விட்டுக் கொடுப்பவர் கெட்டுப் போவதில்லை! 

ஒரு சமயம் நாங்கள் நபி ஸல் அவர்களோடு அமர்ந்திருந்தோம். அப்பொழுது அண்ணல் நபி (ஸல்) அவர்கள் "இப்பொழுது சொர்க்கம் செல்லும் ஒருவர் வருவார்' என்று கூறினார்கள்.
விட்டுக் கொடுப்பவர் கெட்டுப் போவதில்லை! 


அனஸ் இப்னு மாலிக் (ரலி) கூறுகிறார்: 
ஒரு சமயம் நாங்கள் நபி ஸல் அவர்களோடு அமர்ந்திருந்தோம். அப்பொழுது அண்ணல் நபி (ஸல்) அவர்கள் "இப்பொழுது சொர்க்கம் செல்லும் ஒருவர் வருவார்' என்று கூறினார்கள்.
அப்பொழுது மதினா வாசியான அன்சாரி தோழர் வந்தார். மறுநாளும் மாநபி (ஸல்) அவர்கள் முதல் நாள் கூறியதைக் கூற மீண்டும் அவரே வந்தார். மூன்றாம் நாளும் அவ்வாறே நடந்தது.
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் விடைபெற்று சென்றதும் அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னுல் ஆஸ் (ரலி) அம்மனிதரைப் பின்தொடர்ந்தார். அவரிடம் மூன்று நாள்கள் அவரின் வீட்டில் தங்குவதற்கு அனுமதி கேட்டார். 
அவரும் அனுமதித்தார். 
மூன்று நாள்கள் கழிந்ததும் வீட்டுக்காரரிடம் விழுமிய நபி (ஸல்) அவர்கள் விளம்பியதைக் கூறி "உங்களிடம் அதிக வணக்க வழிபாடுகளை எதிர்பார்த்தேன். அவ்வாறு நீங்கள் அதிக வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதைக் காணவில்லை' என்று கூறினார் அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி).
"நீங்கள் என்ன கண்டீர்களோ அதுவே நான் நாளும் ஆற்றும் கடமை. விட்டுக் கொடுப்பவன் கெட்டுப் போவதில்லை. அதனால் நான் யார் மீதும் காழ்ப்புணர்ச்சியோ, குரோதமோ கொண்டதில்லை. யார் மீதும் பகை கொண்டதில்லை. யாரையும் இழித்தும் பழித்தும் பேசுவதில்லை. மனக் கசப்பும் கொள்ளமாட்டேன். மாறானவர்களை மன்னித்து விடுவேன். மிக தயாளத் தன்மையோடு நடந்து கொள்வேன். இரவில் நிம்மதியான உள்ளத்தோடு உறங்குவேன்.
நான் யாரையும் பெருந்தன்மையோடு மன்னித்துவிடும் பொழுதும், யார் மீதும் காழ்ப்புணர்ச்சி கொள்ளாத பொழுதும், என்னையே நான் பகை உணர்வு பற்றிய கவலையின்றி நிம்மதியாக வைத்துக் கொள்கிறேன்' என்று சட்ட மேதை ஷாபி இமாம் கூறினார்கள். 
விட்டுக்கொடுத்து பெருந்தன்மையோடு மன்னித்து விடுவது மன அமைதியைத் தரும். அது உயரிய பண்பான பழக்கம். நற்குணங்களின் அடிப்படை. இறைத்தூதர்கள் வலியுறுத்திய பண்பு. உயர்நிலைக்கு வழிவகுக்கும். கண்ணியமான மரியாதை கிடைக்கும்.
