சிறுதாமூர் திருத்தலம்: கைத்தலம் பற்ற...

கனவினை நனவாக்கும் விதமாக திருமால் அடியார்கள் ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீரங்கமன்னார் திருமண வைபவத்தை நடத்தி வருகின்றனர். 
சிறுதாமூர் திருத்தலம்: கைத்தலம் பற்ற...
சிறுதாமூர் திருத்தலம்: கைத்தலம் பற்ற...

இறைவனிடம் நாம் காட்டும் அன்பை பக்தி என்கிறோம். அந்த பரமனின்பால் உள்ள அதீத பக்தியினால், நாயகனாகப் பாவித்து பிரேமை கொண்டும், சொல்
மலர்களாகிய பாமாலையில் சுவைபட சித்தரித்தும், தாமே அவனை மணாளனாகவும் அடைந்துய்யும் பேறு பெற்றும், "சூடிக் கொடுத்த சுடர்க்கொடி' என்ற பெருமைக்குரியவராகவும் திகழ்பவள் ஆண்டாள். 
மாயக்கண்ணனை தான் கைத்தலம் பற்றக் கனா கண்டதை "நாச்சியார் திருமொழி'யில் "வாரணம் ஆயிரம்' எனத் தொடங்கும் பத்து பாசுரங்களில் அழகாக வர்ணிக்கிறாள் கோதை.     

அந்தக் கனவினை நனவாக்கும் விதமாக திருமால் அடியார்கள் ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீரங்கமன்னார் திருமண வைபவத்தை நடத்தி வருகின்றனர். 
ஆடிப்பூரம்: "ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் திருநட்சத்திர திருக்கல்யாண மகோற்சவம்' என்ற பெயரில் ஆண்டுதோறும் ஆடிப்பூரம் நாளில் சிறுதாமூர் திருத்தலத்தில் இக்கல்யாண வைபவம் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. 
இங்குள்ள ஸ்ரீ அலர்மேல் மங்கை சமேத ஸ்ரீநிவாசப்பெருமாள் கோயில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழைமையானது. பல்லவ மன்னர்கள் காலத்து திருப்பணி கண்டது. இத்திருத்தலம் பூகோள ரீதியாக மிகச்சரியாக திருப்பதிக்கும், ஸ்ரீரங்கத்திற்கும் மத்தியில் இருப்பதால் சின்ன திருப்பதி என்றும் போற்றப்படுகிறது. பெருமாள் ஆலயத்திற்கு அருகில் விக்கிரம சோழன் காலத்தில் கட்டிய பழைமையான ஸ்ரீ அகஸ்தீஸ்வரமுடையார் சிவன் கோயிலும் உள்ளது.

தலவரலாறு: திருமலையானைத் தரிசிக்க மிகுந்த ஆவலுடன் சென்ற ஓர் ஏழை விவசாயி தன் நடைப்பயணத்தை தொடர முடியாத நிலை ஏற்பட்டது. அவன் தாபத்தை நீக்கும் விதமாக வேங்கடவனே இங்கு எழுந்தருளியதாக தல வரலாறு கூறுகிறது. 

நெகிழ்ந்த விவசாயி ஒரு படி நெல்லைக் கையில் எடுத்து பெருமாளிடம் சமர்ப்பிக்க, அசரீரியாக பெருமாள் உரைத்த வண்ணம் பூமியில் தூவினான். இந்த நிகழ்வு நடந்த இடம் சிறுதாமூர் ஆகும். 
அன்றிலிருந்து ஒரு பெரியவர் முதலில் நெல்லை நிலத்தில் தூவிய பின்னரே, ஊர் மக்கள் நெல்லை தங்கள் நிலத்தில் விதைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

ஒரு சமயம் மாமல்லபுரத்தில் கொள்ளையர்களை அழிக்க காஞ்சியிலிருந்து கிளம்பி சிறுதாமூர் வழியாகச் சென்ற பல்லவ மன்னனுக்கு ஸ்ரீநிவாசப் பெருமாள் அருளால் வெற்றி கிடைத்ததாம். இதுபோன்ற காரணங்கள் பொருட்டு இத்தலபெருமாள் "வெற்றி வழங்கும் பெருமாள்' எனவும் சிறப்பித்து அழைக்கப்படுகிறார்.

