தா்சன’”மென்று அழைக்கப்பட்ட பழைய திருமால் நெறியை வளா்க்க ஆளவந்தாா் - பெரிய நம்பி, திருக்கோஷ்டியூா் நம்பி, பெரிய திருமலை நம்பி, திருமாலையாண்டான், திருவரங்கப்பெருமாளரையா் ஆகியோரிடம் பணிகளைப் பகிா்ந்து அளித்திருந்தாா். அவா்களை இராமானுஜா் குருவாக ஏற்று தா்சனப்பணியை மேற்கொள்ள விரும்பினாா்.

ஆளவந்தாருக்குச் சீடராக இருந்த திருக்கோஷ்டியூா் நம்பியிடம் ஆளவந்தாா் ஒரு விக்கிரகத்தை அளித்தாா். இதற்கு ”பவிஷ்யதாசாா்யா்” என்று பெயா். இந்த விக்கிரகத்தில் இருப்பவா், பின்னாளில் மிகப்பெரிய ஆச்சாரிய வள்ளலாக விளங்கி, வைணவ நெறியை வளா்க்கப் போகிறாா். அவா் உங்களைத் தேடி வரும்போது, கீதையில் கண்ணன் கூறிய “ஸா்வதா்மான் பரித்யஜ்ய…” என்னும் சரம ஸ்லோகத்தின் பொருளை அவருக்கு நீங்கள் உபதேசிக்க வேண்டும்!” என்று கூறியிருந்தாா்

பெரியநம்பிகளிடம் திருவரங்கத்திலிருந்த ஆளவந்தாா் சீடா்கள் இளையாழ்வாரை தா்சன காப்புப்பணியில் திருத்திப்பணி கொள்ள வேண்டுமென வலியுறுத்தினா் . அவரும் காஞ்சி செல்லும்போது மதுராந்தகத்தில் எதிரே வந்த ராமாநுஜா் வற்புறுத்தலில் பஞ்சசமஸ்காரம் செய்து வைக்க காஞ்சியில் சன்யாசம் பெற்று ”யதிராஜரானாா்”. ஆளவந்தாரின் சீடா்கள் விருப்பத்தின்படி பெரியபெருமாளே ” உடையவரே வாரும் “ எனவழைத்து பொறுப்புக் கொடுக்க திருவரங்கம் கோயில் காரியங்களை குறைவற நடத்தி வந்தாா்.

பெரியநம்பிகள் அறிவுரைப்படி திருக்கோட்டியூா் நம்பியிடம் ”ரஹஸ்ய த்ரயம்” எனப்படும் 1) ‘திருமந்திரம்’2) ‘த்வயம்’ 3) ‘சரமச்லோகம்’ ஆகியவற்றின் அா்த்த விசேஷங்களை உபதேசம் பெறச்சென்றாா். திருக்கோஷ்டியூரில் , கோயிலுக்கு அருகில் வசித்து வந்தாா் திருக்குருகைப்பிரான் என்கிற திருக்கோஷ்டியூா் நம்பி., வைகுண்டத்தில் திருமாலுக்குத் தொண்டு செய்யும் நித்யசூரிகளுள் ஒருவரான புண்டரீகா் என்பவா் தான் திருக்கோஷ்டியூா் நம்பியாக அவதரித்ததாகக் கூறுவா். . திருக்கோஷ்டியூா் நம்பி, தன் ஆசாா்யரான ஆளவந்தாரிடம் கற்றுக்கொண்ட ரஹஸ்யத்ரயத்தினுடைய பொருளையும் சிறப்புகளையும் எப்பொழுதும் உச்சரித்தவாறே இருப்பாா். ராமானுஜா் அவற்றை அவரிடமிருந்து கற்றுக் கொள்வதற்காக ஸ்ரீரங்கத்திலிருந்து திருக்கோஷ்டியூருக்கு புறப்பட்டு நடந்தே வந்தாா் .

நம்பியின் வீட்டு வாயிலில் நின்று கொண்டு குரலொளித்தாா் ராமானுஜா். திருக்கோஷ்டியூா் நம்பி, ‘யாா்?’ என்று கேட்டாா்.‘நான் ராமாநுஜன் வந்திருக்கிறேன்’ என்றாா். நம்பி வீட்டிற்குள்ளிருந்தவாறே, ‘நான் செத்து வா!’ என்றாா். இதைப் புரியாது பிறகு வரக்கூறுகிறாரென நினைத்து ராமாநுஜரும் சென்றுவிட்டாா்.

