158. பொருநை போற்றுதும்!

இவர்களுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டு, இப்பெருமக்கள் மாவட்டச் சிறையில் அடைக்கப்பட்டனர் என்பதையும் முன்னரே கண்டோம். 
டாக்டர் சுதா சேஷய்யன்
டாக்டர் சுதா சேஷய்யன்

வ.உ.சி. மீதும், சிவா மீதும், பத்மநாப ஐயங்கார் மீதும் பதியப்பட்ட வழக்கு வகைகளில், ஜாமீன் வழங்கப்படுவதே வழக்கம் என்பதையும், எனினும் வின்ச்சுக்கு இருந்த சினத்தின் காரணமாக, இவர்களுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டு, இப்பெருமக்கள் மாவட்டச் சிறையில் அடைக்கப்பட்டனர் என்பதையும் முன்னரே கண்டோம். 

ஜாமீனுக்கான மேல்முறையீட்டு மனு, மதராஸ் உயர்நீதிமன்றத்தில் பரிசீலிக்கப்பட்டது. தலைமை நீதிபதி ஆர்னால்ட் வைட் அவர்களும், நீதிபதி டாடம் அவர்களும் வின்ச் கையாண்ட முறை தவறு என்றுரைத்து, மூவரையும் ஜாமீனில் விடுவிக்கும்படி, மார்ச் 20-ஆம் தேதி ஆணையிட்டனர்.  இந்த ஆணை நெல்லையை மார்ச் 25-ஆம் தேதி வந்தடைந்தது. ஆனால், இதற்கிடையில், இவர்கள் மீது எந்தெந்தப் பிரிவுகளில் புகார்கள் பதியப்பட வேண்டும் என்பதற்கான அரசு ஒப்புதல், மார்ச் 23-ஆம் தேதி நெல்லை மாவட்ட நிர்வாகத்திற்குக் கிடைத்தது. ஆக, பாளையங்கோட்டைச் சிறையை விட்டு வெளிவந்த சிறிது பொழுதிலேயே, மூவரும் மீண்டும் கைது செய்யப்பட்டனர். 

சுப்பிரமணிய சிவா மீது, தம்முடைய உரைகளில் சுயராஜ்ஜியத்தைப் பற்றிப் பேசி, அரசுக்கு எதிரான உணர்வுகளைத் தூண்டியமைக்காக, "124 - ஏ' பிரிவின் கீழ் ராஜதுரோகக் குற்றம் சாட்டப்பட்டது. 

வ.உ.சி. மீது, இரண்டு தனித்தனிக் குற்றச்சாட்டுகள். தம்முடைய உரையில் அரசு நிந்தனை (ராஜதுரோகம்) செய்தார் என்று "124-ஏ' வழக்கு மற்றும் சிவாவின் குற்றத்துக்கு உறுதுணையாக இருந்து, அவருக்கு உணவும் இடமும் அளித்தார் என்று "153-ஏ' பிரிவின்படி வழக்கு. 

மார்ச் 26-ஆம் தேதி, மாவட்டக் கூடுதல் நீதிபதி வாலஸ் முன்னர், வழக்கு விசாரணை தொடங்கியது. 

பூர்வாங்க விசாரணைக்குப் பின்னர், வழக்கானது செஷன்ஸ் கோர்ட்டுக்கு மாற்றப்பட, சிறப்பு செஷன்ஸ் நீதிபதியாக நியமிக்கப்பட்ட பின்ஹே என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்ஹேவிடம் இந்த வழக்கு செல்லக்கூடாது என்று எழுப்பப்பட்ட அத்தனை கண்டனங்களும் எதிர்ப்புகளும் விழலுக்கு இறைத்த நீராயின. 

வ. உ.சி.யின் சார்பாக சடகோபாச்சாரியார், நரசிம்மாச்சாரியார், வேங்கடாச்சாரியார் ஆகியோர் வாதிட, அரசு சார்பாக பாரிஸ்டர் பவல் ரிச்மண்ட் வாதிட்டார். 

பின்ஹே வழக்கை விசாரித்த விதமும், நீதிமன்றத்தில் நடந்துகொண்ட விதமும், "நாகரிக உலகத்தின் நகைப்புக்கு உரியவரானார்' என்று பிற்கால ஆய்வாளர்கள் பதிவு செய்வதற்கு வழிகோலின. 

