கலைவாணி அருள்புரியும் திருத்தலங்கள்

கலைவாணி அருள்புரியும் திருத்தலங்கள்

கலைமகளுக்கு தனிக்கோயில் தமிழகத்தில் திருவாரூர் மாவட்டம் கூத்தனூரில் அமைந்துள்ளது. இது போன்று, பல  திருத்தலங்களில் சரஸ்வதிக்குத் தனி சந்நிதிகள் உள்ளன.

கலைமகளுக்கு தனிக்கோயில் தமிழகத்தில் திருவாரூர் மாவட்டம் கூத்தனூரில் அமைந்துள்ளது. இது போன்று, பல  திருத்தலங்களில் சரஸ்வதிக்குத் தனி சந்நிதிகள் உள்ளன. அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்:

அட்சர பீடம் (திருவாரூர்): திருவாரூர் தியாகராஜ சுவாமி திருக்கோயிலில் அட்சரங்களே தனிச் சந்நிதியில் கொலுவிருக்கின்றன. இந்த அட்சரங்களை அம்பிகையாக வழிபடுகிறார்கள். கமலாம்பிகையை சுற்றி வரும்போது தென்புறம் அட்சரபீடத்தையும், வடபுறம் சரஸ்வதி சந்நிதியையும் தரிசிக்கலாம்.

வாணியம்பாடி: பிரம்மாவின் சாபத்தால் பேசும் சக்தியை இழந்த வாணி, வாணியம்பாடியில் உள்ள அதிதீஸ்வரரையும், பெரியநாயகியையும் பூஜித்து தன்னுடைய குரலை மீண்டும் பெற்றாள். சிவனும், பார்வதியும் வாணிக்கு அருள் செய்ததோடு அவளைப் பாடும்படியும் கூறினர். அதன்படி வாணி அழகாகப் பாடியதால் இவ்வூர் வாணியம்பாடி என்றானது. ஆலயத்தின் முகப்பிலேயே சிவ - பார்வதியை கலைவாணி வழிபடும் சுதைச் சிற்பம் உள்ளது. தனிச் சந்நிதியில் வீணை ஏந்திய வாணி அருள்கிறாள். வேலூர் - கிருஷ்ணகிரி சாலையில் இத்தலம் அமைந்துள்ளது. 

உத்தமர் கோயில்: திருச்சிக்கு அருகிலுள்ளது. மும்மூர்த்திகளும் தங்கள் பத்தினியோடு அருள்பாலிக்கும் தலம். பிரம்மாவும், சரஸ்வதியும், தனித்தனி சந்நிதிகளில் அருள்பாலிக்கிறார்கள்.

கண்டியூர்: தஞ்சை மாவட்டம், திருவையாறுக்கு அருகிலுள்ள இத்தலம் அட்ட வீரட்டத் தலங்களில் ஒன்று. இங்கே, பிரம்மாவின் அருகில் சரஸ்வதி அமர்ந்துள்ளாள்.

காஞ்சிபுரம்: கைலாசநாதர் கோயிலில் மூன்று இடங்களில், சரஸ்வதி தேவியின் திருவுருவம் உள்ளது. காஞ்சிபுரம் யதோத்காரி பெருமாள் கருவறையில், சொன்ன வண்ணம் செய்த பெருமாள் பாதத்தின் அருகில் அமர்ந்தவாறு காட்சி தருகிறாள் கலைமகள். காமாட்சியம்மன் ஆலயத்திலும், கச்சபேசுவரர் கோயிலிலும் சரஸ்வதி சந்நிதிகள் உள்ளன. காமாட்சியம்மன் கோயிலில் எட்டு கரங்கள் கொண்ட திருவுருவம் உள்ளது.

மதுரை: மீனாட்சி - சுந்தரேசுவரர் ஆலயத்தில், சுவாமி சந்நிதி பிராகாரத்தில், வடக்கு நோக்கியவாறு அமைந்துள்ளது சரஸ்வதி சந்நிதி. அன்னையின் கையில் வீணை இல்லை.

ராமேஸ்வரம்: ராமநாத சுவாமி திருக்கோயிலில் வீணையேந்திய சரஸ்வதி சந்நிதி உள்ளது.

நாகூர்: நாகப்பட்டினம் அருகிலுள்ள நாகூர் திருத்தலத்தில் ஞான சரஸ்வதியின் செப்புத் திருமேனி உள்ளது.

திருவிடைமருதூர்: சரஸ்வதி தேவி நான்கு தலைகளுடன், வீணையை ஏந்திய நிலையில் திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயிலில் வீற்றிருக்கிறார்.
தாடிக்கொம்பு: இத்தலம், திண்டுக்கல்- வேடசந்தூர் சாலையில் 9 கி.மீ. தொலைவில் உள்ளது. சௌந்தரராஜப் பெருமாள் அருள்பாலிக்கிறார். கல்வியை அருளும் தெய்வங்களான ஹயக்ரீவர், சரஸ்வதிக்குத் தனித் தனியே சந்நிதிகள் அமைந்துள்ளன.

வேதாரண்யம்: வேதங்களே ஈசனை வணங்கிய தலம். இக்கோயிலின் பிராகாரத்தில் மிகப்பெரிய சரஸ்வதி வீற்றிருக்கிறாள். கரங்களில் வீணையில்லை; மாறாக சுவடிகள் உண்டு.

சேலம்: சேலம் மன்னார்பாளையத்தில்  சரஸ்வதியின் அம்சமான ராஜமாதங்கி எழுந்தருளியிருக்கிறாள்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் ராஜவீதி அரண்மனை வளாகத்தில் மராட்டிய மன்னர் காலத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சரஸ்வதி ஆலயம் உள்ளது. 

கும்பகோணம்: கும்பகோணத்தில் உள்ள பிரம்மன் கோயிலில் பிரம்மா தன் தேவியர்களான சரஸ்வதி, காயத்ரி தேவியருடன் நின்ற கோலத்தில் வேத நாராயணப் பெருமாளிடம் ஆசி பெறும் கோலத்தில் உள்ளார்.

அரியப்பாக்கம்: சென்னை - திருப்பதி நெடுஞ்சாலையில் பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயத்திலிருந்து சுமார் 1 கி.மீ. தூரத்தில் அரியப்பாக்கம் கிராமத்தில் ஸ்ரீ வித்யாரம்ப ஞான சரஸ்வதி திருக்கோயில் கொண்டுள்ளாள்.

தொட்டப்பாளையம்: வேலூரில் உள்ள தொட்டப்பாளையம் தாரகேஸ்வரர் ஆலயத்தில் கோஷ்ட தெய்வமான பிரம்மாவிற்கு எதிரில் சரஸ்வதி தேவி அமர்ந்துள்ளாள்.

திருநெல்வேலி: கீழ மாடவீதியில் உள்ள கோமதியம்மன் சந்நிதிக்கு எதிரே கலைவாணிக்கு  தனிக் கோயில் உள்ளது.

சிருங்கேரி  சாரதாம்பிகை: கர்நாடக மாநிலம், சிக்மகளூர் மாவட்டத்தில், துங்கபத்ரா நதிக்கரையில், சிருங்கேரி தலத்தில் சந்தன மரத்தாலான சாரதாம்பிகை கோயில் அமைந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com