 இறைவனுக்குக் கட்டுப்பட்டு படைத்தவனின் நெருக்கத்தைப் பெற யாவரிடமும் அன்பும் நேசமும் கொள்ள வேண்டும். தன்னைச் சூழ உள்ளவர்களும் மகிழ்ச்சியாய் இருக்க விரும்ப வேண்டும். விரும்பியது நடக்காவிட்டால் விட்டுக்கொடுத்து பெருந்தன்மையோடு மன்னித்து விடவேண்டும். மற்றவருக்கும் அந்த நல்வழியை அறிவுறுத்த வேண்டும்.
 7 -199 -ஆவது வசனம்: "அவர்களை நீங்கள் மன்னித்து நன்மை புரிய ஏவுங்கள். அறியாதவர்களைப் புறக்கணித்து விடுங்கள்' என்று அறிவுறுத்துகிறது. "மன்னிப்பதை முதலில் கூறி, தொடர்ந்து நல்லதைச் செய்ய நவின்று, அறிவீனர்களைப் புறக்கணிக்கச் சொல்வதன் பொருள் உள்ளதை உணர மறுத்து, தொடர்ந்து தொல்லை கொடுக்கும் அறிவீனர்களை விட்டுப் பிடிக்க, விட்டுக் கொடுக்கச் சொல்கிறது இவ்வசனம். நற்குணங்களின் சிகரம் இவ்வசனம்' என்று கூறுகிறார் ஜாஃபர் (ரலி).
அண்ணல் நபி (ஸல்) அவர்களின் குணம் மனிதர்களிலேயே மிக அழகிய நற்குணம். தீங்கிழைத்தவர்களுக்கும் தீங்கு இழைக்க மாட்டார்கள். பெருந்தன்மையோடு மன்னித்து மிக தயாளத் தன்மையோடு நடப்பார்கள் என்று நவில்கிறார்கள் அன்னை ஆயிஷா (ரலி) நூல்- திர்மிதீ 2016. 
உத்தம நபி (ஸல்) அவர்கள் தோழர் உக்பா இப்னு ஆமிர் (ரலி) என்னும் தோழருக்கு உங்களைத் துண்டித்துக் கொள்பவரோடு நீங்கள் சேர்ந்தே இருங்கள். உங்களைத் தவிர்ப்பவருக்கு நீங்கள் கொடுத்து உதவுங்கள். உங்களுக்கு அநியாயம் செய்தவரை பெருந்தன்மையோடு மன்னித்து விடுங்கள். நூல் - அஹ்மது 17452.
பிறருக்குச் செய்த நன்மையை நீங்கள் வெளிப்படுத்தினாலும் அல்லது அதனை மறைத்தாலும் அல்லது உங்களுக்கு இழைக்கப்பட்ட தீங்கை நீங்கள் மன்னித்து விட்டாலும் அது உங்களுக்கு நன்று. 
நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவனாகவும், ஆற்றல் உடையவனாகவும் இருக்கிறான் என்று இயம்புகிறது 4 - 149 -ஆவது வசனம்.
பெருந்தன்மையோடு மன்னித்து, விட்டுக் கொடுத்து, மனதில் எவ்வித காழ்ப்புணர்ச்சியும் இல்லாதவர்கள் வென்றவர்கள். இவர்கள் வாழ்வில் வளம் கொழிக்கும்.
பெருந்தன்மையோடு மன்னிப்பது என்பது நமது அன்றாட வாழ்வில் பல்வேறு வடிவங்களைப் பெற்றிருக்கிறது. எனவே, நமது அன்றாட நடவடிக்கைகள், பரிவர்த்தனைகள், அலுவல் பணிகள் உள்ளிட்ட எல்லாவற்றிலும் நியாயமான வழிகளில் நாம் விட்டுக் கொடுத்து பெருந்தன்மையோடு மன்னிக்கும் நற்பண்பை வளர்த்துக் கொள்ள வேண்டும். 
நமது சமூகத்திலும், குடும்ப உறவுகளிலும், சகோதர சமுதாயத்தினரிடமும் இத்தகைய நற்பண்பைக் கடைப்பிடிக்க வேண்டும். சமூகத்தில், ஊரில் ஒற்றுமை ஓங்கும். அவ்வொற்றுமை நாட்டு ஒருமைப்பாட்டை வலுவாக்கும்; நாடு முன்னேறும்.

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com