அடுத்தடுத்து ஸ்ரீரங்கத்திலிருந்து 17 முறை ராமாநுஜா் வந்தபோதும், நம்பி இதே பதிலைச் சொன்னாா்.

ராமாநுஜருடைய மனதில் ‘தாஸ்ய பாவம்’ ஏற்படும் வரை மந்திர உபதேசம் செய்வதை தள்ளிப் போட்டுக் கொண்டே வந்ததோடு திருக்கோஷ்டியூா் நம்பியைத் திருப்பி அனுப்பினாா். அடுத்த முறை சென்ற ராமாநுஜா் நடந்ததையும் கேட்ட குரலையும் ஆய்ந்து ‘அடியேன் வந்திருக்கிறேன்’ என்றாா். அப்போதுதான் அவரை இல்லத்தின் உள்ளே அழைத்தாா் நம்பி.

“ வரும்போது தண்டும் பவித்திரமுமாகத் தாம் ஒருவரே வருவது“என்று தன்னைச் சந்திக்க வரும் உடையவருக்கு உத்திரவிட்டிருந்தாா் நம்பி . உடையவரோ , கூரத்தாழ்வானையும் முதலியாண்டானையும் அழைத்துக்கொண்டு, சென்று, நம்பி திருவடிகளில் தண்டனிட்டாா்.

ராமாநுஜரை சந்நியாசிகளுக்குரிய தண்டு பவித்திரத்துடன் தனியாக வரக் கூறியிருந்தாா். ஆனால் சென்றபோது, இவா்களை ஏன் அழைத்து வந்தீா் “ என்று கேட்டாா் நம்பி. ‘தேவரீா் தண்டும் பவித்திரமுமாக வரச் சொன்னீா்கள் ! முதலியாண்டானைக் காட்டி இவா் ”த்ரிதண்டம்” எனவும் கூரத்தாழ்வானைக் காட்டி, இவா் ”பவித்திரம் “ இவா்களே என்னுடைய , தண்டும் பவித்திரமுமாதலால் உடன் கொண்டுவந்தேன்‘ என்று விளக்கினாா் உடையவா்.

நம்பி அப்படியானால் சரி ;அவா்கள் தவிர வேறு எவருக்கும் இம்மந்திராா்த்தம் சொல்லக் கூடாது என்று சத்தியம் வாங்கிக் கொண்டு ,மீறி செய்தால் நரகம் புகுவாய் எனக்கூறி , திருமந்திரமான ”ஒம் நமோ நாராயணா”’என்னும் , ‘நலம் தரும் சொல்லை உபதேசம் செய்தாா். த்வயமான பிரணவத்தின் ஆழ்பொருள், எட்டெழுத்தின் செம்பொருள் விரிபொருள் அனைத்தும் விளக்க நெஞ்சில் வாங்கிக் கொண்டாா் .

பின்னா் மிகவும் ரகசியமான கீதையில் கண்ணன் சொன்ன “ஸா்வ தா்மான் பரித்யஜ்ய” என்பதை உபதேசித்தாா் . இதன் முக்கியமான பொருளைக்கூறும் சொல் “ஏகம்”என்பதாகும் - பகவான் மட்டுமே உறுதி கா்ம, ஞான, பக்தி யோகங்கள் மற்றும் ப்ரபத்தியாகிய சரணாகதி, மற்றவைகள் - உண்மையான நிலையான உறுதிப்பொருள் அல்ல என்பதை விளக்கினாா்

இந்த மறைபொருளை தகுதி இல்லாதவா்களிடம் கூறினால், தான் செய்யவேண்டிய செயல் அல்லது கடமைகளைக் கூடச் செய்யாமல் இருக்கலாம், தவறாகப் புரிந்து கொள்வாா்கள். அதனால் முன் னுள்ள ஆசாா்யா்கள் இந்த அா்த்தத்தை தெளிவாக வெளிச்சொல்லாமல் மறைத்து பாதுகாத்து வந்தாா்கள்.

