முயன்று முன்னேற இலக்கை நிர்ணயிப்போம்!

உங்களுக்காகவே உங்களிலிருந்தே மனைவியரை உண்டாக்கினான். உங்களுக்காக, உங்கள் மனைவியரிலிருந்து..
முயன்று முன்னேற இலக்கை நிர்ணயிப்போம்!

உங்களுக்காகவே உங்களிலிருந்தே மனைவியரை உண்டாக்கினான். உங்களுக்காக, உங்கள் மனைவியரிலிருந்து மக்களையும், பேரன், பேத்திகளையும் உண்டாக்கினான் என்று உத்தம குர் ஆனின் சத்திய வசனம் 16 - 72 கூறுகிறது. 

இந்த வசனத்தில் வரும் "ஹபததன்' என்னும் அரபிச் சொல் "மக்களின் மக்கள்' என்று பொருள்படும். மக்களின் மக்கள் என்பது வழி வழி வரும் வாரிசுகள் ஆகும். 

குழந்தைச் செல்வமான பிள்ளைகள் இறைவன் நமக்கு தந்த நற்பாக்கியம். நன்கு பேணி கண்ணும் கருத்துமாக அவர்களைக் கவனித்து வளர்ப்பது நம் கடமை. அவர்களைப் பாதுகாக்கும் பொறுப்பு நமக்கு உள்ளது. 

ஒவ்வொரு கண்காணிப்பாளரையும் அவர் கண்காணித்தவர்களைப் பற்றி மறுமை நாளில் நிச்சயமாக அல்லாஹ் கேள்வி கேட்பான்.  அவர்களைப் "பாதுகாத்தாரா? பாழாக்கினாரா?'  என்று கேட்கப்படும். ஒரு மனிதன் அவனின் குடும்பத்தை எவ்வாறு கண்காணித்தான் என்றும் கேட்கப்படும். நூல் } சஹீஹ் இப்னு ஹிபான். 

 உமர் இப்னு கத்தாப் (ரலி) ஒரு மனிதருக்கு  அறிவுரை  கூறினார்கள். ""நீ உன் பிள்ளைகளைப் பற்றி விசாரிக்கப்படுவாய். பிள்ளைகளை நீ எப்படி ஒழுங்குபடுத்தினாய்? அப்பிள்ளைக்கு என்ன கற்பித்தாய் ? என்று கேட்கப்படும்''. நூல் } ச அபீல் ஈமான் 11 -135.

 பெண், ஆண் குழந்தைகளுக்காக எவ்வளவு நேரம் ஒதுக்கினீர்கள் என்று தாய், தந்தை இருவரிடமும் விசாரிக்கப்படும். அந்த பிள்ளைகளுக்காக தனித்தனியே நேரம் ஒதுக்க வேண்டும்.  அவர்களின் கருத்துக்
களைக் கேட்க வேண்டும். பெற்றோர் அனுபவத்தில் பெற்ற படிப்பினைகளைப் பக்குவமாக மென்மையாக அறிவுறுத்த வேண்டும். 

ஸக்லு பின் ஹமீது (ரலி) பெருமானார் நபி (ஸல் ) அவர்களிடம் தற்காப்பு பெறும் தக்க வழி காட்ட வினவினார்கள். செவியின் தீங்கிலிருந்தும், பார்வையின் பங்கத்திலிருந்தும், இதயத்தின் இழிவுகளிலிருந்தும், நாக்கின் நலிவில் இருந்தும் இறைவனிடம் பாதுகாப்பு தேடுமாறு தெளிவுபடுத்தினார்கள். நலிவகற்றும் நந் நபி (ஸல் ) அவர்கள் நூல் } திர்மிதீ, நஸஈ, அபூதாவூத். இந்த உறுப்புகளை வெறுக்கும் வழிகளில் அலைய, மேய, தேய, தீய, திரிய விடக்கூடாது. 

 தனிமையில் இனிமை காண இணைய தளத்தில் இணையும் இக்காலத்தில் நம் பிள்ளைகளுக்குச் சுய கட்டுப்பாட்டைக் கற்று கொடுத்து பின்பற்ற பக்குவப்படுத்த வேண்டும். சமய கல்வியையும், உலக கல்வியையும் ஒன்றிணைத்து கற்று கொடுத்தால் வெற்றி நிச்சயம். நம் முயற்சி விழலுக்கு இரைத்த நீராகாது. 

அழகிய நற்குணங்கள், பழக்க வழக்கங்கள், பண்பாடுகள், சமூகத் தொடர்புகள் குறித்து சொல்லிக் கொடுக்க வேண்டும். நேரத்தையும் காலத்தையும் நேரிய வழியில் சீரிய முறையில் சிறப்பாக பயன்படுத்தப் பழக்க வேண்டும். இணையத்தில், வலைதளத்தில் வழுக்கி விழுந்து வீணாகாமல் காக்க வேண்டும். அதில் அடிமையாகி அவதிப்படாமல் தற்காத்துக் கொள்ளத் தக்கபடி அறிவுறுத்த வேண்டும். 

பயனுள்ளவற்றைப் படித்து, பன்முக திறமையை வளர்த்து, சுய ஆளுமையைப் பெருக்கி, உரிய இலக்கை நிர்ணயித்து, நிதானமாக நகர்ந்து முயன்று முன்னேற வழிகாட்டி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

-மு. அ. அபுல் அமீன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com