Enable Javscript for better performance
பொருநை போற்றுதும்! - 119- Dinamani

சுடச்சுட

  

  பொருநை போற்றுதும்! - 119

  By டாக்டர் சுதா சேஷய்யன்  |   Published on : 13th November 2020 06:00 AM  |   அ+அ அ-   |    |  

  vm3

   

  சங்க காலத்து மாறோக்கம்: மார்க்கோபோலோவின் பதிவுகளிலிருந்து, இப்பகுதிக்கு மாறோக்கம், பாவல், காபில், மாபர் போன்ற பெயர்கள் இருந்துள்ளதாகத் தெரிகிறது. நப்பசலையார் என்பவர் சங்ககாலப் பெண் புலவர்களில் ஒருவர். 

  "மாறோக்கத்து நப்பசலையார்' என்று இவரின் பெயர் வழங்கப்பட்டதிலிருந்து, மாறோக்கம் என்னும் ஊரைச் சேர்ந்தவர் இவர் என்பதை உணரலாம். 
  "மாறோக்கத்துக் காமக்கணி நப்பாலத்தனார்' என்னும் மற்றொரு புலவரும் இவ்வூரைச் சேர்ந்தவர். இப்போது மாறமங்கலம் என்றழைக்கப்படும் ஊரே, சங்க காலத்து மாறோக்கம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். காயல் பகுதி முழுவதும் "மாறோக்க நாடு' என்றழைக்கப்பட, பிரதான ஊர் "மாறோக்கம்' ஆனது. 

  வணிகம் தழைத்த இப்பகுதியில், வெளிநாட்டினர் பலர் வந்து தங்கினர். ஆற்றுக்குத் தென்புறத்தில் அராபியர்களும், வடபுறத்தில் யவனர்களான கிரேக்கர்களும் தங்கினர். தென்புறக் குடியிருப்புக் காயல்பட்டினம் என்னும் ஊராக வளர்ந்துள்ளது. 

  ஆற்றுக்குத் தென்புற ஊரான ஆற்றூரைச் சேர்ந்தவர், தொல்காப்பியச் சொல்லதிகாரத்திற்கு உரை கண்டவரான சேனாவரையர். 

  முத்துக் குளிப்பும் சங்குக்குளிப்பும் செழித்துத் திகழ்ந்தகாயல் பகுதியில் நின்று பொருநையாளைப் பார்க்கிறோம். கிளைகளாகப் பிரிந்து பிரிந்து, கடலரசனோடு இணைவதற்கு ஓடுகிறாள். மலையிலிருந்து வீழ்ந்தும், பாய்ந்தும் அகன்றும், வேகமாக வடிந்தும், அணைக்கட்டுகளில் தேங்கியும், பாசனத்திற்காகச் சரிந்தும், பலவிதங்களிலும் நிலைகளிலும் செயல்பட்ட பொருநைத் தாய், கடமையை ஆற்றிவிட்ட களிப்பில், மெல்ல மெல்ல ஓடுகிறாள். ஓட்டத்தில் களைப்பு தெரியவில்லை; மேன்மை தெரிகிறது. 

  கிளையோடைகளுக்கு இடையே நின்று, இவள் வந்த திசை நோக்குகிறோம். பொதிகை மலைச் சாரல் நீர் மட்டுமா இவளில் பாய்கிறது? இவளின் கரையில் உள்ள மக்களின் கண்ணீரும் கூடத்தானே! சில சமயங்களில், இந்தக் கண்ணீர் அழுகை நீராக இருக்கும்; சில சமயங்களில், இதுவே ஆனந்த நீராகவும் இருக்கும். 

  பொருநைக் கரையிலும் கொள்ளை நோய்கள்: அடர்வனப் பகுதிகளில் இவள் புறப்படுகிறாள் என்பதால், இவள் அவ்வப்போது வெள்ளம் கண்டிருக்கவேண்டும்! நூற்றாண்டுகள் பலவாக இவளின் குறுக்கே அணைக்கட்டுகள் கட்டப்பட்டிருப்பதும், அணைக்கட்டுப் பகுதிகளிலிருந்து கால்வாய்கள் வெட்டப்பட்டிருப்பதும், இவளின் நீர்வரத்து அதிகமிருந்தது என்பதற்கும், இந்த நீரைப் பயன்பாட்டுக்குத் திருப்ப மக்கள் விரும்பினர் என்பதற்குமான சான்றுகள். 

