மகாதானம் அளித்த மாதானத்தில்... 

சீர்காழியை தலைமையிடமாக கொண்ட பகுதி வடகால் ஜமீன்தார் மங்காத்தய்யாருக்கு பரிசாக வழங்கப்பட்டது.  
மகாதானம் அளித்த மாதானத்தில்... 
மகாதானம் அளித்த மாதானத்தில்... 


சரபோஜி மகாராஜா ஆண்ட 1800-ஆம் ஆண்டில் குதிரைகளை அடக்கியதற்காக, அப்போதைய ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்திலுள்ள சீர்காழியை தலைமையிடமாக கொண்ட பகுதி வடகால் ஜமீன்தார் மங்காத்தய்யாருக்கு பரிசாக வழங்கப்பட்டது.  

சீர்காழி, மாதானம் போன்ற பகுதிகளை வடகால் ஜமீன்தார் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்து ஆட்சி நடத்தி வந்தார். விவசாயம் பிரதானமாக கொண்ட கிராமத்தில் கோயில்கள் எதுவும் இல்லாதது, ஊர் மக்களுக்கு பெரும் குறையாக இருந்தது. நம் ஊருக்கு கோயில் வேண்டும் என்ற கோரிக்கையை ஜமீன்தாரிடம் சொல்ல, அவரோ ""போய் வேலையைப் பாருங்கள்; கோயில் எல்லாம் பிறகு கட்டலாம்'' என கூறிவிட்டார்.

இதனால் மனமுடைந்த மக்கள் ஊரின் மையப்பகுதியில், ஒரு புளியமரத்தின் அடியில் ஒரு கல்லை பதித்து அம்மனாக வழிபாடு செய்தனர். 

சில காலங்கள் கழிந்ததும் ஜமீன்தார் அந்த புளிய மரத்தை துண்டுதுண்டாக வெட்டி எடுத்து வரும் போது வண்டி அச்சாணி முறிந்து மரத்துண்டுகள் கீழே விழுந்தன. இருள் சூழந்துவிட்டதால், ஜமீன்தார் "காலையில் வந்து எடுத்துக் கொள்ளலாம்' என புறப்பட்டுச் சென்று விட்டார். 

மறுநாள் காலை வெட்டிய மரக்கிளைகளை அப்புறப்படுத்த வந்த வேலையாட்கள் பதறிப் போய் நின்றனர். துண்டு துண்டாக சிதைக்கப்பட்ட மரக்கிளைகள் அனைத்தும் துளிர்விட்டு பூ பூத்துக் காணப்பட்டது. 

தகவல் அறிந்து வந்த மக்கள் அதைக் கண்டு கண்ணீர் வடித்தபடி ""எங்கள் தாய் மாரியம்மன்!'' என்று அழுதனர். 

அப்போது ஒரு பெண் மீது அருள் வந்து ""நான் எங்கும் செல்லவில்லை; இங்கே இருக்கும் ஒரு புளிய மரத்தினடியில் பூமியில் இருக்கிறேன், என்னைத் தோண்டி எடுங்கள்'' என்று கூற மக்களும் உடனே அந்த புளியமரத்தடியை வேகமாகத் தோண்டினர். 

அப்போது அம்மனின் சிலை ஒன்று பூமிக்கு அடியில் இருப்பதைக் கண்டு எல்லோரும் மெய்சிலிர்த்தனர். ஆனால் பக்தர்கள் தோண்டி எடுக்கும் பொழுது அம்மனின் திருக்கரம் சிறிது பின்னப்பட்டு விட்டது. இதையெல்லாம் பார்த்த ஜமீன்தார், ""பத்தர்களின் நம்பிக்கையை குலைத்து விட்டேனே... என்னை மன்னித்துவிடு அம்மா!'' என்று மனமுருகி வேண்டினார். 

அப்பொழுது புளியமரத்தின் நேர் எதிரில்  ஒரு பிரம்புக்காடு இருந்தது. அதிலிருந்து ஒரு ஜோதி தெரிய அனைவரும் அங்கு சென்று பார்த்த பொழுது, பலநாகங்கள் புடைசூழ்ந்து நிற்க, அம்மன் சிலை ஒன்று இருப்பதைக் கண்டனர்.

ஊர் மக்களும், ஜமீன்தாரும் ""எங்கள் முத்துமாரியே! உன்னை மீட்டெடுத்து கோயில் கட்ட இந்த நாகங்கள் வழி விட வேண்டுமே!'' என்று கோரிக்கை வைத்தனர். 

கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த நாகங்கள் அனைத்தும் வேகமாக பிரம்பு காட்டுக்குள் சென்று விட்டன. பின்னர் ஜமீன்தார், மாரியம்மனுக்கு ஒரு சிறிய கோயில் கட்டி வழிபாடு செய்தார். பிறகு நூதன ஆலயமாக கட்டப்பட்டு கருவறையில் அம்மன் வைக்கப்பட்டது. 

புளியமரத்தின் அடியில் இருந்து எடுக்கப்பட்ட பின்னப்பட்ட சிலை தனி சந்நிதியாக வைக்கப்பட்டுள்ளது. 

இவ்வாலயத்தின் எதிரில் வெட்டப்பட்ட நிலையில் இன்றும் புளிய மரங்கள் அப்படியே தரையில் துளிர்விட்டு படுக்கை வாட்டில் கிடக்கின்றன. அதையே தல விருட்சமாக பக்தர்கள் வழிபாடு செய்கிறார்கள்.

ஜமீன்தார் மங்காத்தய்யா மகன் குமாரசாமி காவுத்த மீண்டநயினார் 1908-இல் கோயிலை புனரமைத்துக் கட்டினார். 

பின்னர், அடுத்த தலைமுறையான அழகிய சிதம்பரம் ராவுத்த மீண்ட நயினார் கோயிலை அபிவிருத்தி செய்து அம்மன் உத்தரவின் பேரில் 12 அந்தணர்களுக்கு தானம் வழங்கியதால், அந்த ஊர் "மகாதானம்" என அழைக்கப்பட்டு, காலப்போக்கில் மருவி "மாதானம்' என்றானது. 

தற்போது கோயிலை வடகால் ஜமீன் வாரிசு கணேஷ் என்பவரது மகனான வடகால் ஜி.நடராஜன் நிர்வகித்து வருகிறார்.

தீமிதி விழா: இக்கோயிலில் ஆடி மாதம் கடைசி வெள்ளியன்று தீமிதி திருவிழா விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. குறைந்தது ஒரு லட்சம் பக்தர்கள் இவ்விழாவில் கலந்து கொள்ள தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் வருவார்கள். 

பாதிக்கப்பட்ட குழந்தைகளின் உடல்நலம் சீராக பெரும்பாலான மக்கள் இங்கு வந்து, "பாடை பிரார்த்தனை' மேற்கொள்கிறார்கள். அம்பாளின் அபிஷேக தீர்த்தம் தெளித்தால் தோல் நோய் மிக விரைவாக குணம் அடைந்து விடுவதாக சர்வசக்தி பீடம் தில்லை சீனு தெரிவிக்கிறார்.

அமைவிடம்: மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியிலிருந்து மாதானத்திற்கு பேருந்து வசதி உள்ளது. சிதம்பரத்திலிருந்து புத்தூர், திருமயிலாடி வழியாக பழையாறு செல்லும் பேருந்திலும் செல்லலாம். காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையும் கோயில் திறந்திருக்கும். தொடர்புக்கு: 98848 77383. 

-
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com