மீனின் வயிற்றில் பயணித்த யோனா!

வேதாகமத்தில் தீர்க்கதரிசி யோனாவிடம் கடவுள் இட்ட கட்டளையானது ""நீ  நினிவே நகருக்குச் சென்று அங்கு பாவத்தில் வாழ்கின்ற மக்களுக்கு அழிவு வரப் போகிறது என்று அறிவிக்க வேண்டும்'' என்பதாகும்.
மீனின் வயிற்றில் பயணித்த யோனா!

வேதாகமத்தில் தீர்க்கதரிசி யோனாவிடம் கடவுள் இட்ட கட்டளையானது ""நீ  நினிவே நகருக்குச் சென்று அங்கு பாவத்தில் வாழ்கின்ற மக்களுக்கு அழிவு வரப் போகிறது என்று அறிவிக்க வேண்டும்'' என்பதாகும். இந்தப் பணி யோனாவுக்குப் பிடிக்கவில்லை.
காரணம், நினிவேயில் வாழ்ந்த மக்கள் யூதர் அல்லாத பிற இனத்தவர். எனவே கடவுளின் செய்தியை பிற இனத்தாருக்கு அறிவிக்க யோனாவுக்கு மனமில்லை.
"நான் போய் அந்த மக்களை எச்சரித்து, அவர்கள் மனம் திரும்புவதை விட, அவர்கள் அழிவதே நல்லது' என்று யோனா நினைத்தார். 
கிழக்கே இருந்த நினிவேவுக்குச் செல்ல கடவுள் உத்தரவிட்டார். ஆனால் யோனாவோ மேற்கே இருந்த தர்ஷீசை நோக்கிக் கப்பலில் பயணம் மேற்கொண்டார். 
கடவுளோ கடலை கொந்தளிக்கச் செய்தார். கப்பல் கவிழ்ந்து விடும் நிலை ஏற்பட்டது. யோனாவோ கீழ்த்தளத்தில் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தார். அவரைக் கண்ட மாலுமிகள் ""கடவுளின் கட்டளைக்கு மாறாக செல்லும் யோனாவை தூக்கிக் கடலில் எறிந்தால் கொந்தளிப்பு அடங்கும்'' என்று கூறி, அவரைத் தூக்கிக் கடலில் எறிகின்றனர். கொந்தளிப்பு அடங்குகிறது.
கடலில் விழுந்த யோனாவை ஒரு ராட்சத மீன் விழுங்குகிறது. மூன்று நாள்கள் மீனின் வயிற்றில் இருந்த யோனா, கடவுளை நோக்கி மன்றாடுகிறார். கடவுள் மீனுக்குக் கட்டளையிட, மீன் யோனாவை ஒரு கரையில் கக்கியது. அந்த இடம்தான் நினிவே நகரமாகும். நினிவேவுக்கு வர விரும்பாத யோனாவை மீனின் வயிற்றில் பயணிக்க வைத்து வரவழைத்தார் கடவுள்.
யோனா நினிவே நாட்டின் மன்னர் மற்றும் மக்களிடம் சென்று, ""பாவம் புரியும் உங்களை கடவுள் அழிக்கப் போகிறார்'' என்று அறிவித்தார்.
மன்னரும், மக்களும் மனம் மாறினர். எல்லோரும் உண்ணா நோன்பிருந்து கடவுளை நோக்கி மன்றாடினர். கடவுள் மனம் இரங்கினார். "மக்களை அழிப்பதில்லை' எனும் முடிவுக்கு வந்தார்.
யோனாவுக்கு இதனால் கோபம் ஏற்பட்டது. "இந்த மக்களை அழிக்காவிட்டால், என்னை அழியும்' என்று கடவுளிடம் முறையிட்டார். ஊருக்கு வெளியே தங்கியிருந்தபடி நகரின் அழிவைக் காணக் காத்திருந்தார்.
கடவுள் அவருக்கு அருகே ஓர் ஆமணக்கு செடியை வளரச் செய்தார். அது ஒரே இரவில் சடசடவென வளர்ந்து அவருக்கு நிழல் கொடுத்தது. 
மறுநாள் இரவில் கடவுள் அனுப்பிய ஒரு புழு ஆமணக்கு செடியை அழித்தது. அதைக் கண்டு யோனா வருந்தினார். ""எனக்கு நிழல் தந்த ஆமணக்கு செடி அழிந்து விட்டதே'' என்று கடவுளிடம் முறையிட்டார்.
கடவுள், யோனாவிடம் சொன்னார். ""நீ உழைக்காமல், நீரூற்றாமல் முளைத்து வளர்ந்த ஆமணக்கு செடிக்காக இரங்குகிறாயே... நான் படைத்த நினிவே நாட்டு மக்களுக்காக நான் இரங்க மாட்டேனா?'' என்றார்.
இறைவனின் அன்பு பெரிது. தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும் இரங்குகிறார், வாழ்வளிக்கிறார். நாமும் இறைவனின் அருள் வேண்டுவோம்; நம்மை ஆதரிப்பார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com