இறைவேண்டலும் இனிய காணிக்கையும்

இறைவனை எப்படி வழிபட வேண்டும் என்பதை இயேசுவே அழகுற எடுத்துக் கூறுகிறார்.
இறைவேண்டலும் இனிய காணிக்கையும்

இறைவனை எப்படி வழிபட வேண்டும் என்பதை இயேசுவே அழகுற எடுத்துக் கூறுகிறார். காலம் வருகிறது! ஏன் வந்தேவிட்டது! அப்போது உண்மையாய் வழிபடுவோர் தந்தையை அவரது இயலபுக்கேற்ப உள்ளத்தில் வழிபடுவர். தம்மை வழிபடுவோர் இத்தகையோராய் இருக்கவே தந்தை விரும்புகிறார். கடவுள் உருவமற்றவர். அவரை வழிபடுவோர் அவரது உண்மை இயல்புக்கேற்ப உள்ளத்தில்தான் வழிபட வேண்டும் என்கிறார் இயேசு (யோவா. 4:23}26).

இது ஒரு சமாரிய மகளுக்கு கர்த்தர் இயேசு சொன்ன வார்த்தைகள்; அடிமைப்பட்ட இஸ்ரவேலர்களிடையே ஆசாரியர்கள் திட்டமிட்டு தம் மக்களை அனுப்பி சமாரியர் என்னும் கலப்பினம் உருவாக்கப்பட்டது. எனவே யூதருக்கும் சாமாரியருக்கும் தீராப் பகையிருந்தது. ஆனாலும் யூதரான கிறிஸ்து இயேசு தனது லட்சியப் பயணத்தின் பாதையை பகைமை கொண்ட சமாரியரின் ஊரான சீக்கார் வழியாகவே அமைத்தார். தனது போதனைகளில் கூட நன்மனத்தானுக்கு உதாரணமாக ஒரு சமாரிய மனிதனையே சுட்டினார்.

இயேசு தன் போதனைகளில் மிகத் தெளிவாக, காணிக்கையை கையேந்தி ஆலயத்திற்கு வருகிற ஒருவன் தன் சகோதரனோடு மனத்தாங்கல் இருப்பதாய் தன் மனத்தால் உணர்ந்தால், தான் கொண்டு வந்த காணிக்கையை அங்கேயே வைத்துவிட்டுப் போய் தன் சகோதரனோடு சமரசம் செய்தபின் தான் கொண்டு வந்த காணிக்கையை கடவுளுக்குத் தரவேண்டும் என்றார்.

அதைப்போலவே ஒரு மனிதன் தருகிற காணிக்கையின் கனம் அவன் கொடுக்கிற பொருண்மையின் தன்மையால் கணிக்கப்படுவதில்லை என்று தெளிவாகக் காட்டினார், தேவ மைந்தன்.
எருசலேம் தேவாலயத்தில் அமர்ந்திருந்த இயேசு காணிக்கைப் பெட்டியில் பொருளிட்டோரை கூர்ந்து நோக்கிய வண்ணம் இருந்தார். பணக்காரர் பலரும் இறைவனின் பாக்கியம் தேடி பலவாறாய் காணிக்கையிட்டனர். ஒரு ஏழைக் கைம்பெண் தன்னிடமிருந்த இரண்டு செப்புக்காசுகளை யாரும் அறியாவண்ணம் அப்பெட்டியிலிட்டார். இதையறிந்த இயேசு இப்பெண்ணே அதிக காணிக்கை தந்தார் என்றார்.

ஆம்! அதற்கும் காரணம் சொன்னார். மற்றவரெல்லாம் ஈட்டியதில் எஞ்சியதில் தேவைக்கு மிஞ்சியதில் ஒரு பகுதி தந்தனர். இந்த ஏழை மாதோ மறுநாள் தன் பிழைப்புக்கு என்று மடியில் இருந்ததை இறைவன் பொருட்டு இழந்தாளே என்று வியந்து பேசினார். அப்பெண்மணியை வெகுவாய் மெச்சினார்.

இறைவேண்டலுக்கும் காணிக்கைப் பெட்டியை கனம் பண்ணுவதற்கும் எந்தத் தொடர்பும் இருப்பதில்லை. இறைவன் யாசிப்பவன் இல்லை. அவன் நம்மை நேசிப்பவன். நம் இம்மை, மறுமை அனைத்தும் அவன் அறிவான்.

- மோசே

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com