  இருப்பினும், பொருநையாளின் வெள்ளம், வெள்ளத்தால் சிதைந்த கிராமங்கள், வெள்ளம் உருவாக்கிய கொள்ளை நோய் ஆகியவை பற்றிய குறிப்புகள் சிலவும் கிட்டியுள்ளன.

  1810-ஆம் ஆண்டு டிசம்பர் 6-ஆம் தேதி வாக்கில், பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளது. ஆற்றின் கரை, பல இடங்களில் உடைபட்டு, வீடுகளும் குடியிருப்புகளும் சேதப்பட்டன. கால்வாய்கள் அழிவுற்றன. ஆழ்வார் திருநகரிப் பகுதியில் மட்டும் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் அழிந்து போயின. 

  பட்ட காலிலே படும் என்னும் மொழிக்கேற்ப, அடுத்த சில மாதங்களிலேயே, பொருநையாள் மீண்டும் சங்கடத்திற்கு உள்ளாகியிருக்கிறாள். எதிர்பாராதவிதமாக, 1811-ஆம் ஆண்டு ஜனவரி - ஃபிப்ரவரி - மார்ச் - ஏப்ரல் மாதங்களில் தொடர்மழை பெய்துள்ளது. 

  இதனால், ஊர்கள் சிதைந்துள்ளன. மழையின் விளைவாகக் கொள்ளை நோய் பரவியது. மழைச்சேதமும் நோய்ச்சேதமும் சேர்ந்துகொள்ள, சில ஊர்களில், 50-100 என்ற கணக்கில் வீடுகள் ஆளற்றுப் போயின. உறவினர்கள் கொத்துக் கொத்தாக இறந்து போவதைக் கண்ட பிறர், ஊரைவிட்டே ஓடியுள்ளனர். 

  மழைச் சேதத்தால் வீடு வாசலை இழந்த மக்கள், வெட்டவெளியில் உறங்க வேண்டியிருந்தது. காற்றும் மழையும் நெடுநாட்களுக்கு ஓயாததால், ஏற்கெனவே சேகரித்திருந்த தானியங்களையும் நெல்லையும் உலர வைக்கக்கூட முடியவில்லை. இதனால், உறைவிடம் இழந்து, உணவும் இழந்துத் துன்பப்பட்டுள்ளனர். பனியும் குளிரும்கூட விட்டு வைக்கவில்லை. 

  இப்படிப்பட்ட நிலையில்தான், காய்ச்சலும் கொள்ளை நோயும் தாக்கியுள்ளன. 1811 ஃபிப்ரவரி - மார்ச் மாதங்களில், தென்காசியிலும் சுற்றியுள்ள மலைப் பகுதியிலும் கடுமையான நோய்ப் பரவல். நாளொன்றுக்கு 10 அல்லது 15 மரணங்கள் நிகழ்ந்தனவாம். பிரம்மதேசம் பகுதியில் நோயின் தாக்கம் அதிகம். நோய்வாய்ப்பட்டவர்களைக் கவனிக்கக் கூட முடியாத நிலை என்பது அப்போதைய தாசில்தார் அறிக்கையிலிருந்து பெறப்படுகிறது. கடையத்தில் மரண எண்ணிக்கை மிக அதிகம். சேரன்மாதேவிக்குத் தாமதமாக வந்த நோய், பிற ஊர்களைக் காட்டிலும் குறைவான சேதத்தையே விளைவித்துள்ளது. 

  நதிக்கரையோரமாகக் கடற்கரை வரை கொள்ளை நோய் பரவியது. கடற்கரைப் பகுதி வீடுகள், உள்நாட்டுப் பகுதி வீடுகள் அளவுக்குப் பாதுகாப்பற்றன என்பதாலும், வசதி குறைவானவை என்பதாலும், பாதிப்பு அதிகமாகவே இருந்துள்ளது. நோயினால் மக்கள் பாதிக்கப்பட்டதால், உப்பளப் பணிகளும் பாதிக்கப்பட்டன. 