சிறுதாமூர் ஸ்ரீஸ்ரீநிவாசர் அறக்கட்டளை என்ற அமைப்பின் மூலம் திறம்பட நிர்வகிக்ககப்படும் இந்த ஆலயம் ஒரு வைணவ ஆலயத்திற்கு உரிய அனைத்து அம்சங்களுடன் தெய்வமூர்த்தங்கள் மற்றும் ஆழ்வார், ஆச்சாரியர்கள் சந்நிதிகளுடன் அமையப்பெற்று, சிற்பக்கலை நுணுக்கத்துடன் மிக அழகாகத் திகழ்கிறது. 
மூலவர் ஸ்ரீநிவாசப் பெருமாளை நின்ற கோலத்திலும், தனி சந்நிதியில் அலர்மேல்மங்கைத் தாயாரை பத்ம பீடத்தின் மீது அமர்ந்த கோலத்திலும் சேவிக்கலாம். 

ஸ்ரீவில்லிபுத்தூரில் அருள்வது போலவே, அதே போன்று உருவ அமைப்பில் வடிக்கப்பட்டுள்ள கற்திருமேனியில் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் தனி சந்நிதி கொண்டு அருள்வது சிறப்பு.


 
ஆண்டாள் சந்நிதி விமானத்தில் கையில் வேலுடன் ரங்கமன்னார், ஆண்டாள், பூக்கூடையுடன் பெரியாழ்வார், கண்ணாடி பார்க்கும் ஆண்டாள், நான்கு புறமும் பெண்கருடன் (கருடகி) ஆகிய சிற்பங்கள் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.  ஆலயத்தின் வடக்கே இயற்கையாக அமைந்துள்ள தாமரை புஷ்கரணி உள்ளது. கடைசியாக இவ்வாலயத்தில் 2018}இல் சம்ப்ரோக்ஷண வைபவம் நடந்தேறியது.

அஹோபிலமடம் 43}ஆவது பட்டம் ஸ்ரீமத் அழகிய சிங்கர், ஸ்ரீமத் ஆண்டவன் சுவாமிகள் ஆகியோர் இங்கு விஜயம் செய்து மங்களாசாசனம் செய்துள்ளார்கள். காஞ்சி மகாசுவாமிகள் இத்
தலத்தில் சில காலம் தங்கியுள்ளதை ஊர்மக்கள் நினைவு கூர்கின்றனர்.
இவ்வாலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு திருப்பதி, ஸ்ரீரங்கம் சென்று பெருமாளை சேவித்த புண்ணியம் ஒரு சேரக் கிடைக்கும் என்றும், எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிட்ட இப்பெருமாள் அருள்கிறார் என்றும் தரிசன பலன்களாக கூறப்படுகிறது. 

ஆண்டுதோறும் நடைபெறும் ஆண்டாள் நாச்சியார் கல்யாண உற்சவத்தை, இவ்வூரைச் சேர்ந்த அப்பாதுரை அய்யங்கார் குடும்பத்தினர் உபயதாரராக இருந்து பாரம்பரியமான முறையில் சிறப்பாக நடத்தி வருகின்றனர்.  இவ்வாண்டு திருக்கல்யாண உற்சவம், ஆகஸ்ட் 11 }ஆம் தேதி, ஆடிப்பூரத்தன்று திருமஞ்சனம், ஊஞ்சல் உற்சவம், புஷ்பயாகம், சயன உற்சவம் போன்ற வைபவங்ளுடன் நடைபெறுகிறது. 

அமைவிடம்: சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மேல்மருவத்தூரை அடுத்த தொழுப்பேடு சுங்கசாவடியை கடந்தவுடன் வரும் ஒலக்கூர் கூட்டு ரோடிலிருந்து மேற்கே 4 கி.மீ. தூரத்தில் சிறுதாமூர் அமைந்துள்ளது இத்திருத்தலம். திண்டிவனத்திலிருந்து சிறுதாமூர் செல்ல பேருந்து வசதி அதிகம் உள்ளது.

தொடர்புக்கு: விஜயகிருஷ்ணன் - அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர்: 9600644446 மற்றும் பார்த்தசாரதி - ஆலய அர்ச்சகர்: 8870755366. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com