156. பொருநை போற்றுதும்: வ. உ. சி. குறிப்பிடும் "திருநெல்வேலித் தீயிட்ட கேஸ்"

அப்போதைய குற்றவியல் மற்றும் காவல் துறை பதிவுகளில், மக்கள் குழுமிய இடங்கள் பற்றியும் துப்பாக்கிச் சூடு நிகழ்ந்த இடங்கள் பற்றியும் சில குழப்பங்கள் காணப்படுகின்றன. 
156. பொருநை போற்றுதும்: வ. உ. சி. குறிப்பிடும் 'திருநெல்வேலித் தீயிட்ட கேஸ்'
156. பொருநை போற்றுதும்: வ. உ. சி. குறிப்பிடும் 'திருநெல்வேலித் தீயிட்ட கேஸ்'


அப்போதைய குற்றவியல் மற்றும் காவல் துறை பதிவுகளில், மக்கள் குழுமிய இடங்கள் பற்றியும் துப்பாக்கிச் சூடு நிகழ்ந்த இடங்கள் பற்றியும் சில குழப்பங்கள் காணப்படுகின்றன. 

அவரவர் பெருமைகளை உயர் அதிகாரிகளுக்குப் பறை சாற்ற முயன்றதுபோல் தெரிகிறது. 

ஆனால், பொருநையாளின் புதல்வர்கள், தேசிய எழுச்சியைத் தொடங்கினர் என்பதுதான் உண்மை வரலாறு. "திருநெல்வேலி-தூத்துக்குடி எழுச்சி' என்றே பதிவு செய்யப்படவேண்டிய இந்த வரலாற்றின் முக்கியமான அத்தியாயம், மார்ச் 13-ஆம் தேதி எழுதப்பட்டது. 
தங்களின் நன்மைக்கு வழிகாட்டிய சிவாவையும், வ. உ. சி-யையும், பத்மநாபரையும், கோரல் ஆலைத் தொழிலாளர்கள் போற்றிய வகையை எடுத்துக்காட்டாகச் சுட்டலாம். 

மார்ச் 13-ஆம் நாள், கோரல் ஆலையில் வேலை நிறுத்தம் நடந்தது.  ஒரு நாள் வேலை நிறுத்தம். எந்தக் கோரிக்கையும் கிடையாது. முன்னர் போராட்டங்களும் வேலை நிறுத்தங்களும் நடந்தபோது, கோரிக்கைகளும், சம்பள உயர்வு, விடுமுறை ஆகியவற்றின் விண்ணப்பங்களும் இருந்தன. 

ஆனால், இம்முறை, தலைவர்களின் கைது மட்டுமே காரணம். "கோரல் ஆலைப் போராட்டம்' குறித்து ஆய்வு செய்த பேராசிரியர் ஆ. சிவசுப்பிரமணியன், "இதுவே இந்தியாவின் முதல் அரசியல் வேலை நிறுத்தம்' என்று குறிப்பிடுகிறார். 

இவை யாவுமே, எழுச்சி மற்றும் எழுச்சியின் அங்கங்களே அன்றி, கலகங்கள் இல்லை. 

அப்போதைய ஆட்சியாளர்கள், இதனைச் சட்டம் ஒழுங்குப் பிரச்னையாகக் கண்டதால், "கலகம்' என்றார்கள் என்பதையும், ஆனால், தேசியத்தின் குரலாக இதனை உணர வேண்டிய நாம், இதனை "எழுச்சி' என்றே பதிவிக்க வேண்டும் என்பதையும் ஆய்வாளர் - வரலாற்றாளர் ஆ.இரா.வேங்கடாசலபதி கூறுவது முற்றிலும் நியாயமானதே ஆகும். 

மக்களின் உணர்வுகளுக்கும் எண்ணங்களுக்கும் வடிகாலாக, அவ்வப்போது "கலகங்கள்' தோன்றுவது என்பது எந்தக் குழுவிலும், சமூகத்திலும், கூட்டத்திலும் ஏற்படுவதுதான் மக்கள் வேகத்தின் பாய்ச்சல்களே, கலகங்கள் என்று கூடச் சொல்லலாம். 

