பாண்டுரங்கனுக்கு பழக்காப்பு

மஹாராஷ்டிரா மாநிலத்தில் பந்தர்பூர் என்னுமிடத்தில் விட்டோபா மந்திர் என்றும் ஸ்ரீவிட்டல் ருக்மணி மந்திர் என்று ராதேயன் கிருஷ்ணனுக்கும் ருக்மணிக்கும் ஒரு கோயில் சந்திரபாகா நதியின் தென்கரையில் உள்ளது.
பாண்டுரங்கனுக்கு பழக்காப்பு

மஹாராஷ்டிரா மாநிலத்தில் பந்தர்பூர் என்னுமிடத்தில் விட்டோபா மந்திர் என்றும் ஸ்ரீவிட்டல் ருக்மணி மந்திர் என்று ராதேயன் கிருஷ்ணனுக்கும் ருக்மணிக்கும் ஒரு கோயில் சந்திரபாகா நதியின் (பீமா நதி) தென்கரையில் உள்ளது. இக்கோயிலினது வரலாற்றின் தொடக்கம் 12 அல்லது 13-ஆம் நூற்றாண்டு என கணக்கிட்டாலும் 17-ஆம் நூற்றாண்டிலிருந்து தான் சரியான கணக்கு தெரியவருகிறது. 

ஜானுதேவ் மற்றும் சத்யவதியின் மகனாகப் பிறந்தவன் புண்டலீகன். இவர்கள் தண்டிர் வனத்தில் வாழ்ந்து வந்தார்கள். மகனுக்கு திருமணம் செய்து வைக்க ஆசைப்பட்ட பெற்றோரின் ஆசையை ஏற்று புண்டலீகன் ஒரு மங்கையை மணந்தான். பெற்றோரின் ஆசையில் மண்விழுந்தது. 

அதுவரை பெற்றோரை மதித்து நடந்த மகன், மருமகளின் வருகையால் மனம் மாறி தாய், தந்தையை வதைக்க ஆரம்பித்தனர். 

மனம் ஒடிந்த முதியவர்கள் காசிக்குச் சென்று உயிர் உள்ளவரை இருந்து, இறந்துவிடலாம் எனக் கிளம்பினர். 

அப்போதும் விடாமல் குதிரைவண்டியில் அவர்களைப் பின்தொடர்ந்தனர் தம்பதியினர். காசி செல்லும் வழியில் தங்கிய ஓர் இளங்காலையில் தூக்கம் வராமல் சற்று காற்றாட நடக்க ஆரம்பித்த புண்டலீகன்; ஒரு குடிசையில் பரபரப்பாக சுத்தம் செய்யும் பணியில் விகாரத் தோற்றத்துடன் கூடிய சில கன்னிகைகள் வேலை செய்து கொண்டிருப்பதைப் பார்த்தான். 

அனைவரும் வேலையை முடித்து சூரிய உதயத்திற்கு முன் வெளியில் வந்து அங்கு தவத்திலிருந்த குக்குடமுனிவரை வணங்கினர். 

விகாரத்தோற்றத்தில் இருந்த அனைவரும் அதிரூப சுந்தரிகளாய் மாற்றமடைந்தனர். ஆச்சர்யப்பட்ட புண்டலீகன் அம்மாதரை அணுகி, தாங்கள் அனைவரும் யார் என வினவ; ""பஞ்ச நதிகளான கங்கா, யமுனா, காவிரி, கோதாவரி மற்றும் சரஸ்வதி ஆவோம். எங்கள் மீது பக்தர்கள் மூழ்கி எழுவதால் அவர்களின் பாவச்சுமை எங்களிடம் சேர்ந்து விகாரமானோம். இதிலிருந்து விடுபடும் மார்க்கத்தை இறைவனிடம் வேண்டினோம். 

""ஆண்டவனும் இம்முனிவர் தன் தாய் தந்தையை கண்ணும் கருத்துமாய் போற்றுவதால்; அம்முனிவருக்கு நாங்கள் தொண்டு செய்தால் உங்கள் வினைகள் அனைத்தும் அகன்றுவிடும் என அருளினார். அதனை ஏற்று தினமும் அவரது ஆஸ்ரமத்தை சுத்தம் செய்து எங்கள் மீது விழும் பாவச்சுமையை அப்போதைக்கப்போது போக்கிக் கொள்கிறோம்'' என்றார்கள். சாட்டையைக் கொண்டு அடித்ததைப் போல் உணர்ந்தான் புண்டலீகன். 

கண்ணில்லாத தாய் தந்தையின் ஆசையினை நிறைவேற்ற தானே கூடையில் வைத்து தூக்கிச்சென்றான். வழியில் ஓரிடத்தில் தங்க நேரிட்டது. 

நாராயணன் இவனது தொண்டின் மகிமையை உலகிற்கு எடுத்துச் சொல்ல நினைத்து புண்டலீகன் தங்கியிருந்த வீட்டுக் கதவை தட்டினார். 

வெளியில் வந்த புண்டலீகன் ""இறைவா உன்னைக் கண்ணால் காணும் பேற்றினை பெற்றேன், ஆனாலும் உன்மீது சத்தியம்; இதோ இந்த செங்கல்லினை போடுகிறேன்; அதன் மீது ஏறி நின்று கொண்டிருங்கள். நிமிஷ நேரத்தில் தாய் தந்தையை கவனித்துவிட்டு உன்னை வந்து நிதானமாக தரிசிக்கிறேன்'' என்று உள்ளே சென்றுவிட்டான். பக்தனின் ஆணைக்குக் கட்டுப்பட்டு அன்றுமுதல் பாண்டுரங்கனாய், விட்டல ரகுமாயியாய் இந்த பண்டரிபுரத்தில் அருளாட்சி செய்கிறான்.

இந்தக்கோயிலில் பாண்டுரங்கனை அனைவரும் அவரது மலர்ப்பாதத்தை அதற்கான பாதையில் சென்றால் தொட்டு மகிழலாம். விட்டலனின் அணுக்கத் தொண்டர்களாக துக்காராம், ஏக்நாத் மஹராஜ் மற்றும் பலர் உள்ளனர். அவர்களில் முக்கியமாக நாமதேவர் மற்றும் சொக்கமேலா ஆகியோரது சமாதி இக்கோயிலின் முக்கிய வாசலான வடக்கு துவாரத்தில் உள்ளது. 

வார்காரிகள் (கிருஷ்ண பக்தர்கள்) திந்தி என்ற ஒரு யாத்திரயை; பல மாநிலங்களிலுள்ள பாண்டுரங்க பக்தர்கள் தன் இல்லத்திலிருந்து கால் நடையாகப் புறப்பட்டு விட்டலனின் நாமத்தை ஜெபித்துக் கொண்டு ஆஷாட ஏகாதசியன்றும், கார்த்திகை ஏகாதசியன்றும் விட்டலனை தரிசிப்பார்கள்.

தமிழ் வைகாசி சதுர்த்தியன்று மாம்பழம் விளையும் நேரங்களில் அங்குள்ள விவசாயிகள் அந்த மாம்பழத்தைக் கொண்டு கோயில் முழுவதும் அலங்கரித்து தன் பக்தியினை வெளிப்படுத்துவார்கள். விட்டலனை சேவிப்போம் ஆனந்தத்தின் சாரத்தைப் பெற்று நோயற்ற வாழ்வினை வாழ்வோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com