குழந்தையுடன் கொலுவிருக்கும் இசக்கியம்மன்

கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை போன்ற மாவட்டங்களில் பெரும்பான்மை மக்களின் தெய்வமாக விளங்கும் இசக்கியம்மன் தன் பக்தர்களுக்காக சென்னை-அம்பத்தூர்-கள்ளிக்குப்பத்தில் குடி கொண்ட நீண்ட
குழந்தையுடன் கொலுவிருக்கும் இசக்கியம்மன்

கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை போன்ற மாவட்டங்களில் பெரும்பான்மை மக்களின் தெய்வமாக விளங்கும் இசக்கியம்மன் தன் பக்தர்களுக்காக சென்னை-அம்பத்தூர்-கள்ளிக்குப்பத்தில் குடி கொண்ட நீண்ட வரலாற்றைக் காண்போம்:

அம்பத்தூரையொட்டிய பகுதிகள் விரிவாக்கம் பெற்று பல்வேறு நகர்கள், வீட்டுமனைகளாக உருவாகிக் கொண்டிருந்தன. அச்சமயம், மனைப்பிரிவு ஒன்றில் கோயிலுக்கு என தனி இடம் ஒதுக்கி திருக்கோயில் கட்டலாம் எனக் கருதி அனுமதி கோரி அரசு அங்கீகாரத்திற்கு அனுப்பினர்.

அன்றிரவு, மனைப்பிரிவு பங்குதாரர் ஒருவரின் கனவில் வந்த பெண்தெய்வம் கையிலே ஒரு குழந்தையை ஏந்திக்கொண்டு ""எனக்கொரு வீடு வேண்டும்'' என்று கேட்டதாம்.

மறுநாள் அவருக்கு பொட்டலூரணி என்ற கிராமத்தில் இருந்து வந்த கடிதத்தில் "உயிரை இழுத்துக் கொண்டிருக்கும் பாட்டியை வந்து பார்த்துவிட்டு செல்லவும்' என்று எழுதியிருந்தது.

இரண்டு தலைமுறைக்கு முன் அவ்வூரில் இருந்து வந்தவர் அவர். இங்கே வந்த பின் ஊர்த்தொடர்பு அற்றுவிட்டது. ஆனாலும் கடிதம் கண்டவுடனே தூத்துக்குடியிலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ள பொட்டலூரணி கிராமத்தைத் தேடிக் கண்டுபிடித்துச் சென்றார்.

