பக்தர்களைக் காக்கும் காவாந்தண்டலம் சோழீஸ்வரர்

காஞ்சியிலிருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் காஞ்சிபுரம்-உத்திரமேரூர் செல்லும் வழியில் காவாந்தண்டலம் என்ற கிராமம் அமைந்துள்ளது.
பக்தர்களைக் காக்கும் காவாந்தண்டலம் சோழீஸ்வரர்

காஞ்சியிலிருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் காஞ்சிபுரம்-உத்திரமேரூர் செல்லும் வழியில் காவாந்தண்டலம் என்ற கிராமம் அமைந்துள்ளது.     
இவ்வூரில் அருள்மிகு சுந்தராம்பாள் உடனுறை சோழீஸ்வரர் என்ற சிவன் கோயிலும் மற்றும் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீலட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலும் அமைந்துள்ளன.     
காஸ்யப முனிவர் இமயமலையிலிருந்து காஞ்சிக்கு வந்திருந்தபோது இவ்விடத்தில் கோயில் பணி செய்ததாகக் கூறப்படுகிறது. அப்போது ஊரின் பெயர் "காஸ்யப தண்டலம்' என்று இருந்தது. 1937-ஆம் ஆண்டிற்குப் பிறகு "காவாந்தண்டலம்' என்று மருவியுள்ளது.     
கோயில் கல்வெட்டில் "ஊற்றுக் காட்டுக் கோட்டத்துத் தாமனூர் நாட்டுச் சதுர்வேதி மங்கலமான காய்வாந் தண்டலம்' என்று உள்ளது. மான சர்மனுடைய கிரந்தக் கல்வெட்டு கோயில் கருவறையின் மேற்புறச் சுவரில் உள்ளது. அதேபோல் முதலாம் ராஜேந்திரன் மற்றும் இரண்டாம் ராஜேந்திர சோழர்களின் கல்வெட்டுகளும் உள்ளன. 
முதலாம் ராஜேந்திர சோழன் நான்காவது ஆட்சியாண்டில் (கி.பி.1016) தன் பெயரில் சிவன் கோயில் கட்டியதை விஷ்ணு கோயிலில் உள்ள கல்வெட்டு கூறுகிறது. "காவன் தண்டலமான சதுர்வேதி மங்கல சபையோம், இற்றை நாள் பக்கல் எம்மூர் பிரம்ம ஸ்தானத்தேய் கூட்டம் குறைவறக் கூடி இருந்து இவ்வாண்டு இந்நாடு வகை செய்கின்ற வைதூர் உடையான் வல்லன், கண்டன், பிச்சன், ஸ்ரீ ராஜேந்திர சோழன் என்னும் திருநாமத்தால் எழுப்பித்த ராஜேந்திர சோழ ஈஸ்வரமுடைய மகாதேவர்க்கு, சபையோம் இறையிலி தேவதானமாக வைத்த நிலங்களில்...' என்று கோயில் சுவரில் சாசனமாய் பொறிக்கப்பட்டுள்ளது.
கம்ப வர்மனுடைய 14-ஆவது ஆட்சியாண்டில் (கி.பி.883) வேங்கிநாடு குன்னூர் மானசர்மன் லட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலைக் கட்டி நந்தவனமும் ஏற்படுத்தியுள்ளார். இரண்டுப் பட்டி நிலத்தை இதற்காக ஒரு பொன் கொடுத்து வாங்கி வழங்கியுள்ளார்.
கி.பி. 887 -ஆம் ஆண்டு கல்வெட்டில் சித்திரை மாதம், திருவோண விழாவிற்கு ஏற்பாடு செய்தது குறிப்பிடப்பட்டுள்ளது. சித்திரை விழா 7 நாள்கள் நடைபெற்றன. 100 விளக்குகள் எரிந்து 16 மத்தளங்கள் முழங்கின. 
