கதலி வனத்தில் காட்சியளித்த கிருஷ்ணன்

மஹாபாரத யுத்தம் முடிந்த பிறகு நதிக்கரையோரத்திலிருந்த கதலி வனத்தில் எவருமறியாமல் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த ஸ்ரீமன் நாராயணனை கிருஷ்ணாவதார ரூபத்தில் வணங்க வேண்டும் என்ற காரணத்தினால்
கதலி வனத்தில் காட்சியளித்த கிருஷ்ணன்

மஹாபாரத யுத்தம் முடிந்த பிறகு நதிக்கரையோரத்திலிருந்த கதலி வனத்தில் எவருமறியாமல் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த ஸ்ரீமன் நாராயணனை கிருஷ்ணாவதார ரூபத்தில் வணங்க வேண்டும் என்ற காரணத்தினால் சிவபெருமான் தவம் செய்யத் துவங்கினார். தகவலறிந்த மற்ற தேவர்களும் பகவான் கிருஷ்ணனை தரிசனம் செய்வதற்காகக் காத்திருந்னர். அனைவருக்காகவும் திருமால் அழகிய வேணுகோபாலன் திருக்கோலத்தில் எழுந்தருளி வேணுகானம் இசைத்தார். ஈசனும் தேவர்களும் கதலி வாழை வனத்தில் திருமாலை வணங்கினர். மால் கரம் பிடித்துக் கொடுக்க மதுரை மீனாட்சியம்மையை ஈசன் மணம் புரிந்து கொண்டதாக தலவரலாறு கூறுகிறது.

பெருமாள் மதனகோபால ரூபத்தில் சிவபெருமானுக்கு காட்சி தந்ததால் மதுரையில் உள்ள கிருஷ்ணன் கோயில் மதனகோபால சுவாமி திருக்கோயில் என அழைக்கப்படுகிறது

வாழை மரங்கள் நிறைந்த கதலி வனத்தில் சிவபெருமானுக்கு காட்சி கொடுத்ததால் இத்தலம் "கதலி வன க்ஷேத்திரம்' எனவும் அழைக்கப்படுகிறது.
பத்து கல்வெட்டுகள் திருக்கோயிலின் சுவர்களில் உள்ளன. அவற்றில் இத்திருக்கோயிலின் இறைவன் "திருத்துருத்தி மகாதேவர்' எனக் கூறப்பட்டுள்ளது. திருத்துருத்தி என்பது புல்லாங்குழல் ஆகும் . 7 கல்வெட்டுகளில் அகமுடையான் அழகிய மணவாளன் எனும் பெயர் காணப்படுகின்றது. "அழகிய மணவாளன்' என்பதின் மறு வடிவமே "மதனகோபாலன்' என்பதாகும்.

திருவரங்கம் செல்லும்முன் ஆண்டாள் கள்ளழகர் தரிசனம் முடிந்து பெரியாழ்வாருடன் இங்கு வந்து கண்ணனை தரிசித்துச் சென்றதாக வரலாறு கூறப்படுகிறது. இதிலிருந்து ஆண்டாள் காலத்திலேயே இக்கோயில் இருந்திருக்கிறது என்கிறார்கள். விஜயநகர மன்னர்கள் காலத்தில் இத்திருக்கோயில் திருத்தி அமைக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கி.பி.1550 -ஆம் ஆண்டு வாக்கில் திருக்கோயில் மீண்டும் புதுப்பித்து திருத்தி எடுத்து கட்டப்பட்டுள்ளது என்ற குறிப்பும் கிடைக்கிறது.1942 -ஆம் ஆண்டில் வஸந்த மண்டபம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாநகரில் மேலமாசிவீதியில் தென்மேற்குப்பகுதியில் கிழக்கு முகமாய் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.

16-ஆம் நூற்றாண்டில் மதுரை நாயக்க மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட 5 நிலை கிழக்கு நோக்கிய ராஜகோபுரம் சுதைச் சிற்பங்களுடன் விளங்குகிறது. கோயிலில் நுழைந்தவுடன் இடது பக்கம் அரசமரத்தடியில் முழுமுதற்கடவுளாக விநாயகர் அமர்ந்திருக்கிறார். இக்கோயிலில் அறுபதாம் கல்யாணம் அதிகளவில் நடைபெறுகிறது. அறுபதாம் கல்யாணம் செய்தவர்கள் இந்த அரச மர விநாயகரை வணங்கினால் சந்ததி குறைவின்றி பெருகும் என்பது நம்பிக்கை.

