159. பொருநை போற்றுதும்: வ.உ.சி. பட்ட துன்பங்களை வடித்திட வார்த்தைகள் போதா!

கார்னேஷன் மற்றும் தர்பார் ரெமிஷன்கள் ஏன் சரியாக இவருக்கு வழங்கப்படவில்லை?' என்றும் குரல் எழுப்பினார். 
159. பொருநை போற்றுதும்: வ.உ.சி. பட்ட துன்பங்களை வடித்திட வார்த்தைகள் போதா!
159. பொருநை போற்றுதும்: வ.உ.சி. பட்ட துன்பங்களை வடித்திட வார்த்தைகள் போதா!


1912, மார்ச் 7-ஆம் தேதி, ஒ'கிரேடி என்னும் பாராளுமன்ற உறுப்பினர், "வ.உ.சி-க்கு தீவாந்தரம் நிறைவேற்றப்படாமல், உழைப்புடன் கூடிய கடுங்காவலாக அது கையாளப்படுவதன் காரணம் என்ன?' என்றும், கார்னேஷன் மற்றும் தர்பார் ரெமிஷன்கள் ஏன் சரியாக இவருக்கு வழங்கப்படவில்லை?' என்றும் குரல் எழுப்பினார். 

இவற்றுக்கிடையில், சிறையில் இந்தப் பெருமகனார் பட்ட துன்பங்களை வடித்திட வார்த்தைகள் போதா. பொங்கிப் பொங்கி அழுதாலும், பொருநையாளின் நீர் முழுவதும் போதா. 

கேழ்வரகுக் கூழ், அதிலும் புழுக்கள். கேசம் நீக்கப்பட்ட மொட்டைத் தலை, கால்களில் கழட்டாத விலங்கு. தானியம் உடைக்கவும், நூல் நெய்யவும் பணிக்கப்பட்டார். கைகளிலும், கால்களிலும் ரத்தம் வடிந்த நிலையிலும், மாடு போல், செக்கினை இழுக்க வைக்கப்பட்டார். 

இந்த வழக்கில் முதல் குற்றவாளியாகக் குற்றம் சாட்டப்பட்டவர் சுப்பிரமணிய சிவா. தம்முடைய ஆவேச உரைகளில் ராஜ துரோகத்தைச் சுமந்து, அரச நிந்தனை செய்தார் என்பதுதான் அடிப்படை வழக்கு. 

சிறப்பு செஷன்ஸ் நீதிபதி பின்ஹே, சிவாவுக்குப் பத்தாண்டுகள் சிறைத் தண்டனை விதித்தார். திருச்சி சிறைக்கு அனுப்பப்பட்டார் சிவா. உயர் நீதிமன்ற மேல்முறையீட்டில், தண்டனை விதிக்கப்பட்டது சரிதான் என்று கூறப்பட்டு, மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால், தண்டனைக் காலம் ஆறு ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது. சிறையில் கம்பளி நெய்ய வைக்கப்பட்டார். கைகள் ரணமாயின; மூச்சில் கலந்த கம்பளித் துணுக்குகளும் ஈரத்தூசும், சுவாசத்தைத் தடைப்படுத்தின. 

ஏற்கெனவே உடல் தளர்ந்திருந்தவர் சிவா. கணவரின் பரிதவிப்பைத் தாளமுடியாத மனைவி, சேஷகிரி ஐயர் என்னும் வழக்கறிஞரின் உதவியோடு, உடல் தளர்ச்சி கருதியாவது பணியின் கடுமையைக் குறைக்கும்படி சிறைத் துறைக் காவல் தலைவருக்குக் கோரிக்கை விடுத்தார். சிறையில் அடைக்கப்பட்ட நாளிலிருந்து சிவாவின் உடல் எடை குறையவில்லை, எனவே உடல் தளர்வு இல்லையென்று விடை கொடுத்த காவல் தலைவர், கைது செய்யப்படுவதற்கு முன்னர் ஒருவர் என்னவாக இருந்தார் என்பது கணக்குக் கிடையாதென்றும், சிறை விதிகளின்படி அனைத்துக் கைதிகளும் ஒன்றுதான் என்றும் அறிவித்தார். 

தொழு நோயும் பீடித்துக் கொள்ள, அரசுக்கு முறையீடு செய்தார் சிவா. இவரும் இவருடைய மனைவியும் கொடுத்த மனுக்களை நிராகரித்த அரசாங்கம், நீதிமன்றத் தீர்ப்பில் தலையிட முடியாது என்று முகம் திருப்பிக் கொண்டது. 

