Enable Javscript for better performance
பக்திக்கு தலை சாய்த்த பரமன்!- Dinamani

சுடச்சுட

    

    பக்திக்கு தலை சாய்த்த பரமன்!

    By DIN  |   Published on : 02nd April 2021 04:56 PM  |   அ+அ அ-   |    |  

    KUNGULI055052

     

    அழகான, அடர்த்தியான பனை மரங்களால் சூழப்பட்ட இடம் (திரு+பனை+தாள்) என்று தமிழிலும், தாலவனம் (தாலம் = பனை, வனம் = காடு) என்று சமஸ்கிருதத்திலும், திருத்தாடகேஸ்வரம், பனசை என்றும் அழைக்கப்படுகின்ற "திருப்பனந்தாள்' என்ற பாடல் பெற்ற திருத்தலத்தை நாம் இப்போது பார்க்கவிருக்கிறோம்.

    ராஜராஜ சோழச் சக்கரவர்த்தி, அவரது திருக்குமாரன் ராஜேந்திர சோழருக்குப் பின் அவர்கள் வழிவந்த இரண்டாம் ராஜராஜன் தாராசுரம், திருபுவனம் ஆகிய கலைக்கோயில்களைக் கட்டியவர். அவரே இத்திருக்கோயிலையும் கட்டியதாகக் கல்வெட்டுகள் கூறுகின்றன. ஏழு அடுக்கு நிலை கொண்ட ராஜகோபுரத்துடன் அமைந்துள்ள இக்கோயில், நக்கன் தரணி என்ற சிற்பியால், சோழரின் ஆணைப்படி திருப்பணி செய்யப்பட்டது. 

    இங்குள்ள இறைவன் செஞ்சடையப்பர், அருணஜடேஸ்வரர், தாலவனேஸ்வரர், ஜடாதரர் என்றும், இறைவி பெரியநாயகி, ப்ருஹன்நாயகி, தாலவனேஸ்வரி என்றும் அழைக்கப்படுகின்றனர். சுயம்புவான இறையனார் பிரணவ வடிவில் மூன்று ஸ்தூபிகளுடன், தாமரையின் மேல் அமர்ந்துள்ளார். 

    இக்கோயில் தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமானது. கோயிலின் பின்புறம் காசிவாசி ஸ்ரீலஸ்ரீ திருப்பனந்தாள் ஆதீனத்தின் தலைமை மடமாக பிரமாண்டமாய் அமைந்துள்ளது.  

    எங்குமில்லாத தலவிருட்சமாக இரட்டைப் பனைமரம் இங்குள்ளது. பிரம்ம தீர்த்தம், ஐராவத தீர்த்தம், தாடகை தீர்த்தம், விஷ்ணு தீர்த்தம், சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், ஆதிசேஷ தீர்த்தம், ஹரித்துவஜ தீர்த்தம், நாககன்னிகை தீர்த்தம், தருமசேன தீர்த்தம், கூபதீர்த்தம் உள்ளிட்ட பல தீர்த்தங்கள் ஆலயத்தின் உள்ளேயும், வெளியேயும் அமைந்துள்ளன. 

    காவிரியின் கிளை நதியான மண்ணியாறு இவ்வூர் வரை கிழக்கு நோக்கி வந்து, பின்னர் வடக்கு நோக்கிப் பாய்ந்து செல்வதும் ஒரு சிறப்பம்சமே!

    தாடகை என்ற பெண்ணொருத்தி புத்திர சந்தானம் வேண்டி தவமிருந்தாள். பிரம்மன் அவள்முன் தோன்றி "நீ தாலவனம் சென்று அங்குள்ள சிவனாரை வழிபட்டு வந்தால் நற்பேற்றினை அடைவாய்' என அருளினார். அப்பெண் தாடகையும் வழிபாட்டு விதிமுறைகளின்படி இவ்வாலய சிவனாரை வழிபட்டு வந்தாள். 

    ஒரு நாள் பூஜை முடிந்து சிவனாருக்கு மாலை சாத்த எழுந்தபோது, அவளது ஆடை நெகிழ்ந்ததை உணர்ந்து சட்டென அவள் தன் இரண்டு முழங்கைகளாலும் தாங்கியதால், ஈசனுக்கு மாலை அணிவிக்க முடியாமல் வருந்தி, "இறைவா! என்னை மன்னித்து அருள்வாயா?' என வேண்டினாள். 

    அவளது பக்தியினை கருத்தில் கொண்டு, தன்னுடைய தலையினைச் சாய்த்து அவளது மாலையை ஏற்றருளினார். பின், இடபரூபராய் உமாதேவியுடன் காட்சி தந்தருளினார். இந்த நிகழ்வை உலகிலுள்ளோர் தெரிந்து கொள்ள, தன் சாய்ந்த சிரசோடு இருக்கலானார்.  

    வீரசேனன் என்ற இத்தலத்தின்மீது பற்று கொண்ட சோழ மன்னன், சிவனாரின் திருமுடி சாய்ந்திருப்பதைக் கேள்வியுற்று, அதனை யானை, குதிரைகளைக் கொண்டு இழுத்து, நிமிர்ப்பதற்கு முயற்சித்தான்; முடியவில்லை. 

    திருக்கடவூரில் வசித்து வந்த குங்குலியக்கலய நாயனாருக்கு இச்செய்தி எட்டியது. அவர் நேரில் வந்து, தம் கழுத்தில் அரிகண்டமும், இறையனார் கழுத்தில் மெல்லிய பட்டுநூலையும் கட்டி இழுத்தார். 
    நாயனாரின் கழுத்தில் இருந்த அரிகண்டம் அவரது கழுத்தை அறுக்க ஆரம்பித்து, அவரது சிரசு கீழே விழும் நிலைக்கு வந்து உதிரம் கொட்டியது. உடனே மகாதேவர் காட்சி கொடுத்து நாயனாரின் அறுபட்ட சிரசை தன் கையால் பொருத்தினார்; சிவனாரின் தலையும் நிமிர்ந்தது என தலவரலாறு கூறுகிறது. 

    குங்குலியக்கலய நாயனாருக்கு இக்கோயிலின் இரண்டாம் பிராகாரத்தில் தனிச்சந்நிதி உள்ளது. திருஞானசம்பந்தப் பெருமான் 11 பதிகங்களால் இந்த இறையனாரைப் பாடியுள்ளார். 
    ஒவ்வொரு சித்திரை மாதத்திலும் பிரம்மோற்சவம் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. "பெண் பார்த்தல்' என்ற சடங்கு தனியே நடைபெறாமல், இத்திருவிழாவிலேயே இப்பகுதி மக்களின் இல்ல திருமணங்கள் பல நிச்சயிக்கப்படுகின்றன. 

    இவ்வாண்டுத் திருவிழா 17.4.2021-இல் கொடியேற்றத்துடன் தொடங்கி, 26.4.2021 }இல் சித்ரா பெüர்ணமியன்று முடிவடைகிறது. விசித்திரங்கள் பல நிறைந்துள்ள இவ்வூர் கும்பகோணம் } அணைக்கரை மார்க்கத்தில் சுமார் 20 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. 

    மேலும் தகவல்களுக்கு: குமார் குருக்கள் - 9677476147.

    -எஸ். எஸ். சீதாராமன்

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    flipboard facebook twitter whatsapp