கருவறைக்கு முன்புறம் மகாமண்டபம் முன்மண்டபம் சிற்ப வேலைப்பாடுடைய தூண்களால் தாங்கப்படுகிறது. கருவறையில் மதனகோபால சுவாமி என்ற திருப்பெயரோடு வேணுகோபாலன் இரண்டு கரங்களில் புல்லாங்குழல் பிடித்துக் கொண்டும், இரண்டு கரங்களில் சங்கு சக்கரம் ஏந்தியும், இடது காலை ஊன்றி, வலது கால் சற்று மாற்றி அழகான திரிபங்கநிலையில் காட்சியளிக்கிறார்.

அவருக்கு அருகில் பாமா ருக்மணி தேவியர் நின்ற கோலத்தில் அருளுகின்றனர். இத்தலத்து கண்ணன் மேல் பாடப்பட்ட "மதன கோபால சதகம்' என்ற நூலும் உள்ளது.

உற்சவர்கள் ஸ்ரீமதனகோபாலன் - ஸ்ரீதேவி பூதேவி என்ற திருநாமத்துடன் எழுந்தருளியுள்ளனர். பெருமாளுக்கு பாசிப்பருப்பு பாயசம் செய்து நைவேத்தியம் செய்தால் குழந்தை பாக்கியம் உண்டாகும் என்றும் வேண்டி வருகின்றனர்.

இத்தல மூர்த்திகளுக்கு வேண்டிய வஸ்திரங்களை பெரும்பாலும் செளராஷ்டிர சமூகத்தினர் மட்டுமே வழங்கி வருகின்றனர்.

தனிக்கோயில் தாயாராக ஸ்ரீ மதனமதுரவல்லித் தாயார் சந்நிதி அமைந்துள்ளது . அமர்ந்த கோலத்தில் நான்கு கரங்களுடன் அருளும் தாயாருக்கு மருதாணி அரைத்து வந்து கரங்களில் சார்த்தி வழிபட்டால் திருமணத்தடைகள் விலகும்.

ஆண்டாள், நவநீதகிருஷ்ணன், கருடாழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், பெரியாழ்வார், ஆஞ்சநேயர், துர்க்கை, நவகிரகம் ஆகியோர் எழுந்தருளியுள்ளனர். ஹரிஹர சர்ப்பராஜராக நாகராஜர் சந்நிதி அமைந்துள்ளது. இங்கு வெள்ளிக்கிழமைகளில் ராகுகாலபூஜை நடந்து வருகிறது.

ராமர் சந்நிதியில் விஜய ராமராக ராமன், லட்சுமணன், சீதை ஆகியோர் நின்றவாறு காட்சியளிக்க அருகில் அனுமன் அஞ்சலி அஸ்தத்தோடு கைகூப்பி நிற்கின்றார். எந்தச் செயலிலும் வெற்றி பெற வேண்டுவோர் பிரார்த்தனை செய்யும் சந்நிதியாக உள்ளது.

ஒவ்வொரு மாதமும் ரோகிணி நட்சத்திரத்தில் கிருஷ்ணன் திருவீதியுலா நடைபெறுகிறது. ஆவணி பிரம்மோற்சவம், சித்திரை வருடப்பிறப்பு, திருவாடிப்பூரம் போன்ற திருவிழாக்கள் விமரிசையாக நடைபெறும்.

புரட்டாசி மாத சனிக்கிழமைகள் போன்ற பல்வேறு தினங்களில் சிறப்புப் பூஜைகள் நடைபெறும். நவராத்திரி, விஜயதசமி நாள்களில் பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தருள்வார்.

கார்த்திகை தீபம், தனுர் மாதம், அத்யயன உற்சவம், வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு, மாட்டுப் பொங்கலன்று மஞ்சு விரட்டு, பங்குனி உத்திரத் திருக்கல்யாண உற்சவம் ஆகியவை சிறப்பாக நடைபெற்று வருகின்றன. பெருமாளுக்கு ஸ்ரீஜயந்தி உறியடி உற்சவம் செப்.11-ஆம் தேதி நடைபெறுகிறது.

மேலும் விவரங்களுக்கு: 0452234963; 9487391418.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com