ஆதவனின் அதீத ஆதிக்கம்!

இருபத்தேழு நட்சத்திரங்கள் வரிசையில் அணிவகுக்காத ஒரு நட்சத்திரம் இருக்கிறது.
ஆதவனின் அதீத ஆதிக்கம்!

இருபத்தேழு நட்சத்திரங்கள் வரிசையில் அணிவகுக்காத ஒரு நட்சத்திரம் இருக்கிறது. அது என்ன? என்று யாராவது உங்களிடம் புதிர் போட்டால் அதற்கு உண்டான பதில், "அக்னி நட்சத்திரம்' என்பதேயாகும். 

பொதுவாக பருவ காலங்கள் வசந்தகாலம், கோடைக்காலம், மழைக்காலம், குளிர்காலம் என நான்கு வகைப்படும். இதில் கோடை காலத்தில் குறிப்பிட்ட சில தினங்களில் சூரியனின் வெப்பம் அதிகம் சுட்டெரிக்கும். வேணிற்காலத்து கடுங்கோடை எனப்படும் அக்கால கட்டத்தில் சூரிய கிரகணங்கள் பூமியில் செங்குத்தாக விழுகிறது.

சித்திரை மாதத்தில் மேஷ ராசியில் பிரவேசித்து பரணி (2, 3 பாதங்கள்), கார்த்திகை, ரோகிணி (1, 2 பாதங்கள்) நட்சத்திரங்களில் சூரியன் சஞ்சரிக்கும் காலங்கள் அக்னி நட்சத்திர நாட்களாக சொல்லப்படுகிறது. இது சுமார் 25 முதல் 26 நாட்கள் வரையான காலம். சித்திரை 21}ஆம் நாள் முதல் வைகாசி 14 }ஆம் நாள் வரை வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும். கத்திரி வெயில் என்றும் ஒரு பெயர் உண்டு.

சூரியனைப் பற்றிய மந்திரங்கள் வேதங்களில் பல இடங்களில் கூறப்பட்டுள்ளன. நெருப்பு, மின்னல், சூரியன் என்ற மூவகை அக்னி உருவகங்களில் சூரியனை ரிக்வேதம் புகழ்கிறது. தமிழ்மொழியில் மிகப் பழைமையான நூலான தொல்காப்பியத்தில் உள்ள ஒரு சூத்திரத்தில் சூரிய மண்டலத்திற்கு "வெஞ்சுடர் மண்டலம்' என்று உரை எழுதப்பட்டுள்ளது.

அக்னியை சம்பந்தப்படுத்தி மகாபாரதத்தில் சொல்லப்பட்ட ஒரு புராண வரலாற்றை அறிந்தோமானால் அக்னி நட்சத்திரத்தின் மேன்மை புலப்படும். ஒரு சமயம் சுவேதகி என்ற மன்னன் துர்வாச முனிவர் துணைக்கொண்டு நெடுங்காலம் யாகம் நடத்தினான். சேர்ந்தாற்போல் 12 ஆண்டுகள் தொடர்ந்து நெய் ஆகுதி செய்யப்பட்டதால் அக்னி பகவானுக்கு ஒரு மந்த நிலை ஏற்பட்டது. 

அதற்கு நிவர்த்தி வேண்டி, யமுனை நதிக்கரையில் உள்ள மூலிகைகள் நிறைந்த ஒரு கானகத்தை அடைந்து தன் "தீ' நாக்குகளால் அதனை அழிக்கத் திட்டமிட்டான். அதைத் தடுக்க இந்திரன் மழையைப் பொழிந்தான். அந்த நகரமே தற்போது இந்திரப்ரஸ்தம் என அழைக்கப்படும் தில்லி பகுதியாகும். கிருஷ்ணரும், இந்திரனின் அபரிமித மழைப்பொழிவை தடுக்கும் பொருட்டு அர்ச்சுனன் உதவியைக் கொண்டு, காடு முழுவதும் அம்புகளால் கூடாரம் அமைத்தார்.

அக்னி பகவான் தன் "தீ' நாக்குகளால் முதல் ஏழு நாட்கள் மரங்களின் கீழ்ப்பகுதியையும், அடுத்த ஏழு நாட்கள் மரங்களின் நடுப்பகுதியையும், கடைசி ஏழு நாட்கள் நுனிப்பகுதியையும் தீக்கிரையாக்கி, தன் பசியாறிக்கொண்டு மந்தநிலை நீக்கிக் கொண்டான் என்றும், அதற்கு நன்றிக்கடனாக அர்ச்சுனனுக்கு சக்தி வாய்ந்த காண்டீபவில், அம்புகள், அம்புறாத்தூணி முதலியவற்றை அளித்ததாகவும் வரலாறு.
அக்னி பகவான் காண்டவ வனத்தை விழுங்கிய அந்த 21 நாட்கள் தான் "அக்னி நட்சத்திர நாள்கள்' எனச் சொல்லப்படுகிறது. அந்நாள்களில் வெப்பநிலை முதல் ஏழு நாட்கள் ஏறு முகமாகவும், நடு ஏழு நாட்கள் தாக்கம் அதிகமாகவும், இறுதி ஏழு நாட்கள் குறைவாக இருப்பதையும் உணர்வுப் பூர்வமாக நாம் அறியமுடிகிறது.

இக்காலங்களில் வயல்களில் வெடிப்பு ஏற்பட்டு பூமியில் விழும் இலை, தழைகள் அதனுள் செல்லும். அக்னி நட்சத்திர நிவாரணத்திக்குப்பிறகு வீசும் பருவ காற்றில் பூமி குளிரும் வெடிப்புகள் மூடிக்கொள்ளும். இதனால் ஒரு நல்ல உரம் இயற்கையாகவே கிடைக்கிறது. இதனை "கர்ப்ப ஓட்டம்' என்பர்.

வேறு எங்கும் காணப்படாத வகையில், இந்நாட்களில் பழனி திருத்தலத்தில் அக்னி நட்சத்திரக்கழு திருவிழா என்ற பெயரில் மூலவர் தண்டாயுதபாணிக்கு கடும் கோடை தாக்கத்திலிருந்து குளிர்விக்க, கொடுமுடி ஆற்றிலிருந்து நீர் கொணர்ந்து, சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுவது வழக்கம்.

இவ்வாண்டு அக்னி நட்சத்திரம் ஆரம்பம்: மே 4, நிவர்த்தி: மே 28. இயற்கையுடன் இணைந்து வாழ்வோம்! இறையருள் துணை கொண்டு இன்னல்களை எதிர்கொள்வோம்!

-எஸ்.வெங்கட்ராமன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com