சத்தியம் வென்ற சாதனை  

ஆட்சியைப் பிடிக்க, ஆட்சியை விரிவாக்க, அடுத்த நாட்டு செல்வத்தை அபகரிக்க போரிடுவது உலக இயல்பு.
சத்தியம் வென்ற சாதனை  

ஆட்சியைப் பிடிக்க, ஆட்சியை விரிவாக்க, அடுத்த நாட்டு செல்வத்தை அபகரிக்க போரிடுவது உலக இயல்பு. இஸ்லாமியப் போர்கள் அனைத்தும் தற்காப்புப் போர்கள். சத்தியத்திற்கும், அசத்தியத்திற்கும் முதலில் நடந்த போர் அசத்தியம் தோற்று சத்தியம் வென்று சோதனையில் சாதனை படைத்தது பத்ரு போர். 

குறைஷிகள் போரில் தேர்ந்தவர்கள். இஸ்லாமியர்கள் முதல் போரில் பயிற்சி பெறப் போகிறவர்கள். அல்லாஹ்வின் அருளை எதிர்நோக்கி எதிர்த்த தற்காப்புப் போர். போரிட ஆலோசித்த பொழுது மக்கத்தில் இருந்து வந்த முஹாஜிரீன்கள் துரத்தி வரும் குறைஷிகளை துரத்தி விரட்ட துடித்து எழுந்தனர். 

மதீனத்து அன்சாரிகள் அமைதி காத்தனர். அண்ணல் நபி (ஸல்) அவர்களும் பொறுமையாக இருந்தார்கள். ஸ அத் இப்னு மூ ஆது (ரலி) எழுந்து உங்களின் ஏக இறைக் கொள்கையை ஏற்ற நாங்கள் உங்களின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு கடலில் குதிக்கச் சொன்னாலும் குதிப்போம். போருக்குப் புறமுதுகு காட்ட மாட்டோம் என்று மதீனத்து அன்சாரிகளின் பூரண ஒப்புதலை ஓங்கி உரைத்தார். 

அவரைத் தொடர்ந்து மிக்தாத் (ரலி) மூஸô நபிகளைப் பின்பற்றியோர் நபிகளைக் கைவிட்டது போல் நாங்கள் ஒருபோதும் உங்களைக் கைவிட மாட்டோம். போரிட்டு உரமேறிய நாங்கள் உங்கள் வலமும் இடமும், முன்னும் பின்னும் நின்று போரிட்டு மடியத் தயங்கமாட்டோம் என்று வாகை சூட வழி மொழிந்தார். 

மதினாவுக்கு தென்மேற்கில் எழுபது மைலில் சிரியாவுக்கு செல்லும் வழியில், சந்தை கூடும் இடமாக இருந்தது பத்ரு. பத்ரு பள்ளத்தாக்கு ஐந்து மைல் நீளமும், நான்கு மைல் அகலமும் கொண்ட சமவெளி. வடக்கிலும் கிழக்கிலும் செங்குத்தான குன்றுகள். 

தெற்கே கற்பாங்கான தரை. மேற்கே மணற்பாங்கான சிறு குன்றுகள். மலையில் உற்பத்தியாகி பள்ளத்தாக்கில் விழுந்து ஓடும் சிற்றாறு. நீரூற்று கண்கள் அவற்றைத் தோண்டி நீரைப் பயன்படுத்துவது பயணிகளின் பழக்கம். சரியான இடத்தில் இஸ்லாமியர்கள் முகாமிட்டனர். 

இந்த இடம் ஹுபாப் பின் முன்திர் (ரலி) ஆலோசனையின்படி தேர்வு செய்யப்பட்டது. குறைஷி படையில் ஓராயிரம் வீரர்கள், 700 ஒட்டகங்கள், 100 குதிரைகள், 600 கவசங்கள், ஆயுதங்கள், உணவுப்பொருள்கள், படை வீரர்களுக்கு உற்சாகமூட்ட வட்டப் பறையடித்து பாட்டுப் பாடும் பெண்கள். 

இஸ்லாமிய படையில் மக்கத்து முஹாஜிரீன்கள் 86, மதீனத்து அன்சாரிகள் 227, கவசங்கள் எக்கு சட்டைகள் 6, வாள்கள் 8, ஒட்டகங்கள் 70, குதிரைகள் ஐந்து, சில வில் அம்புகள். 

போர் துவங்குவதற்கு முந்திய இரவில் சிரம் பணிந்து கரம் தூக்கிய தூய நபி (ஸல்) அவர்களின் இறைஞ்சல் இறைவனால் ஏற்கப்பட்டது. மழை பொழிந்தது. இஸ்லாமியர்கள் முகாமிட்ட நிறை புதல் மணல் ஈரப்பதமாய் சோர்வின்றி போரிட உதவியது. குறைஷிகள் பகுதி முதலில் ஈரமானது. மழையால் சேறும் சகதியுமானது. சங்கடம் தந்தது, பங்கம் விளைவிக்க வந்த பாவ குறைஷிகளுக்கு. 

இஸ்லாமியர்கள் தூங்கி எழுந்து காலையில் போர்க்களத்தில் சுறுசுறுப்போடு இயங்கினர். குறைஷியர்கள் விழித்திருந்து ஆட்டம், கூத்து, கும்மாளம் போட்டதால் காலையில் விழிபிதுங்கி சோம்பல் வழிந்தோட சோர்ந்திருந்தனர். 

ரமலான் பிறை 17, வைகறையில் துவங்கிய போர் நடுப்பகலில் முடிந்தது. நிராயுதபாணி இஸ்லாமியர்களுக்கு இறை நம்பிக்கையே மறைமுகமாய் அல்லாஹ்வின் அருளால் வெற்றியைப் பெற்றுத் தந்தது. 

ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு, ரமலான் பிறை 17 (கி.பி. 624 - மார்ச் 16) வெள்ளிக்கிழமை பத்ரு போர் நடந்தது. பத்ரு போர் நடந்த 1440 ஆம் ஆண்டு நினைவு நாளில், இஸ்லாத்தை இப்பூமியில் நிலைநிறுத்த வீரப்போர் புரிந்த தியாகிகளை நினைவு கூர்ந்து, தியாகிகள் காட்டிய வழியில் தியாக வாழ்வு வாழ திண்ணமாய் எண்ணுவோம். 

-மு.அ.அபுல் அமீன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com