மருத்துவ ஆலோசனையின் பேரில், திருச்சி சிறையிலிருந்து சேலம் தொழுநோய்க் குற்றவாளிகள் விடுதிக்கு அனுப்பப்பட்டார் சிவா.  

சுதேசிய வீரர்கள் எவ்வாறு பார்க்கப்பட்டனர், எப்படியெல்லாம் நடத்தப்பட்டனர் என்பதற்குச் சான்றாக, அந்தக் காலகட்டத்தில் நடைபெற்ற  சம்பவம் ஒன்றை அறிந்து கொண்டால் போதும்! 

1908, ஆகஸ்ட் 17-ஆம் நாள், யதிராஜ் சுரேந்திரநாத் ஆர்யா என்னும் வீரர் மீது, தண்டனைத் தீர்ப்பொன்று விதிக்கப்பட்டிருந்தது. ஆர்யா என்ன குற்றம் செய்தார்? 

வ. உ. சி. மற்றும் சிவா ஆகியோரின் கைது, இதே சமயத்தில் நிகழ்ந்த பாலகங்காதர திலகர் கைது ஆகியவற்றைக் கண்டித்து, 1908 ஜூன் மாதத்தில் ஊர்வலம் ஒன்றை ஆர்யா நடத்தினார். சுதேசியவாதியான ஆர்யாவும் சுப்பிரமணிய பாரதியாரும், வ. உ. சி - சிவா வழக்கில் பிரதிவாத சாட்சி சொல்வதற்காக, ஜூன் 10-ஆம் தேதி திருநெல்வேலிக்குப் பயணப்பட்டனர். ஆனால், நீதிமன்றம் இவர்களை விசாரிக்கவேயில்லை (சென்னை ஜனசங்கம் தொடங்கப்படக் காரணமாக இருந்த சுரேந்திரநாத் ஆர்யா, பிற்காலங்களில் பெரியார் ஈ. வெ.ரா.வுடன் அணுக்க நட்பு பூண்டிருந்தார்). 

1908 ஜூன் 24-ஆம் தேதி சென்னை திரும்பியவர்கள், அன்று மாலையே திருவல்லிக்கேணியில் ஊர்வலம் நடத்தினர். பார்த்தசாரதி திருக்கோயிலில் தொடங்கி, திருவல்லிக்கேணியைச் சுற்றி மீண்டும் கோயிலுக்குத் திரும்பி நிறைவடைந்த இந்த சுதேசிய ஊர்வலத்தில், ஆர்யாவோடும் பாரதியாரோடும், முத்தையாதாஸ், விவேகானந்தரின் சீடரான டாக்டர் எம்.சி. நஞ்சுண்டராவ், கே.வி. வேங்கடரமணா ஆகியோரும் கலந்து கொண்டனர். 

வந்தே மாதரம் என்று கோஷித்து, கைது ஆனவர்களின் நலனுக்காக இறைப்பாடல்கள் பாடினர். மார்ச் மாதம் முதல் ஜூன் வரை மதராஸ் மாகாணத்தின் பல்வேறு இடங்களில் அரச நிந்தனை செய்ததற்காக 1908 ஜூலை 9-ஆம் நாள் ஆர்யா கைது செய்யப்பட்டார். 124-ஏ மற்றும் 153 பிரிவு களின் கீழ் வழக்கு.  

ஆகஸ்ட் 17-ஆம் தேதியத் தீர்ப்பின்படி, ஆர்யா ஐந்தாண்டுகளுக்கு நாடு கடத்தப்படவேண்டும். கூடுதலாக, இரண்டு மூன்றாண்டுச் சிறைக் காவலும் விதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. 

ஆர்யா, பெல்லாரி சிறையில் அடைக்கப்பட்டார். சிறையின் கொடுமை தாங்காமல், தற்கொலைக்கு முயல, அதற்கொரு அபராதமாகக் கூடுதல் நான்கு மாதங்கள் சிறைவாசம் சேர்க்கப்பட்டது. ஆர்யாவும் சிறையில் தொழுநோய்க்கு உள்ளானார். 

