ஆலங்குடி அபய வரதராஜப் பெருமாள்!

ஆலங்குடி அபய வரதராஜப் பெருமாள்!

ஜாதகத்தில் சூரியன், சந்திரன் நீச்சம், களத்திர தோஷம் இவற்றால் திருமணத்தடைகள் உள்ளவர்கள் தரிசித்து பலன் பெறும் தலமாக விளங்குவது, ஆலங்குடி  ஸ்ரீ அபய வரதராஜப்பெருமாள் திருக்கோயிலாகும்.

ஜாதகத்தில் சூரியன், சந்திரன் நீச்சம், களத்திர தோஷம் இவற்றால் திருமணத்தடைகள் உள்ளவர்கள் தரிசித்து பலன் பெறும் தலமாக விளங்குவது, ஆலங்குடி  ஸ்ரீ அபய வரதராஜப்பெருமாள் திருக்கோயிலாகும். இங்குள்ள கல்யாண நரசிம்மர் திருமணத்தடை களையும்  கண்கண்டவராக விளங்குகின்றார்.

தொன்மைச் சிறப்பு: இத்தலம் மிகப்பழமையானது என்பதற்குச் சான்றாக இங்குள்ள சிவாலயத்தில் சுமார் 29 கல்வெட்டுகள் கி.பி.1920 -ஆம் ஆண்டு தொல்லியல் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை கி.பி.1003 - ஆம் ஆண்டு முதல் கி.பி.1264 -ஆம் ஆண்டுகளுக்கு உட்பட்டவையாகும். பல்லவர் காலந்தொட்டு, பாண்டியர் காலம் வரை உள்ள மன்னர்களின் கல்வெட்டுகள் இவையாகும்.
தல புராணம்: சாகா வரமருளும் அமுதத்தை கண்டெடுக்க அசுரர்களும், தேவர்களும்  மந்திர மலையை மத்தாகக் கொண்டு, வாசுகியை கயிறாகக் கொண்டு பாற்கடலைக் கடைந்ததுபோது அதில் அமிர்தமும், ஆலகால விஷமும் வெளிப்பட்டன. அப்போது அங்கே பரமேஸ்வரனும், மகாவிஷ்ணுவும் உடனிருந்தனர். ஆலகால விஷத்தை அருந்தியதால், உலகைக்காத்த சிவபெருமான் ஆபத்சகாயராக போற்றப்படுகின்றார். அதேபோல அவர் அருகிலிருந்த மகாவிஷ்ணுவையும் போற்றும் விதமாக, சிவாலயத்தின் அருகில் அபயவரதராஜப் பெருமாளுக்கு தனிக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது. ஆலமாகிய நஞ்சை அருந்திய தலமானாதால் இத்தலம் ஆலங்குடி ஆனது. ஆலங்குடியில் சிவனும், விஷ்ணுவும் அபயம் தருவதால் அதே பெயர்களில் அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

பிரயோகச் சக்கரப் பெருமாள்: கருவறையில் ஏழு அடி உயரத்தில் அபய வரதராஜப்பெருமாள் பிரயோகச்சக்கரம் தாங்கிய எழிலான கோலத்தில் காட்சி தருவது கண்கொள்ளாக் காட்சியாகும். எம்பெருமாளின் இருபுறமும் ஸ்ரீதேவியும் பூதேவியும் நின்ற கோலத்தில் காட்சி தருகின்றனர்.

