மந்திரம் போற்றுதும்.. திருமந்திரம் போற்றுதும்...:  ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்  - 17

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்நன்றே நினைமின் நமன்இல்லை நாணாமேசென்றே புகும்கதி இல்லை நும்சித்தத்து
மந்திரம் போற்றுதும்.. திருமந்திரம் போற்றுதும்...:  ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்  - 17

"ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நினைமின் நமன்இல்லை நாணாமே
சென்றே புகும்கதி இல்லை நும்சித்தத்து
நின்றே நிலைபெற நீர்நினைந்து உய்மினே'  
(பாடல் 2104)

பொருள் : மனித குலம் முழுமையும் ஒன்று தான். உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற பாகுபாடு இல்லை. இறைவனும் ஒருவனேதான். எப்போதும் எவர்க்கும் நல்லதையே நினையுங்கள். அடுத்தவர்களுக்கு நல்லது நினைக்கும் போது, உங்கள் உயிருக்கு ஆபத்தில்லை. வெட்கப்படாமல் துணிந்து நீங்கள் செல்லத்தக்க வழி வேறு இல்லை. எனவே மனத்துள்ளே சிவனை நினைத்து, அவன் அருளுணர்வோடு பொருந்தி, அவன் திருவடியை சரண்டைந்து நற்கதியடையுங்கள்.

மனிதர்களில் ஏற்றத்தாழ்வு இல்லை. எல்லோரும் ஒரே குலம், கடவுள் ஒருவனே என்கிற புரட்சிகரமான சிந்தனையை இப்பாடலில் சொல்கிறார் திருமூலர்.

நம் செயல்களை வைத்தே நாம் அந்தணர் ஆகிறோமே தவிர, நம் பிறப்பை வைத்தல்ல. யார் யார் அறம் செய்கிறார்களோ அவர்கள் அனைவரும் அந்தணர்களே.

பெரிய புராணத்தில் அறுபத்து மூன்று அடியவர்களும் தங்கள் தொண்டினாலேயே நாயன்மார்களாகப் போற்றப் படுகிறார்கள். அனைவரும் சமமே.

அந்தணராகிய ஞானசம்பந்தர், திருநீலகண்ட யாழ்ப்பாணரை "ஐயர்' என்றே அழைக்கிறார். வேடர் குலத்தில் பிறந்த கண்ணப்பரையும் "ஐயர்' என்றே குறிப்பிடுகிறார் சேக்கிழார் பெருமான். 

திருநாளைப்போவார் நாயனார் புராணத்திலும் "ஐயர்' என்றே அவரை அழைக்கிறார் சேக்கிழார். மாணிக்கவாசகரும் "அந்தணன் ஆவதும் காட்டி வந்தாண்டாய்' என்று பாடி, அந்தணர் என்பது தன்  செயல்களால் ஆவது என உறுதிப்படுத்துகிறார். மனிதர்களுக்குள் ஏற்றத்தாழ்வு இல்லை. அறத்தோடு வாழும் யாரும் அந்தணர்களே.

"இறைவன் ஒருவனே' என்கிறார் திருமூலர். நாம்தான் "அந்தக் கடவுள் பெரியவன், இந்தக் கடவுள் பெரியவன்' என சண்டை போடுகிறோமே தவிர, கடவுள் ஒருவன்தான் என்பதை உறுதியாகச் சொல்கிறார்.

மனதால் கூட யாருக்கும் தீங்கு நினைக்கக் கூடாது என பெரியவர்கள் சொல்வதன் காரணம் இதுவே. அடுத்தவர்களுக்கு நல்லது நினைத்தால், நாம் நன்றாக இருப்போம். நம் உயிருக்கு ஆபத்தில்லை. எமனை நினைத்து பயப்படத் தேவையில்லை என்கிறார் திருமூலர். 

சிவனைத் தவிர நமக்கு வேறு வழியில்லை என்பதை உணர்ந்து, அவன் திருவடியை வணங்கினால் நற்கதி கிடைக்கும் என்கிறார்.

எல்லோரும் ஒரே குலம், இறைவன் ஒருவன் தான். எல்லோருக்கும் நல்லது நினையுங்கள், அதன் மூலம் உயிர் பற்றிய பயமில்லாமல் இருக்கலாம். சிவன் மட்டுமே கதி என உணர்ந்து, அவன் திருவடிகளைச் சரணடைந்தால் நல்ல கதி கிடைக்கும் என்பதே இப்பாடலில் திருமூலர் சொல்லும் கருத்து.

- தொடரும் 

(கட்டுரையாசிரியர்:  இலக்கியச் சொற்பொழிவாளர்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com