பாட்டி தன் பேரனைக் கண்டவுடன் மகிழ்ந்து பேசத் தொடங்கினார்.
பாட்டி அவரிடம் ""ஊர் திரும்பும் போது இசக்கியம்மனை தரிசனம் செஞ்சுட்டுப் போ! உன்னோடு துணைக்கு வருவாள்!'' என்றார்.
அதன்படி அவரும் தூத்துக்குடி கல்லூரி பிரதான சாலையில் உள்ள வேம்படி இசக்கியம்மன் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்தார். அம்மனைப் பார்த்ததும் அவருக்கு ஆச்சரியம்.
"கனவில் வந்து வீடு கேட்ட தெய்வம் இதுவே' என்பதை உணர்ந்தார். அதேபோல் முப்பந்தல் இசக்கியம்மனையும் தரிசனம் செய்து, அம்மன் வரலாறைத் தெரிந்து கொண்டு சென்னைக்குத் திரும்பினார்.
இசக்கியம்மன் வரலாறு: முப்பந்தலுக்கு அருகே பழவூரில் வசித்த மணிவண்ணன் என்பவரின் தங்கை லட்சுமி என்ற பெண்ணுக்கும், சிவாலய அர்ச்சகருக்கும் காதல் உண்டானது.
அர்ச்சகர் அனைத்தையும் துறந்து கள்ளிக்காட்டில் தங்கினார். லட்சுமி அங்கு வந்து அவரை மகிழ்வித்தாள். ஒருநாள் லட்சுமி தூங்கும்போது அர்ச்சகர் பெரிய கல்லைத் தூக்கிப்போட்டு அவளைக் கொன்றார். அதைக் கண்டு துடித்து அண்ணன் மணிவண்ணனும் மாண்டான். அர்ச்சகரோ தப்பித்து ஓடும் வழியில் அரவம் தீண்டி இறந்தார்.
அண்ணனும், தங்கையும் பழி வாங்க யட்ச சிசுக்களாகப் பிறந்து நீலன், நீலியாக கள்ளிக்காடு வந்தனர். நீலன் வேம்பாக மாற, நீலியோ வருவோர், போவோரைக் கொன்று காதலனுக்காகக் காத்திருந்தாள்.
அர்ச்சகர் செட்டி குலத்தில் பிறந்து வாணிபம் செய்து வந்தார். அவரைக் கண்ட நீலி, குறத்தி வேடமிட்டு, கள்ளிச்செடியை பிள்ளையாக்கி கையில் ஏந்தியபடி கிராம மக்களிடம் ""இவன் என் கணவன். என்னையும் பிள்ளையையும் காப்பாற்ற மறுக்கிறான். அவனை என்னுடன் வாழச் சொல்லுங்கள்'' என வழக்குரைத்தாள்.
பழவூர் கிராமத்தார் வழக்கப்படி அன்று இருவரையும் ஒரே அறையில் வைத்துப் பூட்டுகிறார்கள். நீலி இரவில் வாணிபச் செட்டியின் நெஞ்சைப் பிளந்து பழி தீர்த்தாள்.
பின்னர், முப்பந்தலில் வாழ்ந்த ஒüவைப் பிராட்டி மக்கள் நலனுக்காக நீலியை சாந்தப்படுத்த, தாயன்பு பெருக்கெடுத்து, மக்களுக்கு நன்மை செய்ய இசக்கியம்மனாக சாந்த சொரூபியாக அமர்ந்தாள்.
சென்னைக்கு வந்த மனைப்பிரிவு பங்குதாரர் மற்ற பங்குதாரர்களிடம் பேசியபோது, அவர்களுடைய கனவிலும் பெண்ணொருத்தி வந்து வீடு கேட்டதாகக் கூறினர். வியப்படைந்த மனைப்பிரிவு பங்குதாரர் இசக்கியம்மன் வரலாற்றை அவர்களிடம் கூறினார்.
கோயில் கட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் இசக்கியம்மனை எழுந்தருளச் செய்ய வேண்டும் என ஏக மனதுடன் தெய்வ ஒப்புதல் கேட்டு முடிவெடுத்தனர். சக்தி இருந்தால்தான் எந்த இயக்கமும் நடக்கும். அந்த இயக்கத்தை நடத்துவதால் அந்த சக்திக்கு "இயக்கி' என்ற பெயர் வந்தது. நாளடைவில் "இசக்கி' என மருவி, சக்தியின் வெளிப்பாடாக "இசக்கியம்மன்' என அழைக்கப்பட்டாள்.
ஓம் சக்தி நகர் என்ற பெயரில் மனைப்பிரிவுக்கு பெயரிட்டு முடித்த மறுநாள் கோயில் கட்ட அங்கீகாரமும் கிடைத்தது. வெற்றி விநாயகர் சந்நிதியும், இசக்கியம்மன் சந்நிதியும் கட்ட அம்பாள் தெற்கிருந்து சென்னைக்கு எழுந்தருளினாள். கருவறையில் ஓம்சக்தி இசக்கியம்மன் இடுப்பில் குழந்தையுடன் சாந்த சொரூபியாய் வலக்கையில் சூலமும் ஏந்தி அருள்கின்றாள். நவகிரஹங்களும், முருகன், திருவள்ளுவர், ஒüவைப்பிராட்டியார் ஆகிய சுற்றுப் பிராகார சந்நிதிகளும் அமைந்தன.
பிரார்த்தனையாக திருமணத்தடை நீக்கல், நல்வாழ்வு, புத்திர பாக்கியம், கல்விச்செல்வம், வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டிக்கொண்டு பலரும் பலன் பெறுகிறார்கள்.
நவராத்திரி நாள்களில் தினம் மஞ்சள், விபூதி, சந்தனம், குங்குமம் போன்றவற்றால் காப்பு அலங்காரம் நடைபெறும்.
அம்பத்தூர்-செங்குன்றம் சாலையில் கள்ளிக்குப்பம் ஆர்ச் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, மேனாம்பேடு சர்வீஸ் சாலை வழியாகச் சென்றால் ஓம்சக்தி நகர்-ராஜாஜி தெருவில் இத்திருக்கோயிலை அடையலாம். காலை 6 மணி முதல் 11 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் இசக்கியம்மனை தரிசனம் செய்யலாம். மேலும் விவரங்களுக்கு: 9840736575.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com