  கொள்ளை நோயின் தன்மை பற்றிச் சொற்பக் குறிப்புகளே கிடைக்கின்றன. முதல் நாள் கடுமையான காய்ச்சல்; பெரும்பாலோனோரில் அடுத்த நாள் வலிப்பு; மூன்றாம் நாள் மரணம். மரணம் ஏற்படாதவர்களில், 10 நாட்கள் அல்லது ஒரு மாதத்திற்குப் பின்னர், நாள் தோறும் காய்ச்சல், வயிற்றுப்போக்கு, ரத்த வாந்தி போன்றவை தோன்றின. 

  1811-ஆம் ஆண்டில்தான் கடுமையான பாதிப்பு என்றாலும், 1809 மற்றும் 1810 -ஆம் ஆண்டுகளில்  கூட நோய் பாதிப்பு காணப்பட்டதாலும், பழனி பாதயாத்திரைக்குப் போனவர்கள் பாதிக்கப்பட்டுப் பழனி - திண்டுக்கல் பகுதிகளிலும் தாக்கம் ஏற்பட்டதாலும், மதுரைப் பகுதி மக்களும் நோய்க்கு உள்ளானதாலும், உயர்மட்ட மருத்துவ ஆலோசனைக் குழு ஒன்றை அரசு அமைத்துள்ளது. அப்போதைய தலைமைக் கண்காணிப்பு மருத்துவ அலுவலரும், இந்தியாவின் மூலிகைகள், காய்கறிகள் ஆகியவற்றின் மருத்துவப் பயன்கள் குறித்து நிரம்பப் பதிவு செய்தவருமான டாக்டர் வைட்லா ஐன்ஸ்லீயின் தலைமையில், அப்போதைய தென்மண்டலக் கண்காணிப்பு மருத்துவ அலுவலர் டாக்டர் எம். கிரிஸ்டி மற்றும் ஏ. ஸ்மித் ஆகியோர் உறுப்பினர்களாக இருந்துள்ளனர். 

  இதற்கிடையில், கொள்ளை நோயானது திருநெல்வேலிப் பகுதியில் தொடங்கவில்லை, பழனி - மதுரைப் பகுதிகளில் தொடங்கி, நெல்லைக்குப் பரவியது என்றும் சிலர் எண்ணத் தொடங்கினர். 

  இடையறாத மழை, மலைப்பகுதிகளின் ஈரம், உலர்வில்லா நிலை ஆகியவற்றையே நோய்க்கான பிரதான காரணம் என்று பலரும் கருதினர். ஆனால், மழையில்லாத ராமநாதபுரம் பகுதிகளிலும் மழை அதிகமாக இருந்த மதுரை நகரிலும் நோய் இருந்தது. 

  மருத்துவ உயர்மட்டக் குழு, பலவிதங்களிலும் தனது ஆய்வைத் தொடர்ந்தது. பொருநைக் கரையில் வாழ்ந்த முதியோர் சிலர், 34 ஆண்டுகளுக்கு முன்னர், அதாவது 1776-வாக்கிலும் இப்படியொரு காய்ச்சல் நோய் கண்டதை நினைவு கூர்ந்தனர். வருவாய்த் துறையின் பதிவுகள், 1757 மார்ச் மாதம் நெல்லைப் பகுதிகளில் இரண்டு நாட்களுக்குக் கடுமையான மழை பொழிந்ததைச் சுட்டிக்காட்டின. ஆனால், 1757-லும், 1776-லும் மூன்று மாத காலத்திற்கு மட்டுமே நோய்த் தாக்கம் இருந்தது. 1810-1811-இல், ஏறத்தாழ இரண்டு ஆண்டுகள் நோய்த் தாக்கம் இருந்தது. 

  அப்போதைய நிலையில், நோய்க்கான பெயர் என்ன என்று சொல்ல முடியாவிட்டாலும், பதிவுகளில் காணப்படும் பல்வேறு தகவல்களை ஒப்பிட்டுப் பார்க்கையில், தீவிர மற்றும் கடுமையான மலேரியாவாகவும், இதனோடுகூட காலராவும் இருந்திருக்கும் என்று தோன்றுகிறது. 

  (தொடரும்)

  உங்கள் கருத்துகள்

  Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

  The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

  kattana sevai
  flipboard facebook twitter whatsapp