1911-இல், தி ஹிந்து இதழின் செய்தியாளராகவும், 1885 முதல் காங்கிரஸ் மாநாட்டிலேயே பங்கு கொண்டவரும், மதராஸ் சட்ட மேலவைத் துணைத்தலைவராகத் திகழ்ந்தவரும், சிறைக் கமிஷன் மற்றும் மதராஸ் வனக்கமிஷன் ஆகியவை தோற்றுவிக்கப்படக் காரணமாக இருந்தவருமான பட்டு (கூட்டி) கேசவப் பிள்ளை, சிவாவும் ஆர்யாவும் தொழுநோயால் துவள்வதைச் சுட்டிக் காட்டி, இருவருக்கும் விடுதலை வேண்டினார். 

இந்த வேண்டுகோளுக்குத் தக்க விடையை நீதித்துறை கோரியபோது, சிறைத்துறைக் காவல் தலைவர் எழுதிய விடை, இன்று வாசித்தாலும் இதயத்தை நொறுக்குகிறது: 

சுரேந்திரநாத் ஆர்யாவும் தொழுநோயாளி என்பது குறித்து எனக்குத் தகவல் இல்லை. அப்படி (தகவலானது) இருக்குமானால், இது விந்தையானது.  ஏனெனில், பெனிடென்ஷியரியிலிருந்து (சென்னை சிறை) அரசாங்கத்தால் விடுவிக்கப்பட்ட ஹிந்து ஆசிரியர் ஜி. சுப்பிரமணியாவும் தொழு நோயாளி. சிறைக்கு அனுப்பப்பட்ட அரச நிந்தனையாளர்கள் சிலரில், மூன்று தொழுநோயாளிகள் என்றால், சற்று மிகையாகத் தெரிகிறது; அரச நிந்தனைக்கும் தொழுநோய்க்கும் ஏதோ தொடர்பு போலும்! 

இப்படித்தான், இந்தப் பெருமக்கள் கொடுமை அனுபவித்தனர். பொருநையாள் மட்டுமல்ல, காவிரி, வைகை, பாலாறு, பெண்ணை என்று அத்தனை பேரும் வடித்த கண்ணீர், எத்தனை வெள்ளமாகப் பாய்ந்ததோ! 

சிறையில் வ. உ. சி. பட்ட கொடுமைகள் சொல்லி மாளாது. சிறை அதிகாரிகளின் அராஜகம்; அடிக்கடித் தனிச் சிறைக்குள் தள்ளப்பட்டார். இவர் நடத்தப்படும் கொடுமையைப் பிற கைதிகளாலேயே தாங்க முடியவில்லை. அவர்கள் கிளர்ந்தனர். பிறரைத் தூண்டியதாகக் கூறி, மேலும் துன்புறுத்தல்கள். கோவைச் சிறையில், கல்லுடைக்கச் செய்யப்பட்டார். கைகள் ரணமாயின. கைகள் இல்லாமல், உடலால் இழுக்கும் வகையில், எண்ணெய்ச் செக்கினை இழுக்க வைக்கப்பட்டார். மாடுகள் செய்வதை மனிதர் மீது சுமத்தினர். 

மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும் நூலோர்கள் செக்கடியில் நோவதுவும் காண்கிலையோ? 
-என்று நல்லோர் யாவரும் ஓலமிட்டனர். பழி வாங்கல் படலத்தின் ஒரு பகுதியாக, கண்ணனூர் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். 

கொடுமைகள் தாளாமல்தான், தம்மை அந்தமானுக்கே அனுப்பும்படி மனு அனுப்பினார். தமிழ்நாட்டுச் சிறைகளைக் காட்டிலும், அந்தமான் நலம் என்று இப்பெருமகனாரின் திருவாட்டி மீனாட்சி அம்மையாரும், பிரிட்டிஷ் மன்னருக்கே மனு அனுப்பினார். 

சிறைவாசத்தில், அடிக்கடி தண்டனைக் காலம் கூடியது. சிறைக் கண்காணிப்பாளர் பின்னால் வந்து நின்றதைக் கவனிக்கவில்லை; அதனால், எழும்பவில்லை; அதற்குக் கூடுதல் 3 நாட்கள். கேழ்வரகுக் கூழில் புழு நெளிந்ததால், வேண்டாமென்று மறுத்தார்; அதற்குக் கூடுதல் 9 நாட்கள். 

இவற்றையெல்லாம் விஞ்சும் வகையில், இன்னொரு கொடுமையும் நடந்தது. வ. உ. சி. சிறையிலிருந்தபோது, சுதேசிக் கப்பல் கம்பெனி தடுமாறியது. நிதிச் சிக்கலும், நிர்வாகச் சிக்கலும் சேர்ந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com