பொன்மொழிகள்!

நீரைப் பிரித்து பாலை அருந்தும் விந்தையை அன்னப்பறவை மட்டுமே அறியும்; வேறு எதுவும் அறியாது.
பொன்மொழிகள்!


நீரைப் பிரித்து பாலை அருந்தும் விந்தையை அன்னப்பறவை மட்டுமே அறியும்; வேறு எதுவும் அறியாது. அதுபோல் கர்த்தாவாகிய இறைவனையும் காரியமாகிய பிரபஞ்சத்தையும் ஞானிகள் மட்டுமே விவேகித்து அறிவார்கள்; அக்ஞானிகள் அறியமாட்டார்கள்.

-கவி வேமன்னா

பெரியோர்கள் சிற்றினத்தைக் கண்டு அஞ்சி ஒதுங்குவார்கள்; சிறியோர்கள் அதையே சுற்றமாகக் கருதித் தங்களுடன் சேர்த்துக் கொள்வார்கள்.

 -திருக்குறள் எண் 451 

சூரிய பகவானே! இருளையும் பனியையும் போக்குபவரே! எதிரிகளை அழிப்பவரே! எல்லையற்றவரே! செய்த நன்றி மறந்தவர்களை அழிப்பவரே! தேவாதிதேவரே! நட்சத்திரக் கூட்டங்களின் நாயகரே! தங்களுக்கு நமஸ்காரம்.

-ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரம் 

இந்த உலகத்தில் அழிவற்ற தவத்தைச் செய்து அரிய வீடுபேற்றை எண்ணற்றவர்கள் பெற்றிருக்கிறார்கள். அதுபோல் இப்போதும் வீடுபேற்றைப் பெறுவதற்கு எண்ணற்றவர்கள் முயற்சி செய்து வருகிறார்கள்.

 -கந்த புராணம் 

அனுசரிக்க வேண்டிய அவசியமான விரதங்களை உபவாசமிருந்தும், பாராயணம் செய்தும், ஜப தவங்கள் செய்தும் இறைவனை வழிபடுவது மிகவும் அவசியமாகும்.

-அருணகிரிநாதர்

எவ்வளவோ பேசுகின்ற மனிதன் பிறக்கும்போது சொத்து சுகங்களை தன்னுடன் எடுத்து வந்தானா? இல்லை இறந்து சுடுகாடு போகும்போது அவன் எதையாவது தன்னுடன் எடுத்துக்கொண்டு போகிறானா?

-பட்டினத்தார்

நாம் வேலைக்காரர்களை வெளியே அனுப்பினாலும், சகோதரர்களையும் சொந்தக்காரர்களையும் சங்கடமான நேரத்தில் அழைத்தாலும், கஷ்டமான நேரத்தில் நண்பர்களை அணுகினாலும்  இது போன்ற நேரங்களில் அவர்களின் உண்மையான குணங்களை நாம் நன்கு அறிந்துகொள்ளலாம்.    
 

-சாணக்கிய நீதி

நாம் தெய்வத்தை ஏன் தெரிந்துகொள்ளவில்லை என்றால்  ஒரு பதார்த்தத்தை அனுபவித்தால் அல்லாது அந்தப் பதார்த்தத்தினுடைய ருசி தெரியாது. தெரியாத பதார்த்தத்தின் மேல் இச்சை போகாது. அதுபோல் தெய்வத்தை உள்ளபடி அனுபவித்தால் அல்லாது தெய்வத்திடம் பிரியம் வராது. அதனால் நாம், "தெய்வத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும்' என்கிற முக்கிய லட்சியத்தில் முயற்சி செய்துகொண்டிருக்க வேண்டும்.        

 -வள்ளலார்

முருகப் பெருமானே! நான் எப்போதும் துக்கங்களாகிய பளுவினால் அமுங்கித் தளர்கிறேன். நீயே தீனபந்துவாயிருக்கிறாய்! ஆகவே உன்னைத் தவிர நான் வேறு யாரிடமும் போய் யாசிக்கமாட்டேன். உன் மீது நான் பக்தி செலுத்தும்போது, எப்போதும் தடைப்படுத்திக் கெடுக்கின்ற அந்தத் தீய  துக்கங்களாகிய நோயை அழித்துவிடு!    

-சுப்ரமண்ய புஜங்கம், 24.

திருவிடைமருதூரில் எழுந்தருளியிருக்கும் என் தந்தையாகிய சிவபெருமானே! நல்ல நிலையில் இருக்கும் இந்த உடலில் நரையும், கிழத்தனமும், நோயும் விரைவில் வரும். இதை உணராமல், (தெரிந்தும்) நான் இது வரையில் நல்ல செயல்களைச் செய்யாமல் தீய செயல்களையே துணிந்து செய்து இளைத்தேன். 

என் வாழ்க்கை அரைக்கப்பட்ட மஞ்சளைப் போல் அழகு குலைந்து அவலம் ஆனதை அறிந்தேன். ஆதலால் நான் இப்போது யமனுக்கு பயப்படுகிறேன். இதையே பலமுறை நான் வாயால் சொல்லிக்கொண்டிருக்கிறேன். எனவே அவ்விதம் நான் பயப்படாத வகையில்  "இனி உன் திருவடிகளே எனக்குப் பற்றுக்கொடு' என்று அறிந்து, வாழும் வாழ்க்கையை எனக்குத் தந்தருளுங்கள்; உண்மையை ஒரு சிறிதும் அறியாமல் வீண் பேச்சு பேசும்  அடியேன் கடைத்தேறுவதற்கு ஒரு வழியைத் தந்து அருள் புரியுங்கள்.

(மஞ்சளைப் போன்று  தண்ணீர் ஊற்றி அரைத்த மஞ்சளை உடனே உபயோகிக்காவிட்டால், அது பயன் இல்லாமல் போய்விடும். நாம் உடல் நல்ல நிலையில் இருக்கும்போதே  நாளைக்கென்று (பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று) தள்ளி வைக்காமல்  ஆண்டவனுடைய திருவடிகளை அடைவதற்கு  முயற்சி செய்ய வேண்டும்)

-சுந்தரமூர்த்தி தேவாரம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com