மந்திரம் போற்றுதும்... திருமந்திரம் போற்றுதும்...: அஞ்சுள சிங்கம் அடவியில் வாழ்வன - 24

ஒரு காட்டில் ஐந்து சிங்கங்கள் இருக்கின்றன. இந்த ஐந்து சிங்கங்களும், தன் விருப்பத்துக்கு வெளியே போய் மேய்ந்து இரை தின்று விட்டு, பின் தன் இருப்பிடம் சேர்ந்து விடும்.
மந்திரம் போற்றுதும்... திருமந்திரம் போற்றுதும்...: அஞ்சுள சிங்கம் அடவியில் வாழ்வன - 24

அஞ்சுள சிங்கம் அடவியில் வாழ்வன
அஞ்சுகம்போய் மேய்ந்துதம் அஞ்சு அகமேபுகும்
அஞ்சின் உகிரும் எயிறும் அறுத்திட்டால்
எஞ்சாது இறைவனை எய்தலும் ஆமே
(பாடல் : 2026)

ஒரு காட்டில் ஐந்து சிங்கங்கள் இருக்கின்றன. இந்த ஐந்து சிங்கங்களும், தன் விருப்பத்துக்கு வெளியே போய் மேய்ந்து இரை தின்று விட்டு, பின் தன் இருப்பிடம் சேர்ந்து விடும். இந்த ஐந்து சிங்கங்களின் நகங்களையும், பற்களையும் அறுத்து எறிந்து விட்டால், இறையருளைப் பெற எந்தத் தடையும் இருக்காது.

ஐம்புலன்களையும் சிங்கம் என்று சொல்கிறார் திருமூலர். மனித உடம்பை காடு என உருவகப் படுத்துகிறார். நகமும், பல்லும் இழந்து விட்டால் சிங்கம் பலமிழந்து விடும். அதே போல், மனிதன் தன்னை ஆசை வயப்படுத்தும் பொறிகளை அடக்கி விட்டால், அவை இறையருளைப் பெறத் தடையாக இருக்க மாட்டா என்கிறார்.

திருமந்திரத்தில் மூவாயிரம் பாடல்கள் உள்ளன. பிறப்பு நீங்கி, உலக மக்கள் உய்யும் பொருட்டு, ஆண்டுக்கு ஒரு பாடலாக, மூவாயிரம் ஆண்டுகள், மூவாயிரம் பாடல்களைத் தந்துள்ளார்.

"நல் திருமந்திர மாலை பான்மை முறை ஓராண்டுக்கு ஒன்றாக' என்கிறார் சேக்கிழார்.

ஆண்டுக்கு ஒரு பாடல் என திருமந்திரப் பாடல்களைப் பாடிய திருமூலர், அன்பு, அறம், உடல் நலம், கடவுளை வழிபடும் முறை, சக்தியை பூஜிக்கும் முறை, சக மனிதன் மீது நமக்கு இருக்க வேண்டிய அக்கறை என பலவற்றையும் பாடியுள்ளார்.

நமது ஐம்புலன்களையும் கடவுளை நோக்கித் திருப்ப வேண்டும். அவை வீணான காரியங்களைச் செய்ய நாம் அனுமதிக்கக் கூடாது என்கிறார் இப்பாடலில்.

ஐம்புலன்களால் நாம் செய்கிற பாவங்களை, பஞ்சமகா பாவங்கள் என குறிப்பிடுவார்கள். அவையாவன: கள், களவு, காமம், கொலை, பொய்.

"நம்முடைய புலன்கள் இறைவனை அடைய வேண்டும் என்கிற இலக்கை மறந்து எங்கெங்கோ சுற்றித் திரிகின்றன‘ எனச் சொல்கிற திருமூலர் புலன்களை "சிங்கம்' என உருவகப் படுத்துகிறார்.

சிங்கம் பற்றி ஒரு கதை சொல்கிறேன்.

சிங்கம் என்றாலே கம்பீரம் தான். அற்பமான, இழிவான செயல்களை சிங்கம் ஒரு போதும் செய்யாது. பசிக்கும் போது மட்டுமே வேட்டையாடும். நடக்கும் போது இருபுறமும், தலையைத் திருப்பி பார்த்தபடி நடக்கும்.இதற்கு "அரிமா நோக்கு' என்று பெயர்.

ஒரு காட்டில் புலி ஒன்று உறங்கிக் கொண்டிருந்ததது. அதனருகே வந்த கழுதை, "எனக்கு வேலையே இல்லை. பொழுது போகவில்லை. நாம் பேசிக்கொண்டிருக்கலாம்' என்றது. புலி "சரி' என்று சொன்னது.

"அங்கே பார்... புற்கள் நீல நிறத்தில் எவ்வளவு அழகாக இருக்கின்றன?' என்றது கழுதை.

"என்னது புல் நீல நிறமா...? புல் பச்சை நிறமாச்சே..!' என அதிர்ச்சியாக சொன்னது புலி.

"இல்லை... இல்லை... புல் பச்சை நிறம் இல்லை...நீல நிறம் தான்...! எல்லோரும் அப்படித்தான் சொல்கிறார்கள்...!' என வாதம் செய்தது கழுதை.

"சரி வா...காட்டுக்கு ராஜா சிங்கத்திடமே கேட்போம்..!' என கழுதையை சிங்கத்திடம் அழைத்து வந்த புலி, விவரத்தைச் சொன்னது.

அதற்கு சிங்கம் இப்படி தீர்ப்பு சொன்னது... "புல் நீல நிறம் தான்...! உண்மையைச் சொன்ன கழுதைக்குப் பரிசு...! பொய் சொன்ன புலிக்கு சிறை தண்டனை...'

கழுதை சென்றதும், புலி கோபமாக சிங்கத்தைப் பார்த்து "ஏன் இப்படி செய்தீர்கள்?' என கேட்டது.

சிங்கம் சொன்னது... "நீ யார்...? புலி...உன் தகுதிக்கு, கம்பீரத்துக்கு கழுதையை உன் அருகில் வர விட்டது தவறு. அதனுடன் வெட்டியாகப் பேசிக் கொண்டிருந்தது அதை விடத் தவறு. உனக்குத் தெரியும் புல் பச்சை நிறம் தான் என்று. அந்தக் கழுதை, புல் நீல நிறம் என்று சொன்ன போது தேவையில்லாமல் உன் நேரத்தை வீணடித்து அதோடு விவாதம் செய்தது பெரிய தவறு. நான் காட்டுக்கு ராஜா... எவ்வளவு வேலை இருக்கும்...? இந்த வழக்கைக் கொண்டு வந்து என் நேரத்தையும் வீணடித்தாய் அல்லவா? அதற்குத்தான் இந்த தண்டனை‘.

உடல் என்னும் காட்டில் ஐந்து சிங்கங்களாக ஐந்து உறுப்புகள் இருக்கின்றன. அவை பயனுள்ள, அர்த்தமுள்ள, நன்மையான செயல்களை மட்டுமே செய்ய வேண்டும்.

சிங்கம் என்பதை மறந்து விட்டு அற்பமான, வீணான காரியங்களை ஒரு போதும் செய்யக் கூடாது.

ஐம்புலன்களை இறைவன் மேல் செலுத்தி அவன் அருளைப் பெறுவோம்!

(நிறைவு)

(கட்டுரையாசிரியர்: இலக்கியச் சொற்பொழிவாளர்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com