ஊமைக்கு குரல் கொடுத்த உத்தமராயப் பெருமாள்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம் பெரிய அய்யம்பாளையத்தில் சுற்றிலும் மலைகள் சூழ்ந்திருக்கக் குன்றும் அதில் ஒரு குகையும் உண்டு. ஊர்ச் சிறுவர்கள் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச்சென்று, உச்சி வெயில்
ஊமைக்கு குரல் கொடுத்த உத்தமராயப் பெருமாள்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம் பெரிய அய்யம்பாளையத்தில் சுற்றிலும் மலைகள் சூழ்ந்திருக்கக் குன்றும் அதில் ஒரு குகையும் உண்டு. ஊர்ச் சிறுவர்கள் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச்சென்று, உச்சி வெயில் வேளையில் குகையில் சென்று இளைப்பாறி விட்டு, பிறகு மாலையில் வீடு திரும்புவர். 

சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு ஓர் ஊமைச் சிறுவன் தை மாதம், காணும் பொங்கலுக்கு மறுநாள் ஆடுகளை ஓட்டிச்சென்று மேயவிட்டு விட்டு, நடந்து சென்று குகையில் படுத்தான். உறக்கம் வரவில்லை. 

தன் வாய்பேச முடியாத நிலையை நினைத்தபடி கண் கலங்கினான். அப்பொழுது தன்னருகில் யாரோ நிற்பதை உணர்ந்து  திடுக்கிட்டு எழுந்தான். அப்பகுதியில் அவன் அதுவரை பார்த்தறியாத  ஒரு பெரியவரைக் கண்டான். 

அவர் அவனருகில் வந்து அவன் தலைமீது கை வைத்தார். உடனே அவனுக்குள் ஒரு சக்தி ஊற்றெடுத்தது.  

""ஊருக்குள் போய் நான் வந்திருக்கிறேன் எனச் சொல்!'' என்றார் பெரியவர். மின்னல் வேகத்தில் ஊமைச் சிறுவன் ஓடிச்சென்று, ""நம்ம ஊரு மலைக்கு ஒரு பெரியவர் வந்திருக்காரு!'' என்றான். அதுவரை பேசாத சிறுவன் பேசியதைக் கேட்டவர்களுக்கு ஒரே வியப்பு. அவன் எப்படி பேசுகிறான் என்று வியந்த மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து குகைக்கு வந்தனர்.  

"வந்திருப்பது பெருமாள்தான்' என உணர்ந்தனர். சங்கு, சக்கரத்துடன் சிறுவனின் சிலை உருவில் அங்கு காட்சி தந்தார் பெருமாள். ஒரு வயதானவர் வந்து, குழந்தைகள் நலனுக்காக இங்கு பெருமாள் வந்திருப்பதாகத் தெரிவித்தார்.  

ஊமைச் சிறுவனுக்கு பேச்சைக்  கொடுத்ததால்  "ஊமைக்கு குரல் கொடுத்த உத்தமராயப் பெருமாள்' என்னும் பெயரிலேயே அன்று முதல் வணங்கத் தொடங்கினர்.

பெரிய அய்யம்பாளையத்தில் சுமார் 300 படிகளுடன் கூடிய குன்றின் மீது அமைந்த கோயில் இது. சுவாமி தனியே வந்து தங்கினார் என்பதால் தாயாருக்கு சந்நிதி கிடையாது. எதிரே கருடாழ்வார் தவிர மற்ற பரிவார மூர்த்திகள் இல்லை.  துவார பாலகர்கள் மற்றும் மூலவர்  சந்நிதிக்கு இருபுறமும் உள்ள பாறையில் புடைப்புச் சிற்பமாக நாகர்கள் உள்ளனர் . நாகதோஷம் உள்ளவர்கள், தோஷ நிவர்த்திக்காக மஞ்சள் காப்பிட்டு வணங்குகின்றனர். 

சந்நிதிக்கு வலப்புறம் சிறுவனுக்கு காட்சி தந்த குகையின் இருபுறமும்  கருடாழ்வார் மற்றும் ஆஞ்சநேயர் உள்ளனர்.  உத்தமராயப்பெருமாள் சிறுவன் போலவே பால்ய மூர்த்தியாக நின்ற கோலத்தில் அபய, வரத, சங்கு சக்கரத்துடன் 4 கரங்களுடன் அருளுகிறார்.

படைவீட்டை தலைநகராகக் கொண்டு ஆட்சி  செய்த சம்புவராயமன்னர்களின் (கி.பி. 1236-1379) காலத்தில்  விஜயநகர மன்னன் புக்கனின் மகனான குமாரகம்பணன்காலத்தில் இக்கோயில் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

தமிழ்க் கல்வெட்டுகளில் "உத்தமகிரி பெருமாள் திருவேங்கடமுடையார்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

குழந்தைகள் பிறந்ததில் இருந்தே திக்குவாயுடனோ, உச்சரிப்பு சரியில்லாமலோ, பேசாமலோ இருந்தால் அக்குழந்தைகளின் பேச்சுத்திறனை வளர்க்க உத்தமராயருக்கு தேனபிஷேகம் செய்து,  தேனை சுவாமி முன்பாக குழந்தைகளின் நாக்கில் துளசியால் தொட்டு வைக்கிறார்கள். பேச்சாளர்கள், பாடகர்கள் குரல் வளத்துடன் இருக்க வேண்டி இங்கு வந்து வழிபடுகிறார்கள். பிரார்த்தனை நிறைவேறியதும் சுவாமிக்கு அபிஷேகம் செய்தும், துலாபாரம் செலுத்தியும் வருகின்றனர். 

சனிக்கிழமைதோறும் சுவாமிக்குத் திருமஞ்சனம்  நடைபெறுகிறது. புரட்டாசி மாத அனைத்து சனிக்கிழமைகளும் முக்கியமானவையாகும். முதல் சனிக்கிழமை கருட சேவை நடைபெறும். நவராத்திரி விழாவும், விஜயதசமி அம்பு போடுதலும்,  விஷ்ணு கார்த்திகை சிறப்பு பூஜையும், புறப்பாடும் விமரிசையாக நடைபெறுகிறது.  உத்தமராயப்பெருமாள் சிறுவனுக்கு  காட்சி தந்த நாளான ஒவ்வொரு தை மாதமும் 4-ஆம் தேதி மகரத் திருவிழா சிறப்பாக 
நடைபெறுகிறது. 

உத்தமராயப் பெருமாள் திருக்கோயிலுக்கு வேலூரிலிருந்து திருவண்ணாமலை செல்லும் வழியில் கண்ணமங்கலம் அல்லது வண்ணான்குளம் நிறுத்தத்தில் இறங்கி இத்திருத்தலம் செல்லலாம்.  சனிக்கிழமைகளில்  காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையும் மற்ற நாள்களில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரையும் திருக்கோயில் தரிசனத்திற்காகத் திறந்திருக்கும்.

மேலும் விவரங்களுக்கு: 7339104580 / 9488648346.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com