தருமத்தின் தூதுவன்

பஞ்ச பாண்டவர்கள் வாழ்வில் வந்த சோதனைகள் அனைத்தையும் கண்ணனின் திருவடியால் கடந்தனர்.
தருமத்தின் தூதுவன்

பஞ்ச பாண்டவர்கள் வாழ்வில் வந்த சோதனைகள் அனைத்தையும் கண்ணனின் திருவடியால் கடந்தனர். அதேபோன்று பக்தர்கள் சந்திக்கும் சோதனைகளை வென்று அருள்வதற்கு பெரிய காஞ்சிபுரத்தில், கங்கை கொண்டான் மண்டபத்தின் அருகில் அமைந்திருக்கிறது பாண்டவத் தூதனின் "திருப்பாடகம்'. "பாடு' என்றால் "மிகப் பெரிய' என்றும், "அகம்' என்றால் "கோயில்' என்று பொருள். "பெரியவனின் கோயில்' எனும் பொருள்படும்படி இத்தலம் "திருப்பாடகம்' என்றும், "கிருஷ்ண பூமி' என்றும் அழைக்கப்படுகிறது.
பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோர் மங்களாசாசனம் செய்த திருத்தலம். 108 திவ்ய தேசங்களில் இத்தலம் 49 -ஆவது எனப்படுகிறது.
பாண்டவர் தருமர் சூதினால் கௌரவர்களிடம் நாட்டை இழந்தார். ஆளுக்கொரு வீடு வீதம் ஐந்து வீடுகளையாவது கேட்டுப் பெற துரியோதனனிடம் தூது சென்றார் கண்ணன். துரியோதனன் கிருஷ்ணர் அமர்வதற்காக போடப்பட்ட ஆசனத்தின் கீழே, ஒரு பெரிய நிலவறையை (பாதாளம்) உண்டாக்கி, அதன் மீது பசுந்தழைகளைப் போட்டு மறைத்தான். அங்கே அவரைத் தாக்க சில மல்யுத்த வீரர்களையும் வைத்திருந்தான்.
கிருஷ்ணரும் அமர்ந்தார். நிலவறை சரிந்தது, கிருஷ்ணரும் உள்ளே விழுந்தார். அங்கிருந்த வீரர்களை அழித்து "விஸ்வரூப தரிசனம்' காட்டினார். தூது சென்ற கண்ணன் இங்கு எழுந்தருளியதால் "பாண்டவ தூதப் பெருமாள்' என அழைக்கப்படுகிறார்.
பாரத யுத்தம் முடிந்த பின்பு, ஜனமே ஜெயன் என்ற மன்னர், வைசம்பாயன ரிஷியிடம் பாரதக் கதையைக் கேட்டார். கண்ணனின் விஸ்வரூப தரிசனத்தைத் தானும் தரிசிக்க வழிமுறைகளை ரிஷியிடம் மன்னர் வேண்டினார். ரிஷி ""சத்திய விரத úக்ஷத்திரமான காஞ்சிக்குச் சென்று அஸ்வமேத யாகம் செய்தால், யாக முடிவில் நீ விரும்பிய திருக்கோலத்தைக் காணலாம்'' என்று கூற யாகத்தின் திரண்ட பயனாய் பிரம்மாண்டமான கண்ணன் யாகவேள்வியில் தோன்றி, மன்னருக்கும், முனிவருக்கும் காட்சி கொடுத்தார் என்பது வரலாறு. அனைவரும் இக்கோலத்திலேயே இங்கு அருள வேண்டுமென வேண்டியதால் இங்கேயே இருந்து அருளத் தொடங்கினார்.
மூன்று நிலை ராஜகோபுரம், பலிபீடம், கொடிமரம், கருடாழ்வார், ஆலயத்தின் வலது புறம் மத்ஸ்ய தீர்த்தம் கடந்து பிராகார வலம் வந்து, கருவறையில் மூலவர் பாண்டவத் தூதரை கிழக்கு நோக்கி அமர்ந்த திருக்கோலத்தில் தரிசிக்கலாம்.