இந்தியாவின் அரசியல் உரைகள் தனக்குப் புதுமையாக உள்ளதாகக் கூறிய பின்ஹே, வ. உ. சி-யையும், சிவாவையும் குற்றவாளிகளாக அறிவித்துத் தண்டனையையும் அறிவித்தார் (இதற்குள்ளாக, அவர் பேசியதில் ஏதும் எல்லை மீறல் இருக்கவில்லையென்று பத்மநாப ஐயங்கார் விடுவிக்கப்பட்டிருந்தார்). 

சிவாவுக்குப் பத்தாண்டுகள் கடுங்காவல். வ. உ. சி-க்கு இரட்டைத் தீவாந்தரத் தண்டனைகள். தீவாந்தரம் என்பது வெறும் ஆயுள் தண்டனை அன்று. 

வாழ்க்கையே வேறோர் இடத்திற்கு (வழக்கமாக இந்த இடம் ஒரு தீவாக இருக்கும்) மாற்றப்பட்டு அங்கேயே சிறை வைக்கப்படுவது ஆகும். அந்தமான் தீவுகளுக்குத்தான் இவ்வாறு பலரும் அனுப்பப்பட்டார்கள். 

அரச நிந்தனை, சிவாவுக்கு உதவியது ஆகியவற்றோடு, துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த நால்வரின் உயிரிழப்புக்கும் வ. உ. சி.யே காரணம் என்று குற்றம் சாட்டி, இரண்டு தீவாந்தரத் தண்டனைகளையும் அடுத்தடுத்து அனுபவிக்க வேண்டும் (ஒவ்வொரு தீவாந்தரமும் 20 ஆண்டுகள்) என்னும் தீர்ப்பை பின்ஹே அறிவித்தார். 

வெளியிடப்பட்ட நிலையிலேயே இந்தத்தீர்ப்புக்குக் கடும் விமர்சனங்கள் எழுந்தன. இந்த வழக்கிற்குப் பின்னர், பின்ஹே உயர்நீதிமன்ற  நீதிபதியாக பதவி உயர்த்தப்பட்டார். 

லண்டன் "டெய்லி டைம்ஸ்' இதழ், இவ்வாறு அவர் பதவி உயர்த்தப்பட்டதைப் பரிகசித்தது. "அர்த்தமில்லாத இரட்டைத் தண்டனை' என்று ஆதங்கப்பட்டார் பாரதியார். 

அப்போதைய நிர்வாகத்திற்கு, வ. உ. சி-மீதான ஆத்திரம் அடங்கவில்லை. தீவாந்தரத்தைக் கடுங்காவலாக மாற்றி, கோவைச் சிறைக்கு அனுப்பியது. 

தீர்ப்பின்படித் தம்மை அந்தமானுக்கே அனுப்பும்படி வேண்டினார் வ. உ. சி. ஆனால், அது அனுமதிக்கப்படவில்லை. தீவாந்தரத் தண்டனை அளிக்கப்பட்டவர்களுக்குச் சிறையில் கடுமையான உழைப்பைத் தருவது வழக்கமில்லை. 

ஆனால், வ. உ. சி. விஷயத்தில் இவ்வழக்கங்கள் மீறப்பட்டன. தீவாந்தரம் என்பது சாதாரண காவல்; நாடு கடத்தல், ஆனாலும் கடும் உழைப்பு இருக்காது. ஆனால், வ. உ. சி-க்குக் கடுங்காவல்; கடும் உழைப்பு. 

இதற்கான கண்டனக் குரல்கள், பிரிட்டிஷ் பாராளுமன்றத்திலேயே ஒலித்தன. "ஆங்கிலேய சோஷலிஸவாதிகள், சகக் குடிமக்களின் பொருளாதார மேம்பாட்டுக்காக எழுப்பும் குரலைத்தான், இந்திய தேசியவாதிகள் எழுப்புகின்றனர்; இதில், அரச நிந்தனை எங்கிருந்து வரும்?' என்பதான வினா கேட்கப்பட்டது. 

பின்ஹேயின் தீர்ப்பு தகாதது என்று பிரிட்டிஷ் இதழ்களே முழங்கின. சுதேசியவாதிகளுக்கு அவ்வளவாக ஆதரவு காட்டாத வி. கிருஷ்ண சுவாமி ஐயர், தீர்ப்பின் கொடுமையைத் தாளமுடியாமல், பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினராகத் திகழ்ந்த சர் வில்லியம் வெட்டர்பர்ன் என்பாருக்குக் கடிதம் எழுதினார். 

