பொருநை போற்றுதும் - 142

சிவகங்கையில் அக்ன்யூ போரிட்டுக் கொண்டிருந்தபோது, நெல்லைப் பகுதியில் மீதமிருந்த புரட்சியாளர்களை லூஷிங்டன் விரட்டிக் கொண்டிருந்தார்.
பொருநை போற்றுதும் - 142

சிவகங்கையில் அக்ன்யூ போரிட்டுக் கொண்டிருந்தபோது, நெல்லைப் பகுதியில் மீதமிருந்த புரட்சியாளர்களை லூஷிங்டன் விரட்டிக் கொண்டிருந்தார். பாஞ்சாலங்குறிச்சிக்கு நெருக்கமாக இருந்த தளவாய்ப் பிள்ளை, நாங்குநேரிக்குச் சென்று, அங்கிருந்த மறவர்களுடன் இணைந்து எதிர்ப் போராட்டத்தை ஆரம்பித்தார். சிவகங்கையில் பெரிய அளவிலும் நாங்குநேரியில் சிறிய அளவிலும் போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், மதராஸிலும் மைசூரிலும் மாற்றங்கள் நேர்ந்தன. 

1799-ல் திப்பு சுல்தான் இறந்த பின்னர்,  ஸ்ரீரங்கப்பட்டினத்தில் நிகழ்ந்த சோதனைகளில், திப்புவின் கடிதங்கள் சில கைப்பற்றப்பட்டன. திப்புவுக்கும் நவாப்புக்கும் இடையில் கடிதப் போக்குவரத்து இருந்ததும், இருவரும் இணைந்து கம்பெனியைக் கவிழ்க்கத் திட்டமிட்டதும் தெரிய வந்தது. இதுபற்றிய விசாரணையின்போதே நவாப் இறந்து போனார். நவாப்பின் மகன், கம்பெனியின் கட்டளைகளை ஏற்றுக் கொள்ளத் தயாராகவில்லை. அந்தக் குடும்பத்தில் தங்களுக்கு வசமாகக்கூடிய இளைஞர் ஒருவரைக் கம்பெனியார் நவாப் ஆக்கினார்கள். 1801, ஜூலை 31ஆம் நாள், இந்தப் புதிய நவாப்போடு  ஒப்பந்தம் ஒன்றைக் கம்பெனி போட்டது. இதன்படி, கர்நாடகத்தின் அனைத்து எல்லைகள் மற்றும் பகுதிகளின் குடிமை மற்றும் ராணுவ அரசுகளின் நிர்வாகம் முழுமையும் கிழக்கிந்தியக் கம்பெனியின் வசமானது. 

இதே நாளில், புதிய அதிகாரத்தின்படி, திருநெல்வேலி மாவட்டம் உருவாக்கப்பட்டு, முதல் கலெக்டராக லூஷிங்டன் நியமிக்கப்பட்டார்; அதுவரை ராமநாதபுரத்தைத் தலைமையகமாகக் கொண்டிருந்த அவர், திருநெல்வேலிக்கு மாறினார். ஒரு வாரம் சென்றபின்னர், திருநெல்வேலி வட்டாரம் கம்பெனி அதிகாரத்தின்கீழ் வந்துவிட்டது என்று மதராஸுக்குத் தகவல் அனுப்பினார். 
கிழக்கிந்தியக் கம்பெனியின் ராணுவத்துக்கு நியமிக்கப்பட்டு, 1791}இல் மதராஸ் வந்தடைந்த ஜேம்ஸ் வெல்ஷ், 1799}இல் கேப்டனாகப் பதவி உயர்வு பெற்று, தென்மாவட்டங்களில் நிறுத்தப்பட்டிருந்த 3}ஆவது படைப்பிரிவுக்கு அனுப்பப்பட்டார்.

"பாளையக்காரர் போர்' என்று வர்ணிக்கப்பட்ட ஊமைத்துரைப் போரில் பங்கேற்றார். தொடர்ந்து வந்த ஆண்டுகளில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்த கம்பெனிப் படைகளிலும், பல்வேறு போர்களிலும் பங்கேற்ற வெல்ஷ், 1829}இல் இங்கிலாந்துக்குச் சென்றார். அங்கேயே கர்னலாகப் பதவி உயர்த்தப் பெற்றார். இந்தியப் பகுதிகளில் தம்முடைய நாற்பது ஆண்டுகால அனுபவங்களை வைத்து நூல் ஒன்றை எழுதினார். ஏறத்தாழ 90}க்கும் மேற்பட்ட ஓவியங்களோடு, "மிலிட்டரி ரெமினி சென்சஸ் }நியர்லிஃபார்ட்டி இயர்ஸ் ஆக்டிவ் சர்விஸ் இன் தி ஈஸ்ட் இன்டீஸ்' என்னும் பெயரில் இரண்டு தொகுப்புகளில்இந்நூல்வெளிவந்தது. 

1837}இல் மேஜர்ஜெனரல் ஆகி, மீண்டும் இந்தியா வந்த வெல்ஷ், மதராஸ் மாகாணத்தின் வடக்குப் படையின் தலைவரானார். 1846 லெஃப்டினன்ட் ஜெனரல் ஆகி, 1847}இல் இங்கிலாந்து திரும்பினார். 1854}இல் ஜெனரல் பதவிக்கு உயர்த்தப்பட்ட இவர், 1861}இல் காலமானார். இவருடைய மிலிட்டரி ரெமினென்சன்ஸ் பதிவில், ஊமைத்துரையின் கடைசிப் போருக்குப் பின்னர், பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டைக்குள் கம்பெனிப் படை புகுந்தபோது, அங்கு தாங்கள் கண்டவற்றைக் குறித்து விரிவாகத் தெரிவித்துள்ளார்.

