பொருநை போற்றுதும்! - 115

முத்துக்குளிப்பவர்கள், முத்துச்சிப்பிகளை எவ்வாறு சேகரித்தனர் என்பதையும் மார்க்கோபோலோ பதிந்திருக்கிறார்: 
பொருநை போற்றுதும்! - 115

முத்துக்குளிப்பவர்கள், முத்துச்சிப்பிகளை எவ்வாறு சேகரித்தனர் என்பதையும் மார்க்கோபோலோ பதிந்திருக்கிறார்: 
பெரிய கப்பல்களில், சிறிய படகுகள் பலவற்றைக் கட்டிக்கொண்டு, முத்துக்குளிப்பவர்கள் கடலுக்குள் நெடுந்தொலைவு செல்கின்றனர். பின்னர், படகுகளை இறக்கி அவற்றுள் தாங்களும் இறங்கிக் கொள்கின்றனர். படகுகளில் சிறிது தூரம் பயணித்துக் கடலுக்குள் குதித்துக் கடலடிக்குச் செல்கின்றனர். கடலடியிலிருந்து முத்துச்சிப்பிகளைச் சேகரம் செய்துகொண்டு, படகுக்கு வருகின்றனர். மீண்டும் கடலடிக்குச் சென்று இன்னும் சிப்பிகளைச் சேகரித்துத் திரும்புகின்றனர். இவ்வாறு ஒருவரே பலமுறை கடலடிக்குச் சென்று சிப்பிகள் பலவற்றைச் சேகரித்து வருவார். சிப்பிகளிலிருந்து எடுக்கப்படும் முத்துக்களுக்கு மதிப்பு மிக அதிகம். 
முத்துக் குளியல் குறித்துப் பதிவு செய்கிற போலோ, காயலில் அரபுக்குதிரைகள் இறக்குமதியானதையும் பாண்டிய மன்னர்கள் குதிரைகளை வாங்கியதைப் பற்றியும் எழுதுகிறார்.
வாஸஃப் என்றழைக்கப்பட்டவரும், 14-ஆம் நூற்றாண்டுப் பாரசீக வரலாற்று ஆய்வாளருமான வாஸஃப் அப்தல்லா இபின்ஃபத்லல்லா, காயலுக்குவந்துள்ளார். அரபுக்குதிரைகள் இறக்குமதி செய்யப்பட்டதை விளக்கமாகப் பதிவு செய்யும் இவர், முதன்முதலாகத் தென்னிந்தியாவிற்கு அராபியர்கள் வந்தது காயல் வழியாகவே என்றும் கூறுகிறார். 
9 மற்றும் 10-ஆம் நூற்றாண்டுகளுக்கு முன்னர், சிறிய அளவில் வந்து போய்க்கொண்டிருந்த அராபியர்கள், தமிழ்நாட்டை "மாபார்' என்றழைத்துள்ளனர். கொற்கை வீழ்ந்து காயல் தலைதூக்கத் தொடங்கிய காலகட்டத்தில்தான், இவர்களின் வரத்து அதிகப்பட்டுள்ளது. பலர், தமிழகப் பெண்களை மணந்து இங்கேயே குடியமர்ந்துள்ளனர். 
கால்ட்வெல் பாதிரியாரின் குறிப்புகளைக் கொண்டு பார்த்தால், 13-ஆம் நூற்றாண்டுக் காலத்தில், அராபியர்கள் பெருமளவில் காயல் நகருக்கு வந்தனர் என்று தெரிகிறது. "மாபார் நாட்டுக் காயல்பட்டினம்' என்றே இவ்வூரைஅழைத்த இவர்கள், நெய்தல் பகுதிகளிலேயே தங்கி, ஏற்றுமதி-இறக்குமதித் தொழிலிலும் கப்பல் தொழிலிலும் ஈடுபட்டனர். பருவக்காற்றின் நீக்குபோக்குகளை நன்கறிந்திருந்த இவர்கள், தென்மேற்குப் பருவக்காற்றின்போது தமிழகம் வந்து, பின்னர் வடகிழக்குப் பருவக்காற்றின்போது புறப்பட்டுச் சென்றனர். 
மரக்கலங்கள் ஓட்டியதால், மரக்கலராயர்கள் என்று வழங்கப்பட்டுக் காலப்போக்கில், மரைக்காயர்கள் என்றும் பரைக்கான் என்றும் ஆகிவிட்டதாகவும் தெரிகிறது. 13-14-ஆம் நூற்றாண்டுகளில், எகிப்து நாட்டில் நேர்ந்த பெருநில நடுக்கம் ஒன்றின்போது, ஐந்தாறு மரக்கலங்களில் அராபியர்களும் பிறரும் காயல் நகருக்கு வந்தனராம். 