பெருந்தேவித் தாயாருக்கும், வரதராஜப் பெருமாளுக்கும் யுகம் ஒன்றில் திருமணம் நடந்தது. அதில் கலந்து கொண்டு ஆசி பெற சூரியனும், சந்திரனும் பேராவல் கொண்டனர். ஆனால், உலகிற்கு ஒளிவீசும் இருவரும் வந்துவிட்டால், உலகம் இருளில், மூழ்கிவிடுமே என்பதால், செய்வதறியாது தயங்கினர். இதைக் குறிப்பால் உணர்ந்த எம்பெருமாள் தமது தேகத்திலிருந்து ஒளிவீசச் செய்து சூரியனும், சந்திரனும் தமது திருமண வைபவத்தில், கலந்து கொள்ள வழிசெய்தார் என்பது தலபுராணம். அதனால் மணம் மகிழ்ந்த எம்பெருமானிடம் இருவரும் ஒரு வரம் கேட்டனர். எங்களின் இடர் களைந்து வழிகாட்டியது போல, இத்தலம் வந்து வரம் கேட்கும் பக்தர்களின் விருப்பத்தை நிறைவேற்றியருள வேண்டும் என கேட்டனர். எம்பெருமாளும் அதன்படியே ஆகட்டும் என வரம் தந்தார். இன்றும் தன்னை நாடி அபயம் என வருவோரின் துயர் தீர்ப்பதில் வள்ளலாக விளங்குகின்றார்.

பெருந்தேவித் தாயார்: அபய வரதராஜப் பெருமாள் கருவறையின், வலப்புறம் தனி சந்நிதியாக பெருந்தேவித்தாயார் சந்நிதி அமைந்துள்ளது. எழிலான கோலத்தில் தாயார் காட்சிதர, தல, ஐதீகத்தினை உறுதி செய்யும் விதமாக சூரியனும் சந்திரனும் தாயாரின் பின்னணியில் காட்சி தருகின்றனர்.

பரிகாரத் தலம்: திருமணத்தடைகள், ஜாதகத்தில் உள்ள களத்திர தோஷம், ஜனன காலத்தில் சூரியன், சந்திரன் நீச்சம் பெற்றவர்கள் தங்கள் குறை தீர இங்குள்ள அபய வரதராஜப் பெருமாளும், பெருந்தேவித் தாயாரும் கண்கண்ட தெய்வமாக விளங்குகின்றனர்.

ஆலய அமைப்பு: கிழக்கு நோக்கிய ஆலயம், எளிய நுழைவாயிலைக்கொண்டு நம்மை வரவேற்கின்றது. இராஜகோபுரம் ஏதுமில்லை. உள்ளே நுழைந்ததும் நின்ற கோல கருடன் அபய வரதராஜப் பெருமாளை வணங்கி நிற்கின்றார். அவரின் இடதுபுறம் சக்கரத்தாழ்வார் சன்னதியும் வலதுபுறம் ஆஞ்சநேயர் சந்நிதியும் அமைந்துள்ளன.

கருவறை முன்மண்டபத்தில் வலதுபுறம் கல்யாண நரசிம்மர் காட்சிதருகிறார்.
அவரைக்கடந்ததும் கருவறையில் ஸ்ரீதேவி பூதேவி சமேத அபய வரதராஜப்பெருமாள் பிரயோகச்சக்கரம் தாங்கியபடி            நின்ற கோலத்தில் காட்சி தருகின்றனர்.

வலச்சுற்றில் துளசிமாடம்,பெருந்தேவித் தாயார் சந்நிதி, தலமரமான பலா அமைந்துள்ளது. அதனருகே பவழமல்லி மரம் அமைந்துள்ளது.

தலமரம், தீர்த்தம்: பலா மரம் தலமரமாகவும், ஆயர் தீர்த்தம் தலத்தீர்த்தமாகவும் அமைந்துள்ளன.

அமைவிடம்: திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டத்தில், கும்பகோணம் நீடாமங்கலம் வழித்தடத்தில் நீடாமங்கலத்தில் இருந்து 7 கி.மீ., கும்பகோணத்தில் இருந்து 17கி.மீ.  வலங்கைமானில் இருந்து 5 கி.மீ .தொலைவில் ஆலங்குடி உள்ளது. திருஇரும்பூளை எனும் காவிரித் தென்கரைத்தலமான புகழ்பெற்ற குரு தலமான ஆலங்குடி ஆபத்சகாயர் திருக்கோயிலின்  அருகில் இவ்வாலயம் அமைந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com