ராமன் எத்தனை ராமனடி!

ராமருக்கு எத்தனை கோயில்கள் தமிழ் நாட்டில் இருந்தாலும் தஞ்சாவூருக்கும், மன்னார்குடிக்கும் நடுவில் அமைந்துள்ள வடுவூர் ஸ்ரீகோதண்டராம சுவாமி கோயில் தனிச்சிறப்பு பெற்ற ஒன்றாகும். 
ராமன் எத்தனை ராமனடி!

ராமருக்கு எத்தனை கோயில்கள் தமிழ் நாட்டில் இருந்தாலும் தஞ்சாவூருக்கும், மன்னார்குடிக்கும் நடுவில் அமைந்துள்ள வடுவூர் ஸ்ரீகோதண்டராம சுவாமி கோயில் தனிச்சிறப்பு பெற்ற ஒன்றாகும். அழியாத வடு கொண்ட வடுவூர் ராமர் கோயிலின் சிறப்புகளை இப்பொழுது பார்க்கலாம்: 

ராமருக்கு வனவாசம் முடிந்து அயோத்திக்கு திரும்பிச் செல்ல வேண்டிய கால கட்டம் வந்தது. அப்பொழுது அவர் தனது அன்புக்கு பாத்திரமான மனிதர்களிடமும், முனிவர்களிடமும் விடைபெற்றுச் செல்ல அவர்களை நாடினார். திருக்கண்ணபுரம் என்ற திவ்ய தேசத்தில் இருந்த முனிவர்களுக்கு ராமரை விட்டுப் பிரிய மனம் இல்லை. "தாங்கள் நிரந்தரமாக இங்கேயே எழுந்தருள வேண்டும்!' என்று கோரிக்கை விடுத்தனர். 

அவர்களுடைய கோரிக்கையை ஏற்ற ராமபிரான், தனது கரங்களாலேயே தனது வடிவத்தை விக்கிரகமாக வடித்தார்; அத்துடன் சீதாதேவி லட்சுமணர், ஆஞ்சநேயர் ஆகிய மூவருடன் தானும் சேர்ந்திருக்கும் விக்கிரகங்களை வடிவமைத்தார். 

பின்னர், முனிவர்களை நோக்கி "இந்த திவ்ய மங்கள விக்கிரகங்களை பிரதிஷ்டை செய்து, இதனை நானாக நினைத்து வழிபட்டு வாருங்கள்' என்று கூறி விடைபெற்றார். 

அப்படிப்பட்ட திவ்ய மங்கள விக்கிரகங்கள் முனிவர்களின் காலத்திற்குப் பிறகு திருக்கண்ணபுரத்து மக்களால் வெகுகாலம் ஆராதனை செய்யப்பட்டு வந்தது. அதற்குப் பிறகு அந்த விக்கிரகங்கள் திருக்கண்ணபுரத்தில் இருந்து அகற்றப்பட்டு, திருத்துறைப்பூண்டிக்கு அருகில் உள்ள தலைஞாயிறு என்ற ஊரில் ஒரு மரத்தடியில் வைக்கப்பட்டு பூஜிக்கப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. 

அக்காலத்தில் தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னரின் கனவில் ஸ்ரீராமபிரான் தோன்றி, அவருடைய அர்ச்சாவதாரம்   ஞாயிறு கிராமத்தில் மண்ணில் புதையுண்டு இருப்பதாகவும், அந்த விக்கிரகங்களை  வெளியே எடுத்து பிரதிஷ்டை செய்து, கோயில் கட்டி ஆராதனை செய்யும்படியும் கேட்டுக்கொண்டாராம். 

உடனே மன்னரின் உத்தரவின்படி, அந்த திவ்ய மங்கள விக்கிரகங்களைத் தேடிக் கண்டுபிடித்து மண்ணுக்குள் இருந்து வெளியே எடுத்தனர் படைவீரர்கள். விக்கிரகங்களை தஞ்சைக்கு எடுத்துச் செல்லும் வழியில் வடுவூர் என்ற கிராமத்தை அடைந்தனர். அப்பொழுது நடுநிசி ஆகிவிட்டதால், சோர்வடைந்த படைவீரர்கள் அன்று இரவு அங்கு கழித்து இளைப்பாற முடிவு எடுத்தனர். 

மறுநாள் காலையில் பொழுது விடிந்ததுமே வடுவூர் மக்கள் இப்படி ஓர் அழகான தெய்வீகமான ஸ்ரீராமர் விக்கிரகம் வந்திருப்பதைக் கேள்வியுற்று அங்கே ஒன்று கூடினார்கள். 
அனைவரும் விக்கிரங்களைக் கண்டு வழிபட்டு ஆனந்தக் கூத்தாடினர். அவ்வூர் வைதிகர்கள், பட்டாச்சாரியார்கள், ஊர்த் தலைவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, மேற்படி விக்கிரகங்களை வடுவூரிலேயே பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று மன்னரிடம் மன்றாடினர்.

அவர்களின் பக்தியை மெச்சிய மன்னர் வடுவூரிலேயே விக்கிரகங்களை பிரதிஷ்டை செய்வதற்கு சம்மதித்தார். அப்படி வடுவூரில் உருவான கோதண்டராம சுவாமி கோயில் தெய்வீக அழகுடன் இன்றும் மிளிர்வதைக் காணலாம். 

இத்திருக்கோயில் வடுவூர் ஏரிக்கரையில் இருந்து பார்த்தால் கம்பீரமான தோற்றத்தில் தொலைவிலிருந்து கண்டு மகிழும் படியாக அமைந்திருப்பது சிறப்பு. கருவறைக்குள் வாசுதேவன், ஸ்ரீதேவி, பூதேவி, செங்கமலத்தாயாருடன் மூலவராகவும், ஸ்ரீகோபாலன், ருக்மணி, சத்யபாமாவுடன் உற்சவராகவும் சேவை தந்தருள்கிறார். இப்பெருமான் அருகே உற்சவமூர்த்தியாக சேனை முதலியார் எழுந்தருளியுள்ளார். மூலக் கருவறையில் ஸ்ரீராமபிரானால் வடிவமைக்கப்பட்ட ராமர், சீதை, லட்சுமணர், அனுமன் விக்கிரகங்கள் கம்பீரமாக ஜொலிக்கின்றன. 

இத்திருக்கோயிலில் தாயாருடன் எம்பெருமான் இருப்பதால் தாயாருக்கு தனி சந்நிதி கிடையாது. கோயிலின் வெளிப்பிராகாரத்தில் பரமபத வாசல் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் எம்பெருமானை பீடத்திலிருந்து திருமுடி வரை யார் தரிசிக்கிறார்களோ அவர்களுடைய பெரும் பாவம் நீங்கும் என்பது சாஸ்திரம். தினப்படி பூஜைகள் வடகலை ஸ்ரீதேசிக சம்பிரதாயப்படி நடைபெறுகிறது. 

விஸ்வரூபம், திரு அனந்தல், காலசந்தி, உச்சிகாலம், திருமாலிகை (தோசை தளிகை), இராக்காலம், அர்த்தஜாமம் என்று அனுதினமும் நடத்தப்படுகிறது. இவ்வளவு சிறப்புமிக்க வடுவூர் கோதண்டராம சுவாமி ஆலயத்தை நாமும் சேவித்து ஸ்ரீராமபிரானின் அருளைப் பெறுவோம்!  

-ராமசுப்பு

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com