பஞ்ச காலத்தில், உணவுப் பற்றாகுறை ஏற்படும்போது, தானியங்கள் சேமிக்கப்பட்ட இடங்களை முற்றுகையிடுவதும், ஆர்ப்பாட்டம் செய்வதும், பல நாடுகளில் பல இடங்களிலும் நிகழ்ந்துள்ளன. இவற்றை "தானியக் கலகங்கள்' 

அல்லது "களஞ்சியக் கலகங்கள்' (grain riots or granary riots) என்று வரலாற்றாளர்கள் அழைக்கின்றனர்.

இவை தவிர, இனக் கலவரங்கள், சாதிச் சண்டைகள், அடக்குமுறை, அரசியல் சிக்கல்கள் போன்றவற்றின் விளைவாகவும் கலகங்கள் எழுவதுண்டு. பொதுவாக, கலகங்களில் சேதம் உண்டாக்க வேண்டும் என்னும் எண்ணமும் வன்முறையும் தூக்குதலாக இருக்கும். எந்த நேர்மைக்கும் நியாயத்திற்கும் கலகக்காரர்கள் கட்டுப்பட மாட்டார்கள்.

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில், 19-ஆம் நூற்றாண்டில், தென்னிந்தியாவில் ஒருசில கலகங்கள் நடந்துள்ளன. சேலம், நெல்லை, சிவகாசி உள்ளிட்ட ஊர்களில், வெவ்வேறு காலத்தில் நிகழ்ந்த இவையெல்லாம், பல்வேறு உள்ளூர்ப் பிரச்னைகளால் தோன்றியவை. 

தேசியப் போராட்டத்தில் பங்கு கொண்ட பிரமுகர்கள் சிலர், அவ்வப்பகுதியின் பிரச்னையின் அகல-நீளப் பரிமாணங்களைப் பொருத்து, இத்தகைய கலகங்களில் சிக்கியுள்ளனர்; கைது செய்யப்பட்டுள்ளனர். 

எடுத்துக்காட்டாக, 1882-83 வாக்கில் சேலத்தில் நடந்த கலகமொன்றில், பெருந்தகை சேலம் விஜயராகவாச்சாரியார் கைது செய்யப்பட்டதாகத் தெரிகிறது. தேசிய முகங்கள் தென்பட்டன என்பதனாலேயே, இக்கலகங்களையெல்லாம், தேசியப் போராட்ட எழுச்சிகள் என்று கூறிவிடமுடியாது. 

சுதேசியச் சிந்தனைகள் பரவலாகத் தோன்றிய பின்னர், தென்னிந்தியாவில், மதராஸ் மாகாணத்தில், காக்கிநாடாவில் கலகமொன்று நிகழ்ந்தது (காக்கிநாடா, அப்போதைய ஒருங்கிணைந்த மதராஸ் மாகாணத்தின் பகுதி). 

1907-ஆம் ஆண்டு மே மாதம் 31-ஆம் நாள் நடந்த இந்த நிகழ்வில், கட்டடங்களுக்கும் பொருள்களுக்கும் பெரும் சேதம்; கட்டுப்படாத கும்பல் தெருக்களில் திரண்டுத் திரிந்தது. சுதந்திர வேட்கையைக் காட்டிலும், எதிர்ப்பின் வேகமே அதிகம். 

எனவே, இதனை எழுச்சி என்றழைப்பதில் கருத்துமுரண் உண்டு. ஆனால், திருநெல்வேலி நிகழ்வு இப்படிப்பட்டதன்று. திரண்டு, ஊரை வலம் வந்து, "வந்தே மாதரக் கோஷம்' எழுப்பியவர்கள், யாரையும் தாக்கவேண்டும் என்றோ, தனிப் பகைமையைக் காட்ட வேண்டும் என்றோ நினைக்கவில்லை. 

தங்களின் சுதந்திர உரிமை குறித்துக் குரல் எழுப்பினர். கைது செய்யப்பட்ட பெருந்தகையாளர்கள் மூவரையும் விடுவிக்க வேண்டும் என்றும் குரலெழுப்பினர். 

"திருநெல்வேலிக் கலகம்' என்றும், "நெல்லை எழுச்சி' என்றும் விதவிதமாகக் குறிக்கப்படுகின்ற இந்த நிகழ்வை வ. உ. சி. அவர்கள், "திருநெல்வேலித் தீயிட்ட கேஸ்' என்றே குறிப்பிடுகிறார். 

சொல்லப்போனால், பொருநையாளின் பெருந்தன்மையை எதிரொலிக்கும் சில நிகழ்வுகளும் இந்த எழுச்சியின்போது நிகழ்ந்தன என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com