தேவியின் திருத்தலங்கள் 35: திருகோகர்ணம் அரைக்காசு அம்மன்

எங்கெங்கும் சக்தியே நிறைந்திருக்கிறாள். அவளே இந்த உலகின் சூத்ரதாரி. எனவேதான் அவளே ஒவ்வொரு இடங்களில் ஒவ்வொரு வடிவில் காட்சி அளிக்கிறாள். அதில் ஒரு வடிவமே "அரைக்காசு அம்மன்'.
தேவியின் திருத்தலங்கள் 35: திருகோகர்ணம்  அரைக்காசு அம்மன்
தேவியின் திருத்தலங்கள் 35: திருகோகர்ணம்  அரைக்காசு அம்மன்

"ஸ்மனஸ்த்வம் வ்யோம த்வம் மருதஸி மருத்ஸாரதி -ரஸி 
த்வ -மாபஸ் த்வம் பூமிஸ் - த்வயி பரிணதாயாம் ந ஹி பரம்'

-செளந்தர்ய லஹரி

எங்கெங்கும் சக்தியே நிறைந்திருக்கிறாள். அவளே இந்த உலகின் சூத்ரதாரி. எனவேதான் அவளே ஒவ்வொரு இடங்களில் ஒவ்வொரு வடிவில் காட்சி அளிக்கிறாள். அதில் ஒரு வடிவமே "அரைக்காசு அம்மன்'.

புதுக்கோட்டை சமஸ்தான மன்னர்களின் குலதெய்வமாக விளங்குபவள்  ஸ்ரீபிரகதாம்பாள். திருகோகர்ணத்தில் இருந்து அருளாட்சி செய்யும் இவளை நினைக்காமல் எந்தக் காரியத்தையும் மன்னர் குடும்பத்தினர் செய்வதில்லை.

இந்த அன்னையை போற்றிட சமஸ்தானம் இவளின் உருவம் பொறித்த காசினை வெளியிட்டது. "அரைப்பணம்' என்ற அளவில் அம்மன் திரு உருவம் வெளியானதால் ஏழை எளிய மக்கள் "அரைக்காசு அம்மன்' என்றே சொல்ல ஆரம்பித்தார்கள்.

தொலைந்த பொருள் கிடைத்தது
ஒருமுறை சமஸ்தானத்தின் பாரம்பரிய நகை ஒன்று காணாமல் போய் விட்டது. துடித்துப் போனவர்கள் அன்னையிடம் வேண்டினர்.  தொலைந்த நகை உடனே கிடைத்தது. மகிழ்ந்த மன்னர் குடும்பத்தினர் விசேஷ பூஜைகள் செய்தனர். இந்தத் தகவல் வெளியில் பரவ, தொலைந்த பொருள்களைத் தேடித்தரும் விசேஷ சக்தி படைத்தவளாக அம்பிகை கொண்டாடப்படுகிறாள்.

அம்பிகையை நினைத்து வெல்லம் நைவேத்தியம் செய்தால் அது கரைவது போல் நம் வேதனைகள் கரையும் என்பது நம்பிக்கை. எலுமிச்சம் பழ மாலை அணிவித்து வேண்டினால் இழந்த பொருள், தொலைந்த பொருள்கள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

பழைமையான ஆலயம். இங்கு ஈசனோடு பிரகதாம்பாள் என்ற பெயரில் கொலு இருக்கிறாள் அம்பிகை. இவளே "அரைக்காசு அம்மன்' என்று அழைக்கப்படுகிறாள்.   

திருகோகர்ணம் உருவான காலம் கி.பி. 7-ஆம் நூற்றாண்டு என மதிப்பிடப்பட்டிருக்கிறது. பாறைப் பகுதியைக் குடைந்து மண்டபங்கள், இறைவன் திருமேனி அமைக்கப்பட்ட குடவரைக் கோயில் இது. கோகர்னேஸ்வரரின் கருவறை மலைச்சரிவில் உருவாக்கப்பட்டிருக்கிறது.

இந்த மண்டபப் பகுதி முழுவதும் நான்கு தூண்களின் மீது அமைந்துள்ளது போல் குடைந்து உருவாக்கப் பட்டிருப்பது காண வேண்டிய அற்புதம். இடப்புறம் வீரபத்ரர், வலப்பக்கம் விநாயகர் திருமேனியும், அடிப்பகுதியில் சப்த மாதாக்களின் உருவங்களும் குடைவரைக் கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றன.

வெகு நுட்பமான சிற்ப வேலைப்பாடுகள் பல்லவர்களின் கலைப்பணியாக இருந்தாலும், கி.பி.1012 -இல் பரகேசரி ராஜேந்திர சோழனால் பிரகதாம்பாள் திருக்கோயில் உருவாக்கப்பட்டதாகவும் கருதப்படுகிறது.