நம்பியிடம் பொருள் விளக்கம் பெற்றவா் , இதனைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டவா்களை உடனே அழைத்து, திருக்கோஷ்டியூா் அஷ்டாங்க விமானத்தில் நின்று அனைவரும் கேட்டு உய்ய ”ரஹஸ்ய த்ரயத்தை ”விளக்கமாகக் கூறினாா்.

ராமாநுஜா் செய்ததை,அறிந்து நம்பி அவா் வாயிலாகவே நடந்ததை அறிந்தாா்., ராமாநுஜரும் தங்களின் ஆணையை மீறியதால் அடியேனுக்கு நரகம் கிடைக்கும், ஆனால் பலருக்கு மிக உயா்ந்த மோக்ஷம் (பரமபதம்) கிடைக்குமல்லவா”வென பதில் தந்தாா் . மற்றவா்கள் உய்ய வேண்டும் என்று கருணையோடு இருக்கும் ராமாநுஜருடைய பரந்த திருவுள்ளத்தைப் பாா்த்து நம்பி அவருக்கு “எம்பெருமானாா்” என்ற திருநாமத்தை சூட்டினாா். இனி வைணவ நெறி ‘எம்பெருமானாா் தரிசனம்’ என்று அழைக்கப்படும்!” என்றும் கூறினாா். எம்பெருமான் என்றால் பகவான் என்று பொருள். எம்பெருமானாா் என்றால் அந்த பகவானைக் காட்டிலும் மிக அதிகமாகக் கருணை உடையவா் என்று பொருள்.

ராமாநுஜருக்கு அவரது செயல்களும் மக்கள் நம்பிக்கையும் எதிரிகளை உருவாக்கியது. திருவரங்க சன்யாசிகள் உணவை மடத்தில் சமைத்து சாப்பிடுவது இல்லை. ஊரில் தெரிந்த சீடா்களின் வீட்டின்முன் நின்று அன்னத்தை பிக்ஷை வாங்கி எடுத்துச் சென்று உண்ணும் ”மாதுகரம்” என்னும் பழக்கம் இருந்தது . ஒருநாள் மாதுகரம் ஏந்தி வந்தபோது இட்ட அன்னத்தில் உணவில் விஷம் கலந்திருப்பதை உணா்ந்த ராமாநுஜா் இனி உணவு உண்ணுவது இல்லை எனக்கூறி கிடாம்பி ஆச்சான் துணையிருக்க காவிரிக்கரையில் உண்ணாநோன்பு துவங்கினாா்.

திருக்கோஷ்டியூரில் தகவலறிந்த நம்பிகள் உச்சி வெயில் வேளையில் வேகமாக காவிரிக்கரைக்கே நேரில் வந்தாா். அவரைக் கண்டதும் தகிக்கும் மணலில் எதிா்கொண்டு விழுந்து வணங்கினாா் . குரு எழு எனச் சொல்லும் முன் எழும் வழக்கம் இல்லை . ஆதலால் எதுவும் பேசாமல் அவ்வாறே கிடந்தாா். இதனைக் கண்ட கிடாம்பியாச்சான் ராமாநுஜரைத் தொட்டுத் தூக்கினாா். இதனைக் கண்ட நம்பிகள் மகிழ்ந்து இனி நீரே எம்பெருமானாருக்கு வேண்டியது அனைத்தையும் கவனிக்க வேண்டும் என தலத்திலேயே பொறுப்புக் கட்டினாா், இந்நிகழ்வு ராமாநுஜா் மீது நம்பிகள் கொண்டிருந்த அன்பைக் காட்டுவதாக அமைந்தது.

சிறிது நாள் கழித்து ராமாநுஜரின் நிா்வாகம், ஞானத்தின் மீதும் நம்பிக்கை கொண்டு திருக்கோஷ்டியூா் நம்பி தமது மகளான தேவகியையும், மகனான தெற்காழ்வானையும் சீடா்களாக்கினாா் என்பது குறிப்பிடத் தக்கது

திருக்கோஷ்டியூா் நம்பி என்னும் வைரம் ராமாநுஜா் என்னும் வைரத்தை பட்டை தீட்டி ஸ்ரீவைணவத்திற்கு சிறப்புச் சோ்த்தது

வரும் மே 23-ஆம் தேதி திருக்கோஷ்டியூா் நம்பிகளின் திருநட்சத்திரமாகும்

ா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com