வெட்டர்பர்ன், இந்திய தேசியக் காங்கிரஸின் தொடக்க நிலை உறுப்பினர்களில் ஒருவர்; பிற்காலங்களில் காங்கிரஸ் தலைவரும் ஆனார்; கோகலேவுடன் நெருங்கிய நட்பு பூண்டிருந்தார். 

கிருஷ்ணசுவாமி ஐயரின் கடிதத்தை அப்படியே ஜான் மார்லிக்கு (அப்போதைய இந்தியாவுக்கான பிரிட்டிஷ் மந்திரி ஜான் மார்லி) அனுப்பிய வெட்டர்பர்ன், இப்படிப்பட்ட கொடுமைகளைத் தடுக்கும்படி வேண்டினார். 

மார்லியின் தலையீட்டால், உயர்நீதிமன்ற நிரந்தர நீதிபதியாகப் பின்ஹே ஆவது தடுக்கப்பட்டது. பின்ஹே ராஜினாமா செய்தார். 

யாருக்கு என்ன ஆனால் என்ன, வ. உ. சி-யின் இன்னல்கள் குறையவில்லை. 1858-ஆம் ஆண்டு ராணி விக்டோரியா அறிவித்த சாசனத்தின் பொன் விழா, 1908 நவம்பர் 2-ஆம் தேதி கொண்டாடப்பட்டது. 

இதன் விளைவாக, அனைத்து இந்தியக் கைதிகளுக்கும் தண்டனைக் குறைப்பு வழங்கப்பட்டது. ஆனால், வ. உ. சி-க்கு மட்டும் மறுக்கப்பட்டது. 

சிறைவாசத்திற்கு அஞ்சியவர் இல்லை வ. உ. சி. இருப்பினும், தமக்கு நீதி கிட்டும் என்று நம்பினார். 

கோர்ட்டிலிருந்து சிறைக்கு அழைத்துச் செல்லும் வழியில், வாடிய முகங்களோடு நிற்கும் நண்பர்களையும், சகாக்களையும் பார்த்து, "கவலைப்படாதீர்கள், இருக்கிறது ஹைகோர்ட், அடித்துத் தள்ளி வந்து விடுகிறேன்!' என்று நம்பிக்கையொழுக நவில்வாராம்.  தமக்கு செஷன்ஸ் கோர்ட் அளித்த தண்டனையை ரத்து செய்யக் கோரி, ஹைகோர்ட்டுக்கு வ. உ. சி. மனு அனுப்பினார். 

1908, அக்டோபர் 13-ஆம் தேதி, நீதிபதிகள் சார்லஸ் ஆர்னல்ட் வைட் மற்றும் மன்றோ ஆகியோர் முன்னிலையில் இம்மனு விசாரணைக்கு வந்தது.  ஆங்கிலேயரை வெளியேற்றுவதே வ. உ. சி-யின் உரை நோக்கம் என்று வலியுறுத்திய ஹை கோர்ட், மேல் முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்தது. ஆனால், தண்டனைக்காலத்தைக் குறைத்தது. அரச நிந்தனைக்கான தண்டனை ஆறு ஆண்டுக்கால தீவாந்தரமாகவும், உடந்தைக்கான தண்டனை நான்காண்டுக்கால தீவாந்தரமாகவும் குறைக்கப்பட்டு, இரண்டும் அடுத்தடுத்து இன்றி, சமகாலத்திலேயே நிறைவேற்றப்படலாம் என்னும் தீர்ப்பு வழங்கப்பட்டது. 

தொடர்ந்து மேல்முறையிடுவதில் வ. உ. சி. சளைத்தாரில்லை. 1909 ஜனவரியில், "தீவாந்தரமென்பது அந்தமானுக்கு அனுப்புதலேயன்றி, உடலும் மனமும் துவளக் கடுங்காவல் இடுவதில்லை' என்று முறையிட்டார். அரசு பாராமுகம் காட்டியது. வைஸ்ராய்க்கு அனுப்பப்பட்ட மனுக்கள், இந்திய மந்திரிக்கு மேலனுப்பப்பட்ட நிலையிலும், எந்தவித நடவடிக்கையும் இல்லை. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com