மாடிப்பகுதி

எந்தக் கோயிலிலும் இல்லாத ஒரு சிறப்பான விஷயம், "மாடிப்பகுதி' என்று ஓர் அமைப்பும், அங்குள்ள தெய்வத் திருமேனிகளும்தான். மாடியில் முருகன், வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளி இருக்கிறார். மேல் மாடத்தில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட ஆயிரத்து எட்டு ருத்ராட்ச லிங்கங்கள் அமைந்திருப்பது அற்புதமான காட்சி.

அம்பிகை அருள்மிகு பெரிய நாயகி, மங்கள நாயகி என்றும் அழைக்கப்படுகிறாள். "கங்கா தீர்த்தம்' என்னும்  வற்றாத சுனையும், மங்கள தீர்த்தமும் உள்ளது. மகிழ மரம் இதன் தல விருட்சமாக உள்ளது. எழிலான தோற்றத்தில் காட்சி அருளும் அன்னையைக் காணக் கண் கோடி வேண்டும்.

தல வரலாறு

இத்தலத்திற்கென்று ஒரு புராணக் கதை இருக்கிறது. ஒருமுறை தேவேந்திரன் சபைக்கு காமதேனு பசு தாமதமாக வந்து விட்டது. இதனால் கோபமடைந்த இந்திரன் நீ பூமியில் போய் பசுவாகப் பிறப்பாய் என்று சாபம் அளித்து விட்டான். பூமிக்கு வந்த காமதேனு வசிஷ்ட முனிவரிடம் விமோசனம் கேட்க, "வகுளாரண்யம்' என்ற இடத்தில் உள்ள கபில முனிவரைச் சந்திக்கச் சொல்கிறார்.

அவ்வாறே சென்ற பசு அவரைச் சந்திக்க, வகுளாரண்யம் என்ற மகிழ மரக் காடுகள் நிறைந்துள்ள இடத்தில் அமைந்துள்ள ஈசனுக்கு தினமும் கங்கை நீரால் அபிஷேகம் செய்யச் சொல்கிறார். அதேபோல் கங்கை நீரைத் தன் காதுகளில் ஏந்திக் கொண்டு வந்து அபிஷேகம் செய்கிறது பசு.

அதற்கு ஒரு கன்றும் ஈன்று, அதற்கு பாலூட்டிக் கொண்டிருந்தது. ஒரு நாள், அதற்கு முக்தி அளிக்க ஈசன் வேங்கையாக அதன் முன் தோன்றி, தான் அதை விழுங்கப் போவதாகக் கூறினார். அப்போது காமதேனு ஈசனுக்கு அபிஷேகம் செய்ய கங்கை நீர் கொண்டு செல்கிறேன். அதை முடித்து விட்டு, தன்  கன்றுக்கு பால் கொடுத்து விட்டு உடனே திரும்புவதாக வாக்கு அளித்தது.

சத்தியம் தவறாத பசு அதேபோல் அபிஷேகம் முடித்து, கன்றுக்கு பால் கொடுத்து விட்டு வேங்கையின் முன் வந்தது.  அதன் சத்தியத்தைக் கண்டு மனம் மகிழ்ந்த ஈசன் அம்பிகையுடன் காட்சி அளித்து காமதேனுவுக்கு முக்தி அளித்த இடமே அருகில் உள்ள "திருவேங்கை வாசல்'.

பசு காதுகளில் நீர் கொணர்ந்ததால் திருகோகர்ணம் என்று அழைக்கப்படுகிறது. மிஞ்சிய கங்கை நீரை இங்குள்ள பாறையில் கீறி பசு சேமித்து வைத்ததால், அது இன்றும் வற்றாத சுனையாக "கபில தீர்த்தம்' என்று அழைக்கப்படுகிறது.

இங்கு ஒரு காலத்தில் நித்ய உற்சவம் நடந்தது.  இப்போது சில திருவிழாக்கள் மட்டுமே நடைபெறுகிறது. சித்திரை, வைகாசி வஸந்தத் திருவிழா, ஆனி உற்சவம், நவராத்திரி, தைப்பூசத் திருவிழா போன்றவை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.  

அரைக்காசு அம்மனை வேண்டி நின்றால் தொலைந்த பொருள் மட்டுமல்லாமல், நம் வாழ்வில் இழந்த சகல செüபாக்கியங்களையும், தொலைந்த மகிழ்ச்சி, ஆனந்தம் அனைத்தையும் மீட்டுத் தருவாள்!

அமைவிடம்
புதுக்கோட்டை நகரையொட்டி 2 கி.மீ. தொலைவில் திருகோகர்ணத்தில் அம்பிகை  வீற்றிருக்கிறாள்..!
(தொடரும்)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com