கால்ட்வெல் பாதிரியார் தருகிற குறிப்புகளிலிருந்து, "காயல்' என்னும் பெயர், கபால், காபில், பபால், ககிலா போன்ற பெயர்களால்அழைக்கப்பட்டிருக்கக்கூடும் என்று ஊகிக்க முடிகிறது. பழம்பதிவுகளைப் பிரதியெடுத்தவர்களின் கவனக்குறைவே இப்பெயர் மாற்றங்கள் என்பதாகவும் கால்ட்வெல் கூறுவது கவனிக்கத்தக்கது. 
வாஸ்கோடகாமா, 15-ஆம் நூற்றாண்டின் கடைப்பகுதியில் காயலுக்கு வந்துள்ளார். முத்துக்குளித்தல் தொழில் அபாரமாக நடைபெற்றதாகவும், முஸல்மான் அரசர் ஒருவரது பிரதேசமாக இது விளங்கியதாகவும் பதிவு செய்கிறார். 
16-ஆம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் இந்தியாவிற்கும், தென்னகத்திற்கும் வந்த போர்த்துகீசிய எழுத்தாளர் ஒருவர், மலையாளம் கற்றுக் கண்ணனூரில் மொழிபெயர்ப்பாளராகப் பணியமர்ந்தார். 
உலகைச் சுற்றிவர விருப்பம் கொண்ட ஃபெர்டினாண்ட் மெகல்லனோடு இவருக்கு ஏற்பட்ட  நட்பு, மெகல்லன் இவருடைய சகோதரியை மணந்து கொண்ட உறவாகவும் மலர்ந்தது. டுவார்டேபர் போஸா என்னும் இவர், காயலுக்கு வந்துள்ளார். புனித சேவியர் அவர்களும் இங்கு வந்ததாகத் தெரிகிறது. 
அராபியர்கள், ரோமானியர்கள், போர்த்துகீசியர்கள், டச்சுக்காரர்கள் என்று பலரும் வந்து வாணிபம் நடத்திய துறைமுகப்பட்டினம் காயல். மார்க்கோபோலோவும் பிறரும் விவரித்த காயல், இப்போது "பழைய காயல்' என்று வழங்கப்படுகிற பகுதியாகும். "காயல்' என்னும் சொல்லுக்கு, "அவ்வளவாக ஆழமில்லாத ஆற்றுச்சங்கமப் பகுதி' அல்லது "கடற்கழி' என்று பொருள். அதாவது, ஆறொன்று கடலோடு கூடுமிடத்திற்கு அருகே, அவ்வளவாக ஆழமும் அபாயமும் இல்லாமல், மக்கள் நடமாட்டத்திற்கும் நாவாய் போக்குவரவுக்கும் வசதியாக இருக்கும் இடம். 
பழைய வரைபடங்களைக் காணும்பொழுது, பொருநையாளின் கடல் சங்கமப் பகுதியில், இப்படிப்பட்ட காயல் தடங்கள் பல இருந்ததை அறியமுடிகிறது. இங்கெல்லாம் உப்பளங்கள் செழித்துள்ளன. 
இயற்கைச் சீற்றங்கள் கொற்கையைக் கொள்ளையிடத் தொடங்கிய காலத்தில், வணிகத்தைத் தொடர்வதற்காகக் காயல்கழிகளின் எல்லையில் நகரமொன்றை மக்கள் நிறுவினர். காயல் என்றே இதனை அழைத்தனர். காயல், பழைய காயல், புன்னைக்காயல், காயல் பட்டினம், சோனகப்பட்டினம் போன்ற பெயர்கள், காயல் நகரம் மற்றும் இதன் சுற்று வட்டாரச்சிறப்புகளை நினைவூட்டுவனவாகும். 
கால்ட்வெல் பாதிரியார் கொற்கையிலும் காயலிலும் ஆய்வுகள் பல செய்தார். காயலில் கிரேக்கச் சுவடுகளும் முதுமக்கள் தாழிகளும் கிட்டினவாம். சீன, அராபியப் பாண்டங்கள், அராபியக் காசுகள்ஆகியவையும் கிடைத்தன. 
காயல் பகுதி அகழாய்வுகளின்போது, வயல்வெளிகளுக்கு அடியில் பூமியில் புதைக்கப்பட்ட பொருள்கள் கிட்டியுள்ளன. பாதுகாப்புக்காகக் காசுகளையும் முக்கியமான பொருள்களையும் மக்கள் இவ்வாறு புதைத்திருக்கக்கூடும்; பின்னர் இவை மறக்கப்பட்டிருக்கவேண்டும்; அல்லது புதைத்தவர் இறந்துவிட, பிறருக்குத் தெரியாமலே போயிருக்கக்கூடும். 

(தொடரும்) 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com