மிகப் பிரம்மாண்டமான திருமேனியுடன் "பத்ர' (இலை தழைகளானது) மற்றும் "வேத கோடி' விமானத்தின் கீழிருந்து அருளுகிறார். மேடையில் அமர்ந்த கண்ணன் நிலவறைக்குள் சென்றபோது இலை தழைகள் கண்ணனுக்குக் கூடாரம் போல் ஆனதால் "பத்ர'”வென அழைக்கப்படுகிறது. ஜனமே ஜெயனுக்கு காட்சி கொடுத்தபோது வேதங்களும் ஒலித்ததால் "வேத கோடி' விமானம் எனப்படுகிறது.
கருவறையில் அமர்ந்த திருக்கோலத்தில் சுமார் 25 அடி உயரத்துடன் பிரம்மாண்டமான உருவில் வீராசனத்தில் அபய வரதத்துடன், அழகுத் திருமேனியாய் கம்பீரமாகத் திகழும் திருமாலின் திருமார்பில் பிராட்டியும், கேட்ட வரமளிக்க கருணையோடு வீற்றிருக்கிறாள்.
பெருமாள் உற்சவரின் இருபுறங்களிலும் ஸ்ரீதேவி, பூதேவிக்குப் பதிலாக இத்தலத்தில் ருக்மணி, சத்யபாமா இருவரும் எழுந்தருள ஆண்டாள், நர்த்தன கண்ணன், சுதர்சனர் போன்ற உற்சவ மூர்த்திகளையும் கருவறையில் தரிசிக்கலாம்.
ராமானுஜரிடம் வாதப் போரிலே தோற்ற யக்ஞ மூர்த்தி சீடரானவுடன் இந்தப் பெருமாளுக்கு கைங்கரியம் செய்து பரமபதம் அடைந்தார். அதனால் அவருக்கு இத்தலத்தில் தனிச் சந்நிதி உள்ளது. கண்ணன் பஞ்ச பாண்டவர்களுக்குத் தூதுவராகச் சென்றதால் "பாண்டவ தூதப் பெருமாள்' என அழைக்கப்படுகிறார். இங்குள்ள கல்வெட்டுக்களில் இப்பெருமாளை "தூத ஹரி' என்று குறிக்கப்பட்டுள்ளது. இக்கோயில் முதலாம் குலோத்துங்க சோழனால் புதுப்பிக்கபட்டதாக இங்குள்ள கல்வெட்டுகள் மூலம் தெரிய வருகிறது.
கிருஷ்ணர் இத்தலத்தில் தன் பாதங்களை பூமியில் அழுத்தி விஸ்வ பாதயோக சக்திகளைக் கொண்டு அருள்கிறார். எனவே "இங்கு அடிப் பிரதட்சணம், அங்கப் பிரதட்சணம் செய்பவர்களுக்கு துன்பங்கள் விலகும்' என்பது ஐதீகம்.
சந்திரன் தனது 27 தேவியர்களில் ரோகிணியையும், கார்த்திகையையும் மணந்த பிறகே ஏனைய நட்சத்திர தேவிகளை மணந்தார். ரோகிணி தேவி, இப்பெருமாளை வழிபட்டு சந்திரனை அடைந்தாள். இத்தலத்தில் ரோகிணி சூட்சும வடிவில் தினமும் வந்து வணங்குகிறாள்.
எனவே, ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதன், சனிக்கிழமைகளில், அஷ்டமி திதிகளில் மற்றும் 8-ஆம் தேதிகளில் இங்கு வழிபாடு செய்வது சிறந்த பலனைத் தரும். பாண்டவ தூதப் பெருமாளை வணங்குவதால் உத்தியோகத் தடை, திருமணத் தடை போன்றவை நீங்குவதாக பக்தர்கள் நம்புகின்றனர்.
கிருஷ்ண ஜயந்தி, தீபாவளி, முக்கோட்டி ஏகாதசி ஆகியவை முக்கிய திருநாள்களாகக் கொண்டாடப்படுகின்றன. தினமும் காலை 7 மணி முதல் 11 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரையும் பெருமாளை தரிசனம் செய்யலாம். வாழ்வில் ஒருமுறையாவது சென்று தரிசித்துப் பலன்பெற வேண்டிய திருத்தலம் இது.
மேலும் விவரங்களுக்கு: 9445613899.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com