பொருநை போற்றுதும்! - 94

தமிழர்களின் தொல் பழங்கால நாகரிகத்தை ஆதிச்சநல்லூர் ஆய்வுகள் வெளிக்கொணர்ந்தன. 
பொருநை போற்றுதும்! - 94

தமிழர்களின் தொல் பழங்கால நாகரிகத்தை ஆதிச்சநல்லூர் ஆய்வுகள் வெளிக்கொணர்ந்தன. 

காலம் காலமாக. . . . 

மானுடத்தின் வளர்ச்சியில், பற்பல காலங்களை வல்லுநர்கள் வரையறுத்துள்ளனர். கற்காலம் என்று வரலாற்றுப் புத்தகங்களில் படித்திருக்கிறோம். குகைகளில் வாழ்ந்து நாடோடிகளாகத் திரிந்த மக்கள், ஆங்காங்கே கிட்டிய கற்களை எடுத்து, விலங்குகளிடமிருந்து தங்களைக் காத்துக் கொள்வதற்காகச் சில ஆயுதங்களைச் செய்தனர். பின்னர், ஆற்றோரங்களை நாடி வாழ்ந்து, தங்களின் கல்லாயுதங்களை மேலும் வழவழப்பாக்கிச் செப்பனிட்டுக் கொண்டனர். 

ஆற்றோர வாழ்க்கையில், வேளாண்மையும் மெதுவாகத் தொடங்கியது. அடுத்து, விவசாயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி, விவசாயத்திற்கும் வீடு கட்டுவதற்குமான கருவிகளைச் செய்யத் தொடங்கினர். இவ்வாறு, பழங்கற்காலம், இடைக்கற்காலம், புதுக்கற்காலம் என்று நிகழ்ந்த கற்கால வளர்ச்சிகளைத் தொடர்ந்து வெண்கலக் காலம் நிகழ்ந்தது. 

வெண்கலக் காலம் என்று பெயர் சொன்னாலும், உலோகக் காலம் என்று வழங்குவதே பொருத்தம். ஏனெனில், உலோகங்களின் பயன்பாடுகளைக் கற்றுக் கொண்டு, மனிதர்கள் அவற்றைப் பயன்படுத்தத் தொடங்கிய காலம் இது. செப்பு, வெண்கலம், பித்தளை போன்ற உலோகங்களைக் கொண்டு பல்வேறு வகையான உபகரணங்கள், பாத்திரங்கள், ஆயுதங்கள் ஆகியவற்றைச் செய்தனர். சில இடங்களில் தங்கம் கிடைத்ததைக் கொண்டு, அதனையும் பயன்படுத்தினர். 

இதன் பின்னர், இரும்பின் வலிமையையும் பயன்பாட்டையும் உணர்ந்து கொண்டவர்கள், அதனைக் கொண்டு கருவிகளைச் செய்தனர். இதுவே இரும்புக் காலம் ஆனது. 

இப்போதைக்கு 5000 ஆண்டுகளுக்கு முன்னர்வரை (அதாவது, கி.மு.3000 வரை) புதுக்கற்காலம் நீண்டிருந்தது; தொடர்ந்து சுமார் 2000 ஆண்டுகளுக்கு (கி.மு.1000 வரை) வெண்கலக் காலம் இருந்தது. பின்னர் தொடங்கிய இரும்புக் காலம் இப்போதுவரை நீளுகிறது. இப்படியொரு காலக்கணக்கைப் பொதுவாகச் சொன்னாலும், இவற்றுக்கு ஆதாரமான நாகரிகச் செயல்பாடுகள் (விவசாயம், கருவிகளின் உருவாக்கம், உலோகம் உருக்குதல் போன்றவை) யாவும், தெற்காசியாவில் முதன்முதலில் தொடங்கிப் பின்னர் உலகின் பிற பாகங்களுக்குப் பரவின என்பதை வல்லுநர்கள் பலரும் ஒப்புக்கொள்கின்றனர். 

இந்த வகையில் பார்த்தால், ஏனைய உலக நாடுகளில் புதுக்கற்காலம் நடந்துகொண்டிருந்த போதே, தெற்காசியாவில், குறிப்பாக இந்தியாவில், உலோகக் காலமும் இரும்புக் காலமும் நிகழ்ந்துவிட்டதாகத் தெரிகிறது. அதாவது, மானுட நாகரிக வளர்ச்சியில், தமிழகம் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் முன்னோடியாக இருந்தது. இப்பேர்ப்பட்ட பெருமையை ஆதிச்சநல்லூர் அகழாய்வுகள் வெளிக் கொணர்ந்தன. 

ஆதிச்சநல்லூர் அகழ்வுகளில் பித்தளைப் பொருள்கள் குறைவாகக் காணப்பட்டமையால், பண்டைத் தமிழகத்தில் புதுக்கற்காலத்தை ஒட்டி, உடனடியாக இரும்புக் காலம் தொடங்கிவிட்டது என்றுகூடச் சிலர் வாதிடத் தலைப்பட்டனர்.  