அந்தக் கோட்டைக் கொத்தளத்தின் அமைப்பு, அதன் கொத்தளச்சுற்றுச் சுவர், அகன்றுக் கொண்டே போனாலும், மையப்பகுதிக்குச் சாய்ந்த விதம், நாற்பது பேர் அங்கு ஒளிந்திருக்க முடியுமென்றாலும் இருவர் மட்டுமே மையப் பாதையில் செல்லக்கூடிய வடிவமைப்பு, வெளியிலிருந்து வரக்கூடிய தாக்குதல்களிலிருந்து உள்ளிருப்பவர்கள் மறைந்து கொள்ளக்     கூடிய வசதி, வெளியிலிருந்து கோட்டை மீது ஏறுபவர்களை உள்ளிருப்பவர்கள் கூர்வேல்களால் தாக்குவதற்கு ஏதுவானசரிவுகள், பெண்களும் முதியவர்களும் பாதுகாப்பாகத் தங்குவதற்கான பதுங்குகுழிகள்} இப்படி ஒவ்வொரு விவரத்தையும் அறியும்போது, இத்தனை திறமைகளோடும் முன்னெச்சரிக்கைகளோடும் பொருநையாள் எப்படித் தன்னுடைய பிள்ளைகளைப் பேணியிருக்கிறாள் என்னும் வியப்பு ஆட்கொள்கிறது! 

1916}இல் வெளியான பேட் துரையின் கெஸட்டீர் பதிவுகளில், இடிக்கப்பட்ட கோட்டைச் சிதைவுகள் எவ்வாறிருந்தன என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது. 1801 கோட்டை இடிக்கப்பட்டபோது, அந்த இடம் உழப்பட்டது. ஆனாலும், அது முழுமையாகச் செய்யப்படவில்லை. இன்றுவரை (பேட் எழுதுகிற காலம் வரை), ஆங்காங்கே, பல்வேறு அளவுகளிலிருந்த கட்டடங்களின் அஸ்திவாரங்கள் தென்படுகின்றன. இந்த இடிபாடுகளுக்கு இடையில், செறிவான கட்டுமானம் கொண்ட வட்டத் தரை ஒன்று இருக்கிறது. இதுதான் ஜக்க தேவியின் திருக்கோயிலாக இருந்திருக்க வேண்டும் (இந்த தெய்வத்தின் கோயில்கள் எப்போதும் வட்ட வடிவிலேயே இருந்தன).

கட்டபொம்மன் என்னும் பெயர் இங்கு இன்னமும் பிரபலமாகவே உள்ளது; மரியாதையோடு உச்சரிக்கப்படுகிறது. "கலியுகத்தின் பெருங்காப்பியம்' என்றொரு நீள் கவிதை வழங்கப்படுகிறது. 40 காண்டங்களில், 4000 கண்ணிகளில், கட்டபொம்மன் குடும்பத்தின் தொடக்கத்திலிருந்து, ஆங்கிலேயர்களோடு அவர்களுக்கு ஏற்பட்ட தொடர்புவரை விவரிக்கிறது. ஜாக்சன்காலத்திலிருந்து கடைசிப் பாளையக்காரரின் இறுதி வெற்றிவரை (அது தோல்வி என்று கூறப் படவில்லை) இது விவரிக்கிறது. இந்தக் கவிதையின் வரிகள் பலருக்கும் பரவலாகத் தெரியும். 

பூலித்தேவன், சுந்தரலிங்கம், அழகுமுத்துச் சேர்வை, மருதநாயகம், வீரபாண்டிய கட்டபொம்மன், ஊமைத்துரை, சிவத்தையா போன்ற தன்னுடைய புதல்வர்களை இழந்த துயரத்தில், பொருநையாள் சிறிது காலம் ஒடுங்கியிருந்தாள் போலும்! இருப்பினும், விடுதலைப்போருக்குத் தன் புதல்வர்களை அனுப்பிய இவளின் வீரம், 19}ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மீண்டும் வீறிட்டெழுந்தது. ஆன்ம ஞானி வ. வே.சு ஐயர், செக்கிழுத்த செம்மல் வ. உ. சி, தேசிய கவி பாரதியார், வீர நெஞ்சன் வாஞ்சிநாதன் என்று இளைய புதல்வர்கள்பலரையும் அடுத்து அனுப்பினாள்.

இவர்களில் வரகனேரி வேங்கடேச சுப்பிரமணிய ஐயர், பொருநைக் கரையில் பிறந்தவர் இல்லையென்றாலும், தத்துப்புத்திரனாக இவளிடத்தில்கலந்தவர் என்று சொல்லலாம். காவிரிக்கரையின் திருச்சி வரகனேரியில் பிறந்த இவர், வீர சாவர்க்கரோடும் டாக்டர் டி.எஸ்.எஸ். ராஜனோடும் லண்டன் இந்தியா ஹவுஸில் தங்கியிருந்தவர்; லண்டன் ஹவுஸிலிருந்து செயல்பட்ட  "அபிநவபாரத்' சங்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டவர். இவருக்கும் சாவர்க்கருக்கும் இருந்த நட்பு அளப்பரியது. 

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com