Enable Javscript for better performance
தேவியின் திருத்தலங்கள் - மாங்காடு 21- Dinamani

சுடச்சுட

  

  தேவியின் திருத்தலங்கள் - மாங்காடு 21

  Published on : 30th April 2021 06:06 PM  |   அ+அ அ-   |    |  

  kam

   

  சிவாகாரே மஞ்சே பரமசிவ பர்யங்க நிலையம்
  பஜந்தி த்வாம் தன்யா கதிசன சிதானந்த லஹரீம்

                                                    -செளந்தர்ய லஹரி

  நம் வாழ்வின் துக்கங்கள், வேதனைகளுக்குக் காரணம் நம் கர்மவினையே. எத்தனையோ ஜென்மங்களில் செய்த பாவங்கள், புண்ணியங்களே நிழலாக நம்மைத் தொடர்கிறது. இதிலிருந்து நாம் விடுபட ஒரே வழி அம்பிகையைத் தியானம் செய்வதுதான்.

  அவளையே தியானித்து அவள் நினைவிலேயே அமிழ்ந்து விட்டால் நமக்குத் தேவையானதை எல்லாம் அவளே கவனித்துக் கொள்வாள். அன்னையின் தவக் கோலம் அதைத்தான் நமக்கு உணர்த்துகிறது.
  தவத்தின் மூலம் அவள் உணர்த்துவது நிலைத்த சிந்தனை. அலைபாயாத மனம். மனதைக் குவித்து ஒரே சிந்தனையுடன் நாம் இருந்தால் பிரபஞ்சம் அதை நமக்கு நிறைவேற்றிக் கொடுக்கும். ஒவ்வொரு தலங்களிலும் அம்பிகை தன் தவத்தின் மூலம் அதைத்தான் உணர்த்துகிறாள். அப்படிப்பட்ட ஒப்பற்ற தலங்களில் மிக மேன்மையானது சென்னை அருகே உள்ள மாங்காடு திருத்தலம்.

  ஒரு சமயம் கைலாயத்தில் அன்னை பார்வதிதேவி ஈசனின் கண்களை விளையாட்டாகப் பொத்திவிட உலகம் இருண்டு விட்டது.  அதன் இயக்கமே நின்று விட்டது. ஈசனுக்கு ஒரு நிமிஷம் என்பது மனிதர்களுக்கு ஒரு யுகம் அல்லவா.? ஈசனின் கண்களே சூரிய சந்திரர்கள்.

  தேவியின் செயலால் கோபமுற்ற ஈசன் அம்பிகையை பூலோகத்தில் பிறக்கும்படி சபித்து விடுகிறார். தன் தவறை உணர்ந்து அன்னை இப்பகுதியைத் தேர்ந்தெடுத்து ஐந்துவித அக்னியை வளர்த்து அதன் நடுவில் ஒற்றைக் காலில் கட்டைவிரலை ஊன்றி நின்று கடுந்தவம் இருந்தாள். உலக மக்கள் மேன்மையுற முப்பத்தி இரண்டு அறங்களையும் பூவுலகில் வளர்க்க அன்னையே உதாரணமாகத் தவம் இருக்கிறாள்.
  நெருப்பின் நடுவே, இடதுகாலின் நுனி நடு அக்னியில் பட, வலதுகாலை இடது தொடைக்கு சற்றுமேலேயும், இடது கரத்தை நாபிக் கமலத்திற்கு சற்று மேலேயும், வலது கரத்தில் ஜப மாலையும், தனது திருக்கண்களை மூடியபடி உக்கிர தவம் செய்கிறாள் அம்பிகை.

  அதன் பின்னர் ஈசனின் அருள் வாக்குப் படி காஞ்சி சென்று தவம் இருந்து பங்குனி உத்திர நன்னாளில் இறைவனை மணந்து கொண்டாள். முதலில் அம்பிகை தவம் இருந்த இடம் என்பதால் மாங்காடு }ஆதி காமாட்சி தலம்} என்று அழைக்கப்படுகிறது.