ஆயின், ஆதிச்சநல்லூர் இருப்பதே பொருநை என்னும் தாமிரவருணியின் கரை என்பதை நினைவில் கொள்ளுதல் நலம். நெல்லையில் நடராஜப் பெருமான் ஆடிய செப்பம்பலத் திருநடனம் தொடங்கி, நம்மாழ்வார் அருளால் நாதமுனிகளுக்குக் கிட்டிய பவிஷ்யதாசார்ய உலோகப் பிரதிமம் தொடர்ந்து, பொருநைக் கரையில் உலோகக் காலம் செழித்ததற்கான ஆதாரங்கள் ஏராளம். ஆக, செப்பு, செப்பின் கலப்பால் கிடைக்கும் வெண்கலம், பித்தளை ஆகியவற்றைப் பயன் கொண்டு, அதன் பின்னர் இரும்பையும் தமிழர்கள் பயன்கொண்டனர் என்பது கண்கூடு. 

ஆதிச்சநல்லூர் எச்சங்களும் வல்லுநர் குறிப்புகளும் திருநெல்வேலி மாவட்டத்தையும் தென்னிந்தியாவின் பிற பகுதிகளையும் பற்றிக் குறிப்பிடும்போது, புதுக்கற்கால எச்சங்களும் இரும்புக் கருவிகளும் அருகருகே காணப்படுகின்றன என்று குறிப்பிடுகிற பேராசிரியர் வி. ராமச்சந்திர தீக்ஷிதர் (வரலாற்றுக்கு முந்தைய தென்னிந்தியா - 1951), புதுக்கற்காலத் தென்னிந்தியர்கள் எதேச்சையாக இரும்பைக் கண்டு, ட்ரப்பாய்ட் கற்களைக் காட்டிலும் இரும்பு உறுதியாக இருப்பதையும் கண்டு, இரும்புப் பயன்பாட்டைத் தொடங்கியிருப்பார்கள் என்கிறார். 

தீபகற்ப இந்தியர்கள் (தென்னிந்தியா) எதேச்சையாக இரும்பைக் கண்டு அதை நன்கு பயன்படுத்தத் தொடங்கிய பின்னர், க்ரீட், கிரேக்கம் போன்ற நாடுகளுக்கும் இரும்புப் பயன்பாடு பரவியதென்றும், இதனால்தான், இந்த நாடுகளிலும் புதுக்கற்காலத்தைத் தொடர்ந்து உடனடியாக இரும்புக் காலம் நிகழ்ந்துவிட்டது என்றும்,  மேலும் உரைக்கிறார். 

"தென்னிந்தியாவில் செய்யப்பட்ட எஃகுப் பொருள்களே எகிப்திற்கும் ஐரோப்பாவிற்கும் ஏற்றுமதியாகின' என்று 1837-ஆம் ஆண்டு நடைபெற்ற ராயல் ஏஷியாட்டிக் சொûஸட்டி மாநாடு ஒன்றில், ஹீத் என்னும் அறிஞர் உரைத்ததையும் வைத்துப் பார்க்கும்போது, இரும்புப் பயன்பாட்டின் அருமையைப் பிறருக்கு வெகு காலம் முன்னரே தமிழ் மக்கள் உணர்ந்திருந்தனர் என்பதில் ஐயமில்லை. 

இரும்பைப் பயன்படுத்துவதற்கு, இரும்புக் கனிமத்தையும் தாதுக்களையும் வெப்பத்திலிட்டு உருக்குகிற முறைகள் தெரிந்திருக்கவேண்டும். உயர் வெப்பத்தில் உருக்குவதற்கு, நெருப்பில் நுழைப்பதற்குப் பொருத்தமான துருத்திகள் வேண்டும். ஆக, உயர்கருவிகளை இரும்பினால் செய்வதற்கு முன்னரே, உலோகப் பயன்பாட்டில் நெருப்பை முறையாகப் பயன்படுத்துவது பற்றியும் தமிழர்கள் அறிந்திருக்கவேண்டும். 

ஆதிச்சநல்லூர் இரும்புக் கருவிகளைக் கண்டால், அவை இரும்புக் கலாசாரத்தின் மேம்பட்ட நிலையில் இருக்கின்றன. எனவே, தென்னிந்தியாவின் இரும்புக் காலமானது, கி.மு.10000-8000-த்திலேயே நிகழ்ந்திருக்கவேண்டும் என்று ராமச்சந்திர தீக்ஷிதரும் பிற வரலாற்றாசிரியர்களும் உறுதி செய்கின்றனர்.  

சற்றே உற்றுநோக்கினால், இரும்புப் பயன்பாட்டுக்கு முன்னர், பிற உலோகப் பயன்பாடும் தமிழ்நாட்டில் இருந்தது என்பதற்கும் ஆதிச்சநல்லூர் பொருள்கள் ஆதாரம் தருகின்றன. 

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com