திருவாராதனை திருவமுதுபடி போன்றவற்றிற்கு வழங்கிய தானம் உத்திராயணம், தட்சிணாயணம், ஐப்பசி விசு, சித்திரை விசு ஆகிய திருவிழாக்களுக்கு வழங்கிய தான விவரங்கள் உள்ளன.
விக்கிரம சோழன் 6-ஆவது ஆட்சியாண்டில் வெட்டப்பட்ட கல்வெட்டு, சபையாரிடம் 6 காசுகள் கொடை வழங்கியதைக் குறிப்பிடுகிறது. முதலாம் குலோத்துங்க சோழனின் ஆட்சியில் மூவேந்த வேளான் குறிச்சி உடையான் கண்ணாள தேவனின் மனைவியான பூங்கமலச் செல்வி கோயிலுக்கு நிலதானம் செய்தது; அவர் சகோதரிகளின் பெண்களான பிள்ளை நங்கை, திருவரங்கசானி இருவரும் சந்தி விளக்கு வைக்க தானம் தந்தது ஆகிய விவரங்கள் கல்வெட்டில் உள்ளன. இறைவன் பெயர் "பிரம்மதேயம் காவாந்தண்டலத்துத் திருவறைச் சாந்துணை ஆளுடையார்' என சாசனங்கள் கூறுகின்றன. மூன்றாம் குலோத்துங்கனின் 26-ஆம் ஆட்சியாண்டில் பொறிக்கப்பட்ட கல்வெட்டில் ஊரின் பெயர் "ஸ்ரீகரண சதுர்வேதி மங்கலம்' என்று உள்ளது.
திருக்கோயிலின் அமைப்பு: செய்யாற்றங்கரைக்கு மேற்குப் பகுதியில் முக மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை என்ற அமைப்பில் கோயில் உள்ளது. பலிபீடம், கொடிமரம், நந்தி மண்டபத்தோடு அமைந்துள்ளது.     கருவறையில் எம்பெருமான் சோழீஸ்வரர் மிகக் கம்பீரமாக காட்சி நல்குகிறார். வட்ட
வடிவ ஆவுடையாருடன் கூடிய சிவலிங்கம். மஹா மண்டபத்தின் இடப்புறத்தில் அம்பிகை சந்நிதி அமைந்துள்ளது. சுமார் நான்கடி உயரத்தில் நின்ற கோலத்தில் அம்பிகை சுந்தராம்பாள் கருணைபொங்கும் முகத்துடன் தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
மஹா மண்டபத்தின் வலது பக்கத்தில் நால்வர் சந்நிதி அமைந்துள்ளது. சித்தி விநாயகர், தட்சிணாமூர்த்தி, மஹா விஷ்ணு, பிரம்மதேவர், துர்க்கை, சண்டிகேஸ்வரர், நவகிரக சந்நிதிகளும் உள்ளன.     
மாதம் இரு பிரதோஷங்கள், வருடத்தில் ஆறு நடராஜர் அபிஷேகங்கள், கார்த்திகை சோமவாரம், பெüர்ணமி, ஐப்பசி அன்னாபிஷேகம் மற்றும் கந்தசஷ்டி விழாக்கள் சிறப்புற நடைபெறுகின்றன.
பரிகாரங்கள்: இத்தலத்து ஈசனை வணங்குவதால் திருமணத்தடைகள் நீங்கும், புத்திரபேறு கிடைக்கும், கடன் பிரச்னை நிவர்த்தியாகும், குடல்நோய் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
பேருந்து வசதிகள்: காஞ்சிபுரத்திலிருந்து உத்திரமேரூர் செல்லும் டி-34 என்ற அரசுப்பேருந்தும், தனியார் பேருந்தும் காவாந்தண்டலம் செல்கின்றன. மேலும் விவரங்களுக்கு: வேலவன், பழனி - 98942 14996, 94447 78747.
-எழுச்சூர் க. கிருஷ்ணகுமார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com