  இங்கிருந்து காஞ்சி செல்லும்போது தான் நின்று தவம் செய்த நெருப்பை அணைக்காமல் சென்றதால் சுற்றிலும் அதன் வெம்மை பரவியது. சுற்றிலும் வெப்பம் தகிக்க பசுமை அழிந்து மக்களை உக்கிரம் தகித்தது. தேசாந்திரம் செல்லும்போது இங்கு வந்த ஸ்ரீசங்கரரிடம் மக்கள் இப்பகுதியின் வெம்மையைப் பற்றி முறையிட  ஆதிசங்கரர் அஷ்டகந்தம் எனும் மூலிகைகளால் ஆன ஸ்ரீசக்ரத்தை பிரதிஷ்டை செய்தார்.

  எனவே இங்கு ஸ்ரீசக்ரம்தான் பிரதானம். பஞ்சலோக காமாட்சிக்கு அபிஷேகமும், ஸ்ரீசக்ரத்திற்கு குங்கும அர்ச்சனையும் செய்யப்படுகிறது. மாமரங்கள் நிறைந்த பகுதியாக இருந்ததால் இத்தலம் மாங்காடு என்று அழைக்கப்படுகிறது. எனவே தலவிருட்சமாக மாமரமே விளங்குகிறது.

  தபஸ் காமாட்சி மோன நிலையில் இருப்பதால் ஆதிகாமாட்சி அன்னையை காஞ்சி பெரியவர் பிரதிஷ்டை செய்தார். அம்பிகை தவம் செய்தபோது நவகன்னியர்கள் காவல் புரிந்ததால் அவர்களுக்கும் சந்நிதி உள்ளது. இங்கு அம்பிகை ஸ்ரீசக்ரத்தில் இருக்கிறாள் என்பது ஐதீகம். மூலிகைகளால் ஆனது என்பதால் அபிஷேகம் கிடையாது. சந்தானம், புனுகு சாற்றி குங்கும அர்ச்சனை மட்டுமே செய்யப்படுகிறது. விஜயதசமி அன்று அஷ்டகந்த மூலிகை சாற்றி தங்கக் கவசம் அணிவிக்கிறார்கள். மற்ற நாள்களில் வெள்ளிக் கவசம் மட்டுமே.

  இந்த சக்ரம் அர்த்தமேரு ராஜயந்திரமாகும். ஆமை உருவத்தை அடித்தளமாக்கி, அதன் மேல் மூன்று படிக்கட்டுகள் கட்டி, அதற்கு மேல் பதினாறு இதழ்கள் கொண்ட தாமரை, அதன்மேல் எட்டு இதழ்கள் கொண்ட தாமரை அமைத்து அதன்மேல் ஸ்ரீசக்ர யந்திரம் வரையப்பட்டுள்ளது. இதைப் போன்றது வேறு எதுவும் இல்லை. மிகப்பெரிய யந்திரம். இதற்கு பதினெட்டு முழப் புடவை அணிவிக்கிறார்கள்.

  மூலஸ்தானத்தில் ஸ்ரீசக்ரம், அதற்குப் பின்புறம் பஞ்சலோக ஆதி காமாட்சி, முன் மண்டபத்தில் பஞ்சாக்னியில் தவம் புரியும் காமாட்சியுடன், ஆதி காமாட்சி அருகில் எரியும் சிறிய காமாட்சி விளக்கையும் அம்பிகையாக கருதி வழிபடுகிறார்கள். மூலஸ்தான அம்பிகை கையில் கிளியுடன், தலையில் பிறைச்சந்திரனுடன் அழகாகக் காட்சி அளிக்கிறாள்.

  விடாமுயற்சி என்பதற்கு அம்பிகையே உதாரணம். நினைத்ததை சாதித்தே தீரும் வைராக்கிய்த்துக்கு அன்னையே உதாரணமாக இருக்கிறாள். பஞ்சாக்னியில் நின்று தவம் செய்து ஈசனின் தரிசனம் கிடைக்கவில்லை என்று தளர்ந்து, மனம் சோர்ந்து விடாமல் ஒற்றைக் காலில் ஊசி முனையில் நின்று தவம் செய்து இறைவனை அடைகிறாள். 

  உலக நாயகியான அம்பிகைக்கே இந்த கடுமையான தவம் எனில் மனிதர்களாகிய நாம் எவ்வளவு கடுமையான தவம் செய்ய வேண்டும் என்று நினைக்கலாம். ஆனால் தன் குழந்தைகள் அத்தனை சிரமப்படுவதை அன்னை கண் கொண்டு பார்ப்பாளா? தவத்துக்கு ஈடான ஆழ்ந்த, நம்பிக்கையை தன்மேல் வைத்தவர்களுக்கு தானே தவமாய் இருந்து அருளாசியை அள்ளி வழங்குகிறாள்.      

  தினமும் இத்தலத்தில் மாலை தங்கத் தேரில் பிராஹ்மி தேரோட்டியாகவும், சுற்றிலும் நவகன்னியர்கள் இருக்க, லக்ஷ்மி, பார்வதி, சரஸ்வதி மூவரும் உலா வருகிறார்கள்.

  மாங்காடு அம்பிகையை வழிபட்டால், திருமணம் நடக்கும். குழந்தைப் பேறுக்காக தொட்டில் கட்டி வழிபடுதல், உத்தியோக உயர்வு, மனக்குறைகள் என்று சகலமும் தீர்க்கும் தயாபரி அவள். குறிப்பிட்ட கிழமைகளில் ஆறுவாரங்கள் எலுமிச்சம் கனிகளுடன் அன்னையைத் தொடர்ந்து வழிபட்டால் நினைத்ததை நடத்திக் கொடுப்பாள். நினைத்தது நடந்தபின் பக்தர்கள் புடவை சாற்றி வழிபடுகிறார்கள்.
  பசுஞ்சோலைகள் நிறைந்து அழகாய்க் காட்சி அளித்த கோயில் இன்று கால மாற்றத்தில் பல மாறுதல்களைக் கண்டிருந்தாலும், அம்பிகையின் சக்தியும், அருளும் மாறவில்லை என்பதே நிஜம். 

  அன்னையே நீயே உலகத்தின் அடி நாதமாக இருக்கிறாய். உன் சுவாசக் காற்றே காற்றில் கலந்து எங்களுக்கு புத்துணர்ச்சி தருகிறது என்கிறார் ஸ்ரீ சங்கரர்.
  அம்மா எனும்போதே நெஞ்சில் ஆனந்தம், உற்சாகம், வைராக்கியம், அம்பிகை இருக்கிறாள் என்ற தைரியம் அனைத்தையும் தருபவள் அன்னை காமாட்சி.

  "அக்னியில் நின்றவளே அன்னை காமாட்சி
  அருள்மழை பொழிபவளே ஆதிசக்தியே
  மாட்சிமை நிறைந்தவளே மகாசக்தியே
  ஸ்ரீசக்ர நாயகியே ஸ்ரீபுரத்தாளே சுந்தரியே'
  என்று அம்பிகையைப் போற்றிப் புகழ்கிறார்கள்.

  நம்மைச் சுற்றி காற்றாக, நம் சுவாசமாக, இருக்கிறாள் அம்பிகை. அவளின் தரிசனம் காண்பது ஒன்றே வாழ்வின் ஆனந்தம் என்று நினைவோடு, நம்பிக்கையோடு நடைபோட வேண்டும். அம்பிகையின் நினைவோடு வாழ்வதே மிகச் சிறந்த தவம்.

  (தொடரும்) 
   

  உங்கள் கருத்துகள்

  Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

  The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

  kattana sevai
  ->
  